தரிசனம்
Share
இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனங்களும் 29
தமிழ் இனம்-தமிழ் மொழி என்பதை இலக்காகக் கொண்டு நம் விடுதலைப் போராட்டம் இடம்பெற்றாலும் சிங்களவர்கள் சிங்கள மொழி என்பதை விட, பெளத்தத்திற்கே முன்னுரிமை கொடுத்தனர்.
அதனாலேயே இலங்கையை அவர்கள் பெளத்த சிங்கள நாடு என்கிறார்கள்.
உண்மையில் சிங்கள மொழிக்கே அவர்கள் முன்னுரிமை கொடுத்திருப்பார்களாயின், சிங்கள பெளத்த நாடு என்று தான் கூறியிருக்க வேண்டும். ஆக, மொழி என்பது அவர்களுக்கு இரண்டாம் பட்சமே.
ஆம், சிங்கள மொழியை அவர்கள் தங்களின் உயிராக மதித்திருந்தால், கடந்தகால இனக்கலவரங்களின் போது, சிங்களம் பேசவல்ல தமிழர்களை அவர்கள் பாதுகாத்திருப்பார்கள். ஆனால் அது நடக்க வில்லை.
உண்மையில் தென் பகுதியில் வாழ்ந்த தமிழ் மக்களில் 99 சதவீதமானவர்கள் சிங்கள மொழியைச் சரளமாகப் பேசவல்லவர்கள். அப்படியிருந்தும் அதனை பேரினவாதிகள் இம்மியும் பொருட்படுத்தவில்லை.
மாறாக, சிங்களப் பகுதிகளில் வாழ்ந்த தமிழர்கள் பெளத்த மதத்தைப் பின்பற்றுகின்றவர்களாக இருந்திருந்தால், நிச்சயம் அவர்களை பெளத்தத்தின் பேரால் சிங்களவர்கள் தீண்டாமல் தவிர்த்திருப்பர்.
அதேவேளை தமிழ் பெளத்தர்கள் என்ற வகையினர் இருந்திருக்கும் பட்சத்தில், பெளத்த பிக்குகளாக தமிழர்களும் இருந்திருப்பர்.
ஆம், ஒரு காலத்தில் தமிழ்ப் பெளத்தர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் நம் மத்தியில் உண்டு. முல்லைத்தீவில் உள்ள சில பெளத்த அடையாளங்கள் மற்றும் கந்தரோடையில் உள்ள பெளத்த எச்சங்கள் தமிழ்ப் பெளத்தர்கள் இருந்ததற்கான சான்றாகும்.
ஆயினும் நம் மத்தியில் தமிழ்ப் பெளத்தம் இல்லாது போனதன் காரணங்கள் பற்றிய ஆய்வுகள் இன்னமும் பேசாப்பொருளாகவே உள்ளன.
ஆம், ஈழத்தமிழர்களில் பெளத்தத்தைப் பின்பற்றியவர்களும் இருந்தனர் என்பதைக் கூறுவதற்கு தமிழர்களாகிய நம் தயாரில்லை. சிங்களவர்கள் நம் இனத்திற்குச் செய்த கொடுமைகள் காரணமாகவும் தமிழ் பெளத்தர்கள் இருந்தார்கள் என்று கூறுவதைச் சாட்டாக வைத்து, பெளத்த சிங்களவர்கள் நம் மண்ணை ஆக்கிரமித்து விடுவார்கள் என்ற பயத்தாலும் ஓர் உண்மை உறங்கிக் கொண்டிருக்கிறது.
ஆனால் இங்கு ஓர் விடயத்தை நாம் கூறியாக வேண்டும்.
அதாவது தமிழர்களில் பெளத்தர்களும் இருந்தார்கள் என்ற உண்மையை பெளத்த சிங்களவர்கள் அறிந்திருந்தாலும் அதனை அவர்கள் ஒருபோதும் கூறவோ, வெளிப்படுத்தவோ இல்லை.
தமிழர்களில் ஒரு பகுதியினர் பெளத்த மதத்தைப் பின்பற்றினர் எனக் கூறும் போது, தமிழர் தாயகத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கக்கூடிய பெளத்த எச்சங்கள் தமிழ்ப் பெளத்தர்களுடையதென்பதாகிவிடும்.
எனவே தமிழ்ப் பெளத்தர்கள் இருந்தார்கள் என்று கூறுவதைத் தவிர்ப்பதன் மூலம் வடக்குக் கிழக்கில் உள்ள பெளத்த அடையாளங்களை தங்களுக்குரியதாக ஆக்குவதில் பெளத்த பேரினவாதம் மிகவும் உறுதியாக உள்ளது.
உண்மை. இஸ்லாமியர்கள் மதம் மாற்றும் போது, கிறிஸ்தவர்கள் மதமாற்ற சபைகளை இங்கு இயக்கும் போது, பெளத்த சிங்களவர்கள் எதற்காக தமிழர்களை பெளத்த மதத்திற்கு மாற்றவில்லை என்ற கேள்வி எழுவது நியாயமானதே.
இங்குதான் இலங்கை பெளத்த நாடு எனக் கூறு கின்ற சிங்களவர்கள் பெளத்தம் சிங்களவர்களுடையதாக இருக்க வேண்டும் என்பதிலும் உறுதியாக உள்ளனர்.
இதனாலேயே தமிழர்களை அவர்கள் பெளத்த மதத்திற்கு மாற்றம் செய்யாமல் தவிர்த்தனர். எதுவாயினும் இந்து மதப் பின்னணியைக் கொண்ட பெளத்தம் உலக நாடுகள் சிலவற்றில் பரவியிருந்தாலும் உலக நாடுகளில் இருக்கக்கூடிய பெளத்தர்களின் தாய்மொழி சிங்களம் அல்ல என்பது இங்கு ஈண்டு கவனிக்கத்தக் கது.
எதுவாயினும் இந்த நாட்டின் ஆட்சி அதிகாரத்தில் இருக்கக்கூடிய பெளத்த சிங்களவர்கள் மதமாற்ற நடவடிக்கை யில் ஈடுபட்டிருந்தால், தென்பகுதியில் வாழும் கணிசமான தமிழர்கள் பெளத்த மதத்தைத் தழுவியிருப்பார்கள்.
ஆனால் அவர்கள் மத மாற்றத்தைச் செய்யாததன் காரணமாக நம் சைவத் தமிழர் தம் தாய்ச் சமயத்தோடு இருக்கக்கூடிய வாய்ப்பு ஏற்பட்ட தெனலாம்.
தொடரும்…


