இறைவனுக்கு நிகரான மருத்துவப் பணியை..
Share
வைத்தியநாதன் என்று சிவப்பரம்பொருளுக்குச் சூட்டப்பட்ட நாமம்.
நோய் தீர்க்க வல்ல ஆடவல்லானை வைத்தியநாதன் என்று போற்றிய தமிழ்ச் சமூகம் நோய் தீர்க்கும் மருத்துவர்களை வைத்தியர்கள் என்று அழைத்து இறைவனுக்கு ஒப்பான வர்கள் எனப் போற்றியது.
இந்தப் போற்றுதல் வேறு எந்த மொழியிலும் இனத்திலும் காணுதல் அரிது.
இப்போது உலகை உலுக்கி நிற்கும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மனித சமூகத்தை காப்பாற்றுவதில் மருத்துவர்களும் துணை மருத்துவ சேவையாளர்களும் இதர பணியாளர்களும் ஆற்றும் பணி கண்டு நெகிழாதார் இல்லை.
கொரோனாத் தொற்றினால் உலகில் உயிரிழந்த வைத்தியர்களின் எண்ணிக்கையைக் கேட்கும் போதெல்லாம் இதயம் கருகிப்போகும். அந்தளவுக்கு கொரோனா தொற்றில் இருந்து மக்களைக் காப்பாற்ற முற்பட்ட வைத்தியர்கள் தங்கள் உயிர்களைத் தியாகம் செய்துள்ளனர்.
ஆகவே ஒட்டுமொத்த உலகமும் ஒரு கணம் எழுந்து நின்று கொரோனாத் தொற்றினால் உயிரிழந்த மருத்துவர்களுக்காகவும் துணை மருத்துவ சேவையாளர்களுக்காகவும் இதர பணியாளர்களுக்காகவும் அஞ்சலி செலுத்த வேண்டும். இது இந்த வையகத்தின் தார்மீகக் கடமை.
இவை ஒருபுறமிருக்க, எங்கள் வடபுலத்தில் மருத்துவர்கள் துணை மருத்துவ சேவை யாளர்களும் அதனோடு இணைந்து பணியாற்றுகின்றவர்களும் ஆற்றுகின்ற சேவைக்கு தமிழ்ச் சமூகம் என்றும் தலை வணங்கும் என்பதில் மாற்றுக் கருத்திற்கிடமில்லை.
அதேநேரம் மருத்துவர்களுக்கிடையே புரிந்துணர்வு இல்லை என்றும் அவர்களுக் கிடையில் கடுமையான முரண்பாட்டுப் போட்டிகள் இருப்பதாகவும் இதனால் மருத்துவ சமூகம் மனஉளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்த வண்ணமுள்ளன.
இதுதவிர வடபுலத்தைச் சேர்ந்த ஒரு சில மருத்துவர்கள் ஆட்சிப் பீடத்தின் செல்வாக்கு மிகுந்தவர்களாக இருக்கின்றனர் எனவும் இவர்கள் தமக்கு உடன்பாடில்லாத மருத்துவ சமூகத்தினரைப் பழிவாங்கல் செய்கின்றனர் என்பதான குற்றச்சாட்டுக்களும் பரவலாகப் பேசப்படுகின்றன.
எனவே கடவுளுக்கு நிகராகத் தமிழ் மக்கள் போற்றுகின்ற எம் மருத்துவர்கள் எக்காலத்திலும் தங்கள் உயர் பண்பாட்டைப் பேண வேண்டும் என்பதே நம் அனைவரதும் வேணவா.
ஆம், உயிர் காக்கும் உன்னதப் பணியை ஆற்றுகின்ற நீங்கள் இறைவனின் நேரடிப் பிரதிநிதிகள். இறைவனிடம் சின்னத்தனங்கள் இருந்தால் அது இறை தத்துவத்துக்கு இழுக்கு என்பதை உங்களில் எவரும் நிராகரிக்க மாட்டீர்கள் என்பது எம் நிறுதிட்டமான நம்பிக்கை.