Type to search

Articles தரிசனம்

தரிசனம்

Share

இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனமும் 19

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தை புனரமைத்துத் தருமாறு சிவபூமி அறக்கட்டளையின் ஸ்தாபகர் கலாநிதி ஆறு.திருமுருகன் இந்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஊடாக விடுத்த கோரிக்கையை இந்திய மத்திய அரசு ஏற்றுக்கொண்டது.

ஆலய நிர்மாணம் தொடர்பான விபரங்களை ஆலய பரிபாலன சபையிடம் இலங்கைக்கான இந்தியத் தூதரகம் கேட்டிருந்தது.

இந்நிலையில் இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கிழக்கு மாகாணத்திற்குச் செல்கின்ற போது, திருக் கோணேஸ்வரர் ஆலயத்திற்கும் செல்வதற்கான ஏற்பாடு இந்திய வெளியுறவுத்துறையால் செய்யப் பட்டிருந்ததுடன் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைக்கான நிகழ்ச்சி நிரலிலும் சேர்க்கப்பட்டது.

இருந்தும் திருக்கோணேஸ்வரர் ஆலயத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடி செல்வது பாதுகாப்பானதல்ல என இலங்கை பாதுகாப்புத்துறை தனது அறிக்கையில் தெரிவிக்க, திருக்கோணேஸ்வரர் ஆலயத்திற்கான இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விஜயம் நின்று போனது.

உண்மையில் பிரதமர் மோடி திருக்கோணேஸ்வரர் ஆலயத்திற்குச் சென்றிரு ப்பாராயின், திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் புனரமைப்பை இந்திய மத்திய அரசு முழுமையாகப் பொறுப்பெடுத்து அதனை நிறைவேற்றி இருக்கும். எனினும் அது கைகூடாமல் போயிற்று.

இங்கு திருக்கோணேஸ்வரர் ஆலய பரிபாலன சபையின் நடவடிக்கைகளில் ஏற்பட்ட தாமதங்களும் அந்த ஆலயத்திற்கான புனரமைப்பைக் காலம் கடத்தியது என்பதையும் இவ்விடத்தில் கூறித்தானாக வேண்டும்.

ஆம், மன்னார் மாதோட்ட நன்நகரில் அமைந்த கெளரி அம்பாள் உடனுறை திருக்கேதீச்சரநாதன் ஆலயத்தை இந்திய மத்திய அரசு புனரமைத்ததன் காரணமாக, இன்று அந்த ஆலயம் எழுச்சி பெற்றுள்ளது.

இதேபோன்று திருகோணமலையில் இருக்கக்கூடிய மாதுமை அம்பாள் உடனுறை திருக்கோணேஸ்வரர் ஆலயத்தையும் இந்திய மத்திய அரசு புனரமைப்புச் செய்து தருவதற்கான சந்தர்ப்பங்களும் வாய்ப்புகளும் நிறையவே இருந்தன.

ஆயினும் உடனுக்குடன் காரியங்களை ஆற்றுவதில் நம் இனத்தில் இருக்கக்கூடிய பலவீனங்களும் பின்னடைவுகளும் ஆகவேண்டியவற்றை இழக்க வேண்டியதாக ஆக்கி விடுகின்றன என்ற உண்மையை இவ்விடத்தில் நாம் கூறித்தானாக வேண்டும்.

இந்திய மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றம்

காலம் மாறிக் கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு கணப் பொழுதும் மாற்றங்கள் நடந்தாகின்றன. புதுப்புதுச் சட்டங்கள், நிபந்தனைகள் உருவாகின்றன.

அதுபோல வெளிநாடுகளின் கொள்கை சார்ந்தும் மாற்றங்கள் நடந்தாகின்றன. அந்த வகையில் அநுரகுமார திஸாநாயக்க இந்த நாட்டின் ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர், இலங்கை தொடர்பில் இந்திய மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

ஆம், கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது இந்தியா சஜித் பிறேமதாசாவை மறைமுகமாக ஆதரித்திருந்தது.

எனினும் சஜித்தின் வெற்றி சாத்தியமற்றுப் போக, அநுரகுமார திஸாநாயக்க இலங் கையின் ஜனாதிபதியானார்.

அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாகப் பதவியேற்றதும் இந்தியா அவரை தனது நாட்டிற்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்தது.

அவ்வளவு தான். ஜனாதிபதியாகப் பதவியேற்று, தனது முதலாவது வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவுக்கு ஜனாதிபதி அநுர செல்கிறார்.

இந்திய விமான நிலையத்தில் இருந்து தடல்புடலான வரவேற்பை இந்திய மத்திய அரசு அவருக்கு வழங்கியது.

பிரதமர் மோடி, ஜனாதிபதி திரெளபதி மும்மூர் உட்பட மந்திரி பிரதானிகள் கூட்டாக நின்று; செங்கம்பள வரவேற்பை ஜனாதிபதி அநுரவுக்கு வழங்க, அவர் அடைந்த புளகாங்கிதம், பிரதமர் மோடி எங்கள் நாட்டிற்கு வரவேண் டும் என்பதாகப் பரிணமித்தது.

பிறகென்ன பிரதமர் மோடி இலங்கைக்கு வருகை தருகிறார்.

தனது இந்தியப் பயணத்தின் போது இந்தியா தனக்கு வழ ங்கிய அமோக வரவேற்பால் அகமகிழ்ந்த ஜனாதிபதி அநுர; பிரதமர் மோடிக்கு மித்ர விபூ­ண் எனும் இலங்கையின் உயரிய விருதை வழங்கி அவரை அன்பால் ஆட்கொண்டார்.

இங்குதான் பிரதமர் மோடி நெகிழ்ந்து போகிறார். அதன் விளைவாக இலங்கை தொடர்பான இந்திய மத்திய அரசின் நிலைப்பாட்டில் நிறைந்த மாற்றங்கள் ஏற்பட்டன.

ஆம், கடந்த 02 ஆம் திகதி இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள முக்கியஸ்தர்களை அவர் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் வைத்து சந்தித்தார்.

இச் சந்திப்பில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இதன்போது கலாநிதி ஆறு.திருமுருகன் அவர்கள் இந்தியத் தூதுவரிடம்; திருகோணேஸ்வரர் ஆலயத்தின் புனரமைப்புத் தொடர்பாக ஏலவே இந்தியாவிடம் விடுத்த கோரிக் கையை மீள வலியுறுத்தினார்.

இதற்குப் பதிலளித்த இந்தியத் தூதுவர்; திருக் கோணேஸ்வரர் ஆலய புனரமைப்பை மேற்கொள்வதற்கு இந்தியா தயங்கவில்லை.

ஆனால் அந்தக் கோரிக்கை இலங்கை அரசாங்கத்தினூடாக இந்தியாவுக்குக் கிடைப்பதற்கான வழி முறைகளைச் செய்யுங்கள் எனக் கூறினார் என்பதற்குள் இந்தியாவின் மாற்றம் புரிகிறதல்லவா?

தொடரும்…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link