தரிசனம்
Share
இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனமும் 23
திருக்கோணேச்சரம் ஆலயத்தின் புனரமைப்புப் பணிகளுக்கு தொல்லியல் திணைக்களம் தடையாக உள்ளதென்ற கருத்தை இவ்விடத்தில் எழுதிய பேனா மை காய்வதற்கு முன்னதாக, முல்லைத்தீவு குருந்தூர் மலையில் சிவனாலயம் இருந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என பெளத்தசாசன அமைச்சுக்கு தொல்லியல் திணைக்களம் தெரிவித்துள்ளது எனும் செய்தி அறியப்படுகிறது.
கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளரினால், குருந்தூர் ஆதிசிவன் ஐயனார் கோவில் புனரமைப்புத் தொடர்பாக அனுப்பப்பட்ட கடிதத்திற்கே தொல்லியல் திணைக்களம் மேற்குறித்த பதிலை அனுப்பிவைத்துள்ளதுடன், அதன் பிரதி தேசிய மரபுரிமைகள் பிரிவின் ஊடாக, புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளருக்கு, தொல்லியல் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் ஆர்.ஏ.செனரத் விக்கிரம சிங்கவினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில்,
குருந்தூர் விகாரை அமைந்துள்ள நிலமானது, ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க பெளத்த சான்றுகளைக் கொண்ட ஓர் இடமாகும். அங்கு இந்துக் கோவில் இருந்ததற்கான சான்றுகள் எதுவும் வெளிப்படவில்லை.
மேலும் 1940 ஆம் ஆண்டில் 09ஆம் இலக்க தொல்பொருட்கள் கட்டளைச் சட்டத்தின் 33ஆம் பிரிவின் பிரகாரம் தொல்பொருள் நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்ட ஒரு நிலப்பரப்பிற்குள் ஏதேனும் ஒரு புதிய கட்டடத்தையோ அல்லது நிர்மாணத்தையோ மேற்கொள்வது சட்ட விரோதமானது என்பதுடன், அது 34 ஆம் பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், குருந்தூர் மலையில் உள்ள பெளத்த மதத்தலத்துக்குள் ஓர் இந்துக் கோவிலை நிர்மாணிப்பதன் மூலம் ஏதேனும் ஒரு தரப்பினரால் புனிதமாகவும் கெளரவத்துடனும் மதிக்கப்படும் ஒரு குழுவினரைத்தூண்டும் வகையில் செயற்படுவது மேற்கூறிய கட்டளைச் சட்டத்தின் 31(ஆ) பிரிவின் கீழ் ஒரு குற்றமாகும் என்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதற்கமைய, மேற்குறிப்பிட்ட விடயங்களின் அடிப்படையில் இவ்விடத்தில் ஓர் இந்துக்கோவிலை நிர்மாணிப்பதற்கோ அல்லது புனரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கோ அனுமதி வழங்க முடியாது என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குருந்தூர் மலை ஆதி சிவன் ஐயனார் ஆலயம் காலத்தால் முற்பட்ட தலம். அங்கு காலங் காலமாக தமிழ் மக்கள் பொங்கல் வழிபாடு செய்து வருகின்றனர்.
இது அவர்களுடைய மரபாயிற்று. அதேநேரம் குருந்தூர் மலை ஆதி சிவன் ஆலய வழிபாட்டில் எந்தத் தடையும் எப்போதும் இருந்ததில்லை.
ஆம், யுத்தம் முடிந்த பின்னர் 2018 ஆம் ஆண்டு இராணுவத்தின் துணையுடன் குருந்தூர் மலைக்கு வந்த புத்த பிக்கு ஒருவர், அங்கு புத்தர் சிலையை வைக்க முற்பட்ட போது, அதற்கு மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
இதன் காரணமாக இவ் விவகாரம் நீதிமன்றப்படி ஏறுகிறது.
இப்போது நீதிமன்றில் அந்த வழக்கு நிலுவையில் இருக்கின்றதாயினும், குருந்தூர் மலையில் ஆதிசிவன் வழிபாட்டை மக்கள் நடத்துவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.
நிலைமை இதுவாக இருக்கையில், குருந்தூர் மலையில் சிவன் ஆலயமோ, அன்றி இந்து ஆலயங்களோ இருந்ததற்கான சான்றுகள் எதுவும் இல்லையென தொல்லியல் திணைக்களம் கூறுவது அதன் இந்து சமய எதிர்ப்பை அப்பட்டமாக வெளிப்படுத்திநிற்கிறது.
ஆக, ஒரு காலத்தில் அந்நியர்களால் எங்கள் இந்து ஆலயங்கள் தரைமட்டமாக் கப்பட்டன.அவ்வாறு இந்து ஆலயங்களை தரைமட்ட மாக்கிய பின்னர், அதே இடத்தில் தேவாலயங்களை அமைத்த குடியேற்றவாத நாடுகள்; நம் இந்து சமயத்திற்குச் செய்த கொடுமையின் விளைவை இன்னமும் ஈழத்து சைவத் தமிழ் மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்.
அதாவது, குடியேற்றவாத நாடுகள் இலங்கைக்கு சுதந்திரத்தை வழங்கிவிட்டு வெளியேறிவிட்டாலும் அன்று மதம் மாறிய நம்மவர்கள், இன்று வரை தங்கள் தாய்ச் சமயமாகிய- தங்கள் மூதாதையர்கள் காலாகாலமாக தங்கள் உயிராகவும் உடலாகவும் கருதிய சைவ சமயத்தை எதிர்ப்பதை தீவிரம் காட்டுவது தான் மிகப் பெரிய துரதிஷ்டம்.
உண்மை. இலங்கை அந்நியர்களின் வசமாகிய போது மதமாற்றம் என்பது சிங்கள மக்களிடையேயும் நடந்தாகியது.
பெளத்த சிங்களவர்களில் ஒரு சிறு பகுதியினர் கிறிஸ்தவ சமயத்திற்கு மதமாறினர். அவ்வாறானதொரு நிலைமைகளை கால சூழல்கள் ஏற்படுத்திற்று.
ஆம், உயர் கல்வி கற்பதற்கும் அரச நியமனங்களைப் பெறுவதற்கும் அத்தகையதொரு தேவை ஏற்பட்டது எனலாம்.
தொடரும்…


