ஒரு புறம் வேடன்: மறுபுறம் நாகம் இரண்டுக்கும் நடுவே அழகிய சைவ சமயம்
Share
முல்லைத்தீவு குருந்தூர்மலையில் நேற்றைய தினம் புத்தர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
நீண்ட நெடுங்காலமாக ஆதிசிவ வழிபாடு நடக்கின்ற குருந்தூர்மலையில் அடாவடித்தனமாக புத்தர்சிலையைப் பிரதிஷ்டை செய்தது எந்தவகையிலும் நியாயமாகாது.
சிவத்தலம் இருக்கின்ற இடங்களைத் தமதாக்குகின்ற வில்லங்கத்தனத்தில் சிங்கள ஆட்சியாளர்களும் பெளத்த துறவிகளும் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்வரிசையில் குருந்தூர்மலையில் புத்தர்சிலை நேற்றைய தினம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் காலங்களில் நெடுங்கேணி வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம், உருத்திரபுரம் சிவன் ஆலயம் எனப் படிப்படியாக பெளத்த விகாரைகள் ஆக்கிரமிக்கப் போகின்றன என்பதுதான் உண்மை.
இவ்வாறாக இலங்கையின் ஆதிச்சமயமாகிய சைவசமயத்தின் தொன்மைச் சான்றுகளை வேரறுத்து இலங்கையின் ஆதிச்சமயம் பெளத்தம் என்பதை நிரூபிக்க பெளத்த மதவாதிகள் ஒருபக்கம் கடும் பிரயத்தனம் செய்து கொண்டிருக்க,
மறுபக்கத்தில் சில சபைகள் சைவ சமயத்தவர்களை மதம் மாற்றுவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
அத்தகைய அமைப்புகளுக்கு அரச மட் டத்தில் மிகப்பெரும் செல்வாக்கு உண்டென்பதும் இங்கு நினைவுபடுத்தற்குரியது.
என்ன செய்வது ஆளுந்தரப்போடு சேர்ந்து பயணிக்கின்ற தமிழ் அரசியல்வாதிகளால் இதுபற்றி வாய் திறக்கவே முடிவதில்லை.
அவர்களைப் பொறுத்தவரை இதுபோன்ற விடயங்களில் மெளனமாக இருப்பதுதான் தங்களின் அரசியலுக்கு ஆரோக்கியம் என்று அறிந்து வைத்துள்ளனர்.
ஆகையால் அவர்கள் குருந்தூர்மலை பற்றியோ வெடுக்குநாரி ஆதிலிங்கேஸ்வரர் பற்றியோ வாய்திறக்கப் போவதில்லை.
சரி பரவாயில்லை என்றால், அரசாங்கத்துடன் மிக நெருக்கமாக இருந்து அவர்களுக்கு வேதம் ஓதி ஆசிவதிக்கின்றவர்கள் ஏதேனும் கதைப்பார்களா? என்றால் இல்லை.
ஆக, இலங்கை வேந்தன் இராவணேஸ்வரன் அணிந்த திருநீற்றுக் கலாசாரமும் சிவவழிபாட்டு மரபும் இந்த மண்ணை விட்டு விடைபெறப் போகின்றன.
இதற்குக் கட்டியம் கூறுவதுபோல சர்வதேசப் பாடசாலைகள் சைவ சமயத்தையும் தமிழையும் ஓரங்கட்டி ஈழத் தமிழினத்தை மேலைத்தேய நாகரிகத்துக்குள் வலுக்கட்டாயமாக இறக்கிவிட முற்பட்டுள்ளன.
ஆம், சைவ சமயத்தை அழித்து அதனூடு தமிழ் மொழியை அழிக்கின்ற பெரு முயற்சி நடப்பதைக்கூட எம்மவர்கள் உணராமல் இருக்கின்றபோது, நாம் என்ன செய்ய முடியும்.
ஒருபுறம் வேடன். மறுபுறம் நாகம். இரண்டுக்கும் நடுவே இலங்கையில் சைவ சமயம் காப்பாற்றுவார் யாருமின்றி விக்கித்துக் கிடக்கின்றது.