வியாசர் பதில்கள்
Share
1) உலகம் எதற்குள் அடக்கம் வியாசரே?
மகாலட்சுமி-உரும்பிராய்
ஒரு நிறுவனத்தின் முதலாளியும் சக ஊழியர்கள் சிலரும் அந்த நிறுவன வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது வாகனத்தின் சாரதி ஒரு தரமான நகைச்சுவையைச் சொல்கிறார். அவரின் நகைச் சுவைக்கு யாரும் சிரிக்கவில்லை.
அடுத்ததாக அந்த நிறுவன முதலாளி ஒரு மட்டமான சிரிப்பே வராத நகைச்சுவையைக் கூறுகிறார்.
காரில் இருந்த ஊழியர்கள் அனைவரும் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தனர்.
சிரிப்பைக் கூடப் பணம் தான் தீர்மானிக்கிறது.
2) அதிகார வர்க்கம் தமது அதிகாரத்தைக் காட்டிக் கொண்டுதானே இருக்கிறது வியாசரே?
சங்கீத்-சாவகச்சேரி
ஒரு தலைவன் மாறிவிட்டான் என்பதற்காக அனைத்து அதிகார வர்க்கத்தினரும் மாறி விட்டனர் என்று பொருளில்லையே.
மகிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷக்களுக்குக் கீழ் இருந்து அவர்களின் சொல்லை வேதவாக்காய்க் காத்தவர்கள் மாறுவார்கள் என்று நினைக்கிறீர்களா?
நேற்று முன்தினம் வலி வடக்கில் தமது காணிகளை விடுவிக்கக் கோரியவர்களிடம் உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் தறப்பாள் கட்டக் கூட அனுமதி இல்லை என்றிருக்கிறார் ஒரு அதிகாரி.
அட கடவுளே! அது எங்கள் நிலம். அதை நீங்கள் அபகரித்து வைத்துக் கொண்டு எங்களையே மிரட்டுகிறீர்கள் எனின் உங்களின் மனங்களில் மாற்றமுண்டா? வன்மமுண்டா?
3) தற்போதைய இளம் சமூகம் ஆளுக்கொரு தொலைபேசி, மோட்டார் சைக்கிள் என்று சுற்றிக் கொண்டு திரிகிறதே?
ஜெ.ஜெ-யாழ்ப்பாணம்
என்ன சொல்வது காலப் பிறழ்வு எம் இனத்தை சிதைத்துக் கொண்டிருக்கிறது.
மோட்டார் சைக்கிள் வாங்கித்தர மாமாவோ, அத்தையோ வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்பினால் அவனுக்கு அதன் அருமை புரியவா போகிறது.
இப்போது நடக்கும் விபத்துக்களைப் பாருங்கள்.
ஒன்றில் அடிபட்டவனோ அல்லது அடித்தவனோ இரண்டில் ஒன்று வெளிநாட்டுக் காசில் மோட்டார் சைக்கிள் வாங்கியதாகத் தான் இருக்கும்.
4) இனப்படுகொலை தொடர்பில் தமிழக அரசு இரக்கம் காட்டினாலும் மத்திய அரசு இறங்கி வருமா?
சுதன்-குப்பிழான்
ஈழத்தில் இறுதி யுத்தம் நடந்த போது காங்கிரஸ் ஆட்சியிருந்தது.
அப்போது விடுதலைப் புலிகளைப் பழிதீர்க்க முற்பட்ட சோனியா காந்தி ஈழத்தமிழினத்தின் அழிவைக் கண்டு ரசித்தார்.
மகிந்தவுக்கு ஆயுதங்களை அள்ளிக் கொடுத்து மகிழ்ந்து சிரித்தார்.
அதன்பின் வந்த மோடி அரசேனும் தமிழினத்துக்குத் தீர்வைப் பெற்றுத்தரும் என நம்பினோம்.
அந்த நம்பிக்கையும் அவநம்பிக்கையாகிவிட்டது.
இலங்கையைப் பொறுத்தவரை ஆட்சி மாற்றங்கள் ஒரு நாளும் இன முரண்பாட்டைத் தீர்க்காது என்பதை முதலில் இந்தியா புரிந்து கொள்ள வேண்டும்.
