Type to search

Articles ஆச்சி அறிவுரை

ஆச்சி அறிவுரை

Share

வாகன உரிமை மாற்றம்; அலைக்கழிக்கப்படும் மக்கள் பேராண்டி…

அரச திணைக்களங்களில அநேகமானவர்கள் வேலை இல்லாமல் சும்மா இருக்கிறவை எண்டு சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறன்.

ஒரு சில திணைக்களங்களில அப்பிடி இருக்குமோ என்னவோ, அநேகமான அரச திணைக்களங்களில வேலை கடுமையா நடக்குது. இதை மறுக்கமுடியாது.

நரம்பில்லாத நாக்கால எதையும் கதைக்கலாம். ஆனால் அந்தந்த இடத்தில இருந்தால்தான் அதுன்ர வலி புரியும் பேராண்டி.

என்ன பாட்டி, திடீரெண்டு அரச திணைக்களம் பற்றிக் கதைக்கிறியள் எண்டு நீ சிந்திக்கிறாய்தானே? விசயம் இருக்குது பேராண்டி.

ஓம், அண்மையில ஒரு அலுவலா கொப்பாவோட யாழ்ப்பாணம் போய் வரவேண்டி இருந்தது.

கொப்பர் சொன்னார் யாழ்ப்பாணம் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்துக்கு மோட்டார் சைக்கிள் பெயர் மாற்றம் செய்யப்போக வேணும் எண்டு.

அங்க போனம் திருவிழாத்தான், அவ்வளவுக்குப் பெரும் சனம். லைசன்ஸ் எடுக்கிற ஆக்கள், லைசன்ஸுக்கு சோதினை எடுக்கிற ஆக்கள், வாகன உரிமை மாற்றம் செய்யிற ஆக்கள் எண்டு அந்த இடமே சனமாத்தான் இருந்துச்சுது.

கொப்பரோட நானும் வாகன உரிமை மாற்றப் பகுதியில இருக்கிற கதிரையில இருந்தன். பதினைஞ்சு பேருக்குக்கிட்ட இருந்திருப்பினம்.

நான் இருக்க, எனக்குப் பக்கத்தில இருந்தவர் உன்ர கொப்பரிட்ட கேட்டார், இது எத்தினையாவது தரம்? எண்டு. எனக்கென்னண்டு விளங்கேல்லை.

அவர் சொன்னார். நான் இண்டையோட நாலாவது நாள் வாறன் எண்டு. கொப்பர் ஏன் எண்டு கேட்டான்.

ஒரு நாளைக்கு கையெழுத்துப் பிரச்சினை எண்டுச்சினம், இன்னொரு நாள் போட்டோ பிரச்சினை எண்டிச்சினம், பிறகு விதானை கையெழுத்து வைக்கேல்லை எண்டிச்சினம். இண்டைக்கு என்னவோ? எண்டு கடவுளைக் கும்பிட்டார்.

அதில இருந்த ஆக்கள் முக்கால்வாசிப் பேர் ஏதோவொரு ஆவணம் இல்லாததால வெளியில போய் வரவேண்டி இருக்குது.

நல்ல சேவை செய்யினம். அதில மாற்றுக் கருத