இன்று ஒரு தகவல்
Share
தேர்வு எழுதுவது எப்படி
இந்தக் காலத்துப் பையன் எதுக்கும் பயப்பட மாட்டான். ஆனால் ஒரு விடயத்துக்குப் பயப்படுவான். என்ன அது? பரீட்சைதான்! வேறு என்ன? தேர்வு நெருங்க நெருங்க பரீட்சை ஜூரமே வந்துடும் சிலபேருக்கு.
படிக்காமலே இருந்தால்தான் பரீட்சை பயமுறுத்தும் ஆரம்பத்தில் இருந்தே நன்றாக படித்துக் கொண்டு வந்தால் கடைசி நேரத்தில் பரீட்சையைக் கண்டு பயப்பட வேண்டிய அவசியமே இருக்காது! சரி… இப்போது பரீட்சை வந்துவிட்டது! அதை நல்ல விதமாக எழுதுவது எப்படி? அதுக்குச் சில ஆலோசணைகளை சொல்லி யிருக்கிறார்கள் பெரியவர்கள்.
படிக்கிற பிள்ளைகள் இதைத் காதில் வாங்கி வைத்துக் கொள்வது நல்லது. 10 மணிக்கு பரீட்சை ஆரம்பம் என்றால் 8 மணிக்கே எல்லா பாடங்களையும் ஒரு தடவை புரட்டிப் பார்ப்பது நல்லது.
பரீட்சை எழுத பள்ளிக்கூடம் செல்கிறார்கள், அப்போது உங்களுக்கு வீட்டிலே யார்மேலே மிகவும் பிரியமோ அல்லது யாருக்கு உங்கள் மேலே மிகவும் பிரியமோ அவர்களிடம் சொல்லிவிட்டு செல்லுங்கள்.
அரை மணிநேரத்துக்கு முன்னரே அங்கே போய்விடுங்கள். கடைசி நேரத்தில் அரக்கப் பரக்க ஓடி இடத்தைத் தேடி நம்பரைத் அவஸ்தைப் பட்டுக் கொண்டிருக்காதீர்கள். பரீட்சை எழுதுவற்கு முன்னர் வெளியே நின்று கொண்டிருந்த மற்றவர்களிடம் பாடத்தைப் பற்றி சந்தேகம் கேட்டுக் கொண்டிருக்காதீர்கள்.
சில சமயம் அது குழப்பமாகப் போய்விடும்! உங்களுக்குத் தெரிந்தது உங்களோடு இருக்கட்டும். அவர்களுக்குத் தெரிந்தது அவர்களோடு இருக்கட்டும்.
பத்து நிமிடத்துக்கு முன்னரே தேர்வு அறைக்குள்ளே நுழைந்து விடுங்கள் தெரிந்தோ தெரியாமலோ உங்கள் சட்டைப்பைக்குள்ளே ஏதாவது காதிதத்துண்டு இருந்தால் தூக்கிப் போட்டு விடுங்கள்! அது என்னத்துக்கு? மணியடிப்பதற்கு முன்னரே வேண்டுமென்றால். அறையை சுத்தி நோட்டம் விடலாம்… யார் யார் எங்கே இருக்கிறார்கள் என்று பார்க்கலாம் மணியடித்த பிறகு சுந்தரம் எங்கே இருக்கிறான் சோமு எங்கே உட்கார்ந்திருக்கான என்று பார்த்துக் கொண்டிருந்தீர்கள் என்றால் நேரம் வேஸ்ட்! நிதானமாக ஒரு தடவை கண்ணை மூடி படித்ததை நினைத்துப் பாருங்கள்.
விடைத்தாள் கொடுத்தவுடனே அதைக்கவனமா பூர்த்தி செய்யுங்கள் . உங்க நம்பரை உரிய இடத்தில் எழுதுங்கள். தேர்வாளர் கையொப்பம் விடைத்தாளில் இருக்கா?என்று உறுதிப் படுத்திக்கொள்ளுங்கள்.
வினாத்தாள் கொடுத்தவுடன் நிதானமாக அதிலே உள்ள குறிப்புகளைப் படியுங்கள். எத்தனை கேள்விக்குப் பதில் எழுதச் சொல்லியிருக்கிறார்கள். எத்தனை கேள்விக்குப் பதில் தெரியும். என்று முடிவு பண்ணிக்கொள்ளுங்கள். தெரியாத கேள்வியைப் பத்தி மனசை அலட்டிக் கொள்ள வேண்டாம்!
