தரிசனம்
Share
இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனமும் 7
தமிழையும் சைவத்தையும் பேணிப்பாதுகாக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பிற சமயங்களின் இருப்பை எதிர்க்க நினைத்திலர்.
இதற்குக் காரணமும் உண்டு. அதாவது உலகில் ஒரே ஒரு சமயம் மட்டுமே இருக்குமாயின், அந்தச் சமயம் அழிந்து பல ஆயிரம் ஆண்டுகளாயிருக்கும்.
ஆக, உலகின்கண் ஏகப்பட்ட சமயங்கள் இருப்பதனாலேயே எல்லாச் சமயங்களும் உத்வேகம் கொண்டுள்ளன.
ஆம், எனது சமயம் -எனது வழிபாட்டு இடம் – எனது முழுமுதற் கடவுள் – எனது சமயச் சடங்குகள் என்றவாறு சமய நெறி முறைகள் இன்று வரை நின்று நிலைத்து நிற்பத ற்குக் காரணம் பல சமயங்கள் இருப்பதேயாம்.
உண்மை. பல்வகை சமயங்களும் சமயக் கோட்பாடுகளும் இருப்பதன் காரணமாக ‘எனது’, ‘எமது’ என உரிமை கொண்டாடுகின்ற நிலைமை சமயங்களுக்கு இருப்பதனால், அதனூடு சமயப்பண்பாடுகளும் நெறிமுறைகளும் பின்பற்ற ப்படலாயின.
இந்த அடிப்படையில் நம் தமிழர் தேசத்தில் பிற சமயங்களின் ஊடாட்டம் சைவ சமயத்தை வளர்த்தெடுக்கும் என ஆறுமுக நாவலர் கருதியிருப்பதற்கு இடமுண்டு.
இதுதவிர, எல்லாச் சமயங்களையும் மதிக்கின்ற-பிற மதக் கடவுள்களையும் வணங்குகின்ற சமயம் ஒன்று இந்த உலகில் உண்டெனில், அஃது சைவ சமயமாக மட்டுமே இருக்க முடியும்.
அதாவது, தனக்கு இருக்கக்கூடிய அதே உரிமையும் மதிப்பும் ஏனைய சமயங்களுக்கும் இருக்க வேண்டும் என்ற கொள்கை கொண்ட சைவ சமயம், பிற மதங்களில் இருக்கக்கூடிய நல்ல விடயங்களை அங்கீகரிக்கின்ற பெருந்தன்மையு டையது.
அதன் காரணமாகவே சைவத்தையும் தமிழையும் தன் இரு கண்ணெனப் போற்றிய ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் புனித விவிலியத்தைத் தமிழில் மொழி பெயர்த்தார்.
சைவத்திலிருந்து கத்தோலிக்கத்திற்கு-கிறிஸ்தவத்திற்கு மதம் மாறியவர்களும் பைபிளை தமிழில் கற்றறிந்து புனிதமான வாழ்வை வாழ வேண்டும் என அவர் எண்ணிக் கொண்டார்.
உண்மை. புனித விவிலியத்திற்கான தமிழ் மொழிப் பெயர்ப்புகளில் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரின் மொழி பெயர்ப்பை மிஞ்சுவதற்கு-விஞ்சுவதற்கு எதுவும் இல்லை எனலாம்.
எனினும் நல்லூர் ஆறுமுக நாவலர், பைபிளைத் தமிழில் மொழி பெயர்த்துத் தந்ததை நம் கத்தோலிக்க-கிறிஸ்தவ மக்களோ அன்றி நம் தமிழ் தேசத்திலுள்ள மறை மாவட்ட ஆயர் இல்லங்களோ-திருச்சபைகளோ ஒரு போதும் நினைவு படுத்தியதில்லை என்பது மிகவும் கசப்பான உண்மை.
ஆம், நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் பெருமான் மீது சைவ மக்களை விட, தமிழ்க் கத்தோலிக்க-கிறிஸ் தவ மக்களே அதிகம் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும்.
