Type to search

Articles இன்று ஒரு தகவல்

இன்று ஒரு தகவல்

Share

கனவும் விழிப்பும்

ஒரு ஆள் இருந்தான். அவனாலே தன்னுடைய குடும்பத்தைக் காப்பாற்ற முடியவில்லை.

அதனால் என்ன செய்தான். ஒரு நாள் இரவு மெதுவாக எழுந்தான் வீட்டைத் திறந்து வெளியிலே வந்துவிட்டான்.

மனைவி, ஒரு மகன் இவங்க இரண்டு பேரையும் விட்டுவிட்டுப் போய்விட்டான்.

அந்த பிள்ளைக்கு அப்பா மேலே ரொம்ப பாசம்.

அதனால் தந்தையின் பிரிவை அவனாலே தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஏங்கி ஏங்கி… ஒருநாள் அவன் இறந்துப் போய்விட்டான்.

வீட்டை விட்டு வெளியே போன அப்பா என்னன்னவோ செய்து கொஞ்சம் பணம் சம்பாதித்தான். பணம் சம்பாதித்தவுடனே வீட்டுக்குத் திரும்பலாம் என்ற நினைப்பு வந்தது.

பணத்தோடு தன்னுடைய கிராமத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறான். வழியிலே மழை பிடித்துக் கொண்டது. கடுமையான மழை! அதனாலே என்ன செய்தான். அங்கேயிருந்த ஒரு சத்திரத்திலே தங்கினான்.

இரவு தூக்கத்திலே ஒரு கனவு அந்தக் கனவிலே, அவன் ஒரு பெரிய ராஜா, தங்க சிம்மாசனத்திலே உட்கார்ந்திருக்கிறான். சுற்றி, ஏராளமான சேவகர்கள்.

என்ன வேண்டும் என்றாலும் செய்வதற்குத் தயராக இருக்கிறார்கள்;

அந்த ராஜாவுக்கு ஆறு குமாரர்கள். எல்லோருமே இளவரசர் கோலத்திலே ஆடம்பரமாக இருக்கிறார்கள். ஆனந்தமாக இருக்கிறார்கள். அருமையான கனவு.. எந்தக் கவலையும் இல்லாமல் இவன் படுத்துத் தூங்கிக்கொண்டிருக்கிறான்.

இந்த சமயத்திலே திடீர் என்று ஒரு பெரிய இடி முழக்கம்! இவன் முழித்துக் கொண்டான். கனவு கலைந்து விட்டுது.

கண்ணைத் திறந்து பார்க்கிறான். ஒன்றையும் காணவில்லை…

“ஐயோ.. என்ன இது – இது வரைக்கும் நான் படுத்திருந்த ஹம்ஸதூளிகா மஞ்சம் எங்கே போனது? நான் பெரிய மகாராஜாவாக இருந்தேனே.

அந்தப் பதவி எங்கே போனது? எனக்கு சேவை செய்து கொண்டிருந்த பணியாளர்கள் எல்லாம் எங்கே போனார்கள்?” என்று யோசனை செய்தான்.

பக்கத்திலே இருந்தவர்களை விசாரித்தான். அவர்களும் படுக்கையிலேயிருந்து எழுந்து உட்கார்ந்து “ஏதாவது கனவு கண்டிருப்பாய்!” – என்றார்கள். எல்லாம் கனவு என்று புரிந்ததும் அவனுக்கு ஏமாற்றமாய்ப் போனது!

ஆறு அரச குமாரர்களையும் காணவில்லை என்பதிலே அவனுக்கு ரொம்ப வருத்தம். இருந்தாலும் என்ன செய்வது? காலையில் எழுந்தான்.

வீட்டுக்குப் போய் சேர்ந்தான். இவனைப் பார்த்ததும் மனைவிக்கு ரொம்ப மகிழ்ச்சி அதே நேரம் மகனை நினைத்து அழுகை! “எங்கே நம்ம பிள்ளை?” என்று கேட்டான்.

“உங்கள் பிரிவு தாங்காமல் இறந்து போய்விட்டான்!” என்றாள். அதைக் கேட்டதும் இவனுக்கு அழுகை வரவில்லை…

அப்படியே சிலை மாதிரி நின்றான்! மனைவிக்கு இது வியப்பாக இருந்தது. “என்னங்க இது? நம் பிள்ளை மேலே எவ்வளவோ பாசம் அன்பு வைத்திருந்தீர்கள்.

இப்படி நிற்கிறீர்களே.. அது எப்படி முடியுது உங்களால்?” – என்று கேட்டார் அந்த அம்மா.

அதுக்கு இவன் சொல்கிறான்: நேற்று இரவு நான் ஒரு சத்திரத்திலே தங்கியிருந்தேன். அங்கே ஒரு பெரிய கனவு கண்டேன். அந்தக் கனவிலே நான் ஒரு அரசன்.

ஹம்சதூளிகா மஞ்சத்துலே படுத்திருந்தேன். என்னைச் சுற்றி ஏகப்பட்ட பணியாளர்கள். அங்கே எனக்கு ஆறு குமாரர்கள். கண்விழித்துப் பார்க்கும்போது அவர்கள் யாருமே இல்லை!

இப்போது நான் கனவிலே வந்த போன அந்த ஆறு குமாரர்களுக்காக அழுவதா? இல்லை இங்கே வந்து போன இந்த ஒரு மகனுக்காக அழுவதா?

அவர்கள் கனவிலே வந்த குமாரர்கள், இவன் விழிப்பு நிலையிலே வந்த குமாரன்.

விழிப்பு நிலையிலே கனவு கிடையாது. கனவிலே விழிப்பு நிலை கிடையாது. ஆனால் இரண்டிலும் நான் இருக்கிறேன்!

இந்த உண்மையை ஒரு பெரியவர் (சத்ய சாய்பாபா) அழகாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

இதை முழுதாக புரிந்து கொண்டால் வாழ்க்கை நமக்கு ஒரு ஆனந்தம்தான்!

ஆனால் நம்மிலே பலபேர் இந்த உண்மையை சரியாக புரிந்து கொள்வது இல்லை!

இவர்கள் எல்லாம் கனவையே வாழ்க்கையாக நினைக்கிறவர்கள். ஒருவனுக்கு தூக்கத்திலே நடக்கின்ற வியாதி.

டாக்டர்கிட்டே போனான். மருந்து சாப்பிட்டான். கொஞ்சநாள் கழித்து டாக்டர் கேட்டார். “ஏம்ப்பா என்னிடம் வைத்தியம் செய்து கொண்டாயே எப்படி இருக்கு. ஏதாவது ‘இம்ப்ரூவமென்ட்” தெரியுதா?” என்றார்.

“நல்ல இம்ப்ரூவ்மென்ட்” என்றான் அவன். ‘எப்படி” என்று கேட்டார். “முன்பெல்லாம் தூக்கத்திலே 10 அடிதூரம் நடப்பேன்- இப்போதெல்லாம் 100 அடி தூரம் வரைக்கும் போய்விட்டு வருகிறேன்!” என்றான்.

தென்கச்சி.கோ.சுவாமிநாதன்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link