Type to search

Articles இன்று ஒரு தகவல்

இன்று ஒரு தகவல்

Share

அளவுக்கு மிஞ்சினால் …!

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்று சொல்லுவார்கள். அது உண்மைதான்.

ஒருவருக்கு அளவுக்கு மீறிய புகழ் வந்து விட்டது என்று வையுங்கள். அதுகூட ஆபத்தாகப் போய்விடுகிறது.

பழங்காலத்திலேயெல்லாம் கிரேக்க தேசத்திலே ஒரு பழக்கம் உண்டாம். அதாவது யாராவது ஒருவரை நாடு கடத்த வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள் என்று வையுங்கள், அவர் பெயரை ஒரு மட்பாண்ட ஓட்டுச் சில்லிலே எழுத வேண்டியது.

அதை ஒரு குறிப்பிட்ட பொது இடத்திலே போட்டுவிட வேண்டியது. அவ்வளவு தான் இது மாதிரி பலபேர் போட்டுக்கொண்டு இருப்பார்கள் எல்லாம் குவிந்து கிடக்கும்.

அந்த ஓட்டாஞ்சில்லு குவியலிலே யாருடைய பேர் அதிகமாக இருக்கோ – அந்த நபரை ஒரு பத்து ஆண்டுகள் நாடு கடத்தி விடுவார்கள். அது அந்த ஊர்ப் பழக்கம்.

ஒரு நாள் அந்தக் குவியலுக்குப் பக்கத்திலே ஒரு நபர் சில்லு வைத்துக் கொண்டிருந்தான். அதிலே யார் பெயரையோ எழுதி அந்த இடத்திலே போடனும் என்று ஆசை.

ஆனால் அவன் படிக்காதவன். அதனாலே எழுதத் தெரியவில்லை யாராவது அந்த வழியாக வருகிறார்களா என்று பார்த்துக் கொண்டே நின்றுக்கொண்டிருந்தான்.

ஒரு பெரியவர் வந்து கொண்டிருந்தார். அவரிடம் ஓடினான் “கையிலே இருந்த மட்பாண்டச் சில்லை எடுத்தான். “ஐயா இதிலே ஒரு பேர் எழுதிக் கொடுங்களேன்!” என்றான். அந்தப் பெரியவர் அதை வாங்கி கையிலே வைத்துக்கொண்டு, “என்ன பெயர் எழுதனும் சொல்லு” என்றார்.

இவன் சொன்னான்:

‘அரிஸ்டைடிஸ் என்று எழுதுங்கள்!”. என்றான் இதைக் கேட்டதும் அந்தப் பெரியவருக்கு அதிர்ச்சி.

ஏன் தெரியுமா? அரிஸ்டைடிஸ். அவர்தான் தத்துவமேதை அரிஸ்டைடிஸ் (aristides).

இருந்தாலும் தான் அது என்பதைக் காட்டிக் கொள்ளாமல் அந்த நபரிடம் கேட்டார்:

“அதுசரி… அரிஸ்டைடிஸ் உனக்கு என்ன கெடுதல் செய்தார். அவர் பேரை இதிலே எழுதச் சொல்றியே” ஏன்? என்று கேட்டார்.

“அவர் எனக்கு எந்தக் கெடுதலும் செய்யவில்லை. அவரை நான் பார்த்ததுகூட இல்லை!” என்றான் அந்த நபர்;.

“அப்புறம் எதுக்காக அவரை நாடு கடத்தணும் என்று நீ ஆசைப் படுகிறாய்?” என்று கேட்டார் .

இப்ப அந்த நபர் சொன்னான்:

“அரிஸ்டைடிஸ்ஸைப் பற்றி எல்லோரும் பேசுகிறார்கள். அவர் ரொம்ப நல்லவர்.. அவர் ஒரு பெரிய அறிவாளி என்கிறார் .அவர் பெரிய வள்ளல், பேரறிஞர் -இப்படி எல்லாரும் சொல்றதைக் கேட்டுக் கேட்டு எனக்கு ரொம்ப அலுத்துப் போய்விட்டது.

அதனாலேதான் வெறுப்பாகிவிட்டேன்!” என்றானாம்.

நாம் நல்லவனாக இருக்கறதிலே ஒன்றும் இடைஞ்சல் இல்லை.

ஆனால் நம்மை நல்லவன் நல்லவன் என்று எல்லோரும் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள் என்றால் இடைஞ்சல் ஆரம்பம் என்று அர்த்தம். எதுவுமே அளவுக்கு மிஞ்சிப் போகாமல் பார்த்துக்க வேண்டியது ரொம்ப அவசியம்!

அளவுக்கு அதிகமாக ஆசைப்படாதவர்களிலே ஆபிரகாம் லிங்கனும் ஒருவர்.

அவர் ஒரு தடவை தன்னுடைய நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தாராம்.

ஒருவர் கேட்டிருக்கிறார்:

“ஒரு மனிதனுக்கு கால்கள் எவ்வளவு உயரம் இருக்க வேண்டும்?” என்று கேட்டாராம். இதற்கு ஆபிரகாம் லிங்கன்.” இடுப்பிலேயிருந்து தரையைத் தொடுகின்ற அளவுக்கு உயரம் இருந்தால் போதும்!” என்றாராம்.

தென்கச்சி கோ.சுவாமிநாதன்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link