எந்தக் கேள்விக்கு நல்லா பதில் எழுதத் தெரியுமோ அந்தக் கேள்விக்கு முதலில் பதில் எழுதுங்கள’. முதல் இரண்டு மூன்று பக்கம் கொஞ்சம் நிறுத்தி நிதானமாக அழகாக எழுதுங்கள். அதற்குப்பிறகு நேரத்துக்குத் தகுந்த மாதிரி பாருங்கள்.
எழுதி முடித்ததும் அந்தக் கேள்வியிலே டிக்மார்க் பண்ணிக கொள்ளுங்கள். இந்தக் கேள்விக்கு இவ்வளவு நேரம் என்று ஒதுக்கி அந்த நேரத்தில் பதில் எழுத வேண்டும். கேள்விக்குத் தகுந்த பதில் போதும். உங்களுக்கு நிறையதெரியும் என்பதால் தெரிந்ததையெல்லாம் வளவள என்று எழுதக் கூடாது.
பதில் எழுதும்போது தொடர்ச்சியாக எழுதிக் கொண்டே போகக் கூடாது. சின்னச் சின்னப் பிரிவாக பிரித்து எழுத தாராளமாக மார்ஜின் விடவேண்டும். ஒரே கேள்விக்கு இரண்டு இடத்தில் பதில் எழுதக்கூடாது!. இப்படிச் சிலபேர் எழுதுவதுண்டு.
திருத்துபவர்கள் ஏமாந்து போய் மார்க் போடுவார்கள் என நினைத்து. அப்படியெல்லாம் ஏமாற மாட்டார்கள். அதிகப்படியாக விடைத்தாள்கள் வாங்கும் போது உங்கள் நம்பர், பக்கமெல்லாம் சரியாக போட வேண்டும்.
தேர்வாளர் கையொப்பம் எல்லாம் இருக்கிறதா என சரி பார்க்க வேண்டும் இணைத்தாள்களிலும் முதலில் தெரிந்த கேள்விக்கெல்லாம் பதில் எழுதுங்கள்! பிறகு, தெரியாத கேள்வியாக இருந்தாலும்… உங்களுக்குத் தெரிந்த அளவுக்குப் பதில் எழுதுங்கள்.. அதை விட்டு விட வேண்டாம். எல்லாம் எழுதி முடிந்த பிறகு, கடைசியாக ஒருதரம் சரிபாருங்கள். கால்புள்ளி அரைப்புள்ளி விடுபட்டிருந்தால் அதையெல்லாம் வைக்கலாம். கேள்விநம்பர்-பக்கம் நம்பர் எல்லாம் சரியாக இருக்கா என்று பாருங்கள். மணியடித்ததும் நிதானமாக விடைத்தாளைக் கொடுத்திட்டு வெளியில் வாருங்கள்.
வீட்டுக்குப் போனவுடன் அடுத்த பரீட்சைக்கான புத்தகங்களை எடுத்து வச்சிக்கிட்டு உட்கார்ந்து விடாதீர்கள்.. ஒரு மணி நேரமாவது ஓய்வு எடுத்துக்குங்க அதற்குப்பிறகு அடுத்த பரீட்சைக்குப் படிக்கலாம். ஒரு பரீட்சையில் நிறைய மார்க் வாங்கிய இரண்டு பையன்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். ஒருத்தன் சொன்னான்:
வீட்டில் படிக்கும் போது எனக்கு ஏதாவது பாடத்தில் சந்தேகம் வந்தால் உடனே அப்பாவைக் கேட்டு செய்வேன். அதனால் தான் அதிக மார்க் வாங்க முடிந்தது! அப்படி என்றான்.
அதுக்கு இவன்: ‘எனக்கு பாடத்தில் சந்தேகம் வந்தால் உடனே எங்கப்பாவிடம் கேட்க மாட்டேன்! அதனால் தான் அதிக மார்க் வாங்க முடிந்தது!” என்றான்.
தென்கச்சி. கோ.சுவாமிநாதன்