5) கோயில் பணத்தைத் திருடுபவர்களை என்ன செய்யலாம் வியாசரே?
ரமணி-கொடிகாமம்
என்ன செய்வது. ஆலயம் எனும் பெயரில் பெரும் கொள்ளையடிப்புக்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.
எமக்கு உண்டியல் உடைத்த திருடனைத் தான் தெரியும்.
ஆயினும் சிலர் ஆலயம் எனும் போர்வையில் நிலத்தை அபகரிக்கின்றனர்.
அங்கிருக்கும் பணத்தை அபகரிக்கின்றனர்.ஒன்று மட்டும் நிச்சயம்.
பூனை கண்ணை மூடிப் பால் குடிப்பது போல இறைவனை கல்லென்று நினைத்து பலர் செய்யும் செயல்களின் முடிவு மிகக் கொடுமையானதாய் இருக்கும்.
அவர்களின் சந்ததியே அழிந்து போகும் என்பது சர்வ நிச்சயம்.
6) முள்ளிவாய்க்கால் கஞ்சி வீதிகளில் வைத்து வழங்கப்படுகிறதே. குடித்திருக்கிறீரா வியாசரே?
தாவீது-வதிரி
எம் இனம் பட்ட அந்தக் கொடூர வலியை மே 18 இல் ஆவது உணர்ந்து கொள்வோமாக.
ஒருபக்கம் குண்டு மழை, மறுபக்கம் பசி பட்டினியயன எம்மினம் பட்ட கொடூர வேதனை இனி எந்த இனத்துக்கும் வந்து விடக் கூடாது.
ஈழத்தமிழினம் பட்ட வலிகளை புத்தகங்களில் எழுதி வைப்பதிலும் பார்க்க நேரடியாக எம் இளம் சமூகம் உணரும் வகையில் மேற்கொண்டால் அது அவர்களிடம் இலகுவில் சென்றடையும்.
7) நல்லது செய்வதற்கு அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்பது உண்மையா வியாசரே?
அரவிந்-மந்துவில்
அண்மையில் சமூக வலைத்தளத்தில் பதிவொன்றைப் பார்த்தேன்.
யாழ்ப்பாணம் பஸ்தரிப்பிடத்தில் அநாதரவாக இருக்கும் நான்கு நாய்க்குட்டிகளைத் தத்தெடுக்க விரும்புவர்கள் என்னிடம் தொடர்பு கொள்ளுங்கள் எனக் குறித்த நாய்க்குட்டிகளின் படங்களையும் இணைத்து பதிவிட்டிருந்தார் ஒருவர்.
என்ன அதிசயம் அவர் பதிவிட்டு இரண்டு மணி நேரத்தில் அந்த நான்கு நாய்க்குட்டிகளுக்கும் அன்பான உரிமையாளரும் அழகான வீடும் கிடைத்து விட்டது.
அனைவருக்கும் நன்றி எனப் பதிவிட்டிருந்தார்.
இப்போது சொல்லுங்கள். நல்லது செய்ய எம்மிடம் அதிகாரம் இருக்க வேண்டுமா?
8) தமிழக முதல்வர் விஜயை இன்னும் வசை பாடுகிறார்களே ஏன் வியாசரே?
தமிழ்-யாழ்ப்பாணம்
எல்லாம் ஒரு வித பொறாமை தான். அவர் கட்சி ஆரம்பித்து இரண்டு வருடம். எந்த அரசியல் அனுபவமும் இல்லை. தேர்தல் பிரசங்கங்களைக் கூட முழுமையாகச் செய்யவில்லை என்பதெல்லாம் எவ்வளவு அபத்தமானது.
சினிமா என்பதைத் தாண்டி விஜய் தமிழக மக்களால் நம்பப்படுகிறார்.
சினிமா உச்சம் எனின் கமலினால் ஏன் ஒரு வெற்றியைக் கூடப் பெற முடியவில்லை.
ஆக, விஜய் மீதுள்ள பொறாமை, அவர் காங்கிரசுடன் இணைந்தமை என்பன அவரை வசைபாட வைத்துள்ளது அவ்வளவே.