இதை நாம் கூறுவது பைபிளைத் தமிழில் மொழி பெயர்த்ததற்காக மட்டுமல்ல. மாறாக, ஆறுமுக நாவலர் பைபிளை தமிழில் மொழி பெயர்த்ததன் காரணமாக மதம் மாறிய மக்களையும் ஏற்றுக் கொண்டு அவரவர் தத்தம் மத வழிபாடுகளுடன் வாழ்வதற்கு உரிய இடமாக நம் தமிழர் தாயகம் இருக்க வேண்டும் என்பதைத் தன் செயலால் சுட்டிக்காட்டியமைக்காகவேனும் கத்தோலிக்க-கிறிஸ்தவ சமூகம் நாவலருக்கு நன்றித் திருப்பலி ஒப்புவித்திருக்க வேண்டும்.
ஆனால் அதை அவர்கள் செய்யவில்லை. பரவாயில்லை என்று அதை பிரஸ்தாபிக்காமல் விட்டாலும் ஒரு முரட்டுவாதப் போக்குடைய கருமை மனம் கொண்ட பேராசிரியர் ஒருவர்; ஆறுமுக நாவலர் பைபிளை தமிழில் மொழி பெயர்க்கவில்லை எனக் கூறியதை நினைக்கும் போது தான் நம் இனத்திற்கு ஈனம் நம்மிடம் உண்டேயன்றி, வேறிடத்தில் இல்லை என்பதை உணர முடிந்தது.
எதுவாயினும் அன்றைய கிறிஸ்தவ சமூகம் ஆறுமுக நாவலருக்கு உரிய மதிப்பும் மரியாதையும் கொடுத்து அவரை உன்னதமான இடத்தில் வைத்திருந்தது.
இதற்கு இரண்டு சாட்சியங்கள் ஆதாரமாக அமைகின்றன. அதில் ஒன்று, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் அதிபராக இருந்த பேர்சிவல் பாதிரியார் நாவலர் பெருமான் மீது அதீத அன்பும் மதிப்பும் கொண்டிருந்தார்.
ஆம், யாழ்.மத்திய கல்லூரியில் ஆசிரியராகக் கடமையாற்றிய ஆறுமுகநாவலர் சைவ ஆசாரத்துடன் பாடசாலைக்கு செல்வதை பீற்றர் பேர்சிவல் பாதிரியார் மனப் பூர்வமாக ஏற்றுக் கொண்டார்.
அதுதவிர, யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் அமைந்திருந்த நாவலரின் இல்லத்திற்கு பேர்சிவல் பாதிரியார் மரியாதை நிமித்தம் சென்று வந்தமையும் நாவலர் மீது அன்றைய கிறிஸ்தவ சமூகம் கொண்டிருந்த பற்றுதலைச் சுட்டி நிற்கும்.
இது போல, மதமாற்றத்தின் பொருட்டு யாழ்ப்பாணத்தில் 1840களில் ஆரம்பிக்கப்பட்ட உதயதாரகை எனும் பத்திரிகையில் ஆறு முகநாவலர் எழுதுவதற்கு இடம் கொடுக்கப்பட்டதென்பதற்குள் நாவலர் மீதான நன்மதிப்பு அன்றைய கிறிஸ்தவ சமூகத்திடம் உயர்வு பெற்றிருந்ததை உறுதி செய்யும் என்பதையும் இவ்விடத்தில் நினைவுபடுத்துவது பொருத்துடையதாகும்.
ஆக, மதமாற்றத்தின் பொருட்டு யாழ்ப்பாணத்திற்கு வந்தவர்கள் நாவலர் பெரு மானுக்கு உயரிய மதிப்பைக் கொடுத்த போதும் சைவத்திலிருந்து மதம் மாறிய நம்மவர்கள் சைவத்தை புறந்தள்ளி எங்ஙனம் தம் மதத்தை வளர்த்தெடுக்க முடியும் என்பது பற்றியே சிந்திக்கலாயினர்.
இதற்குத் தந்தை செல்வ நாயகம் அவர்கள் ஆற்றிய ஓர் உரை தக்க சான்றாக அமையும்.
தொடரும்…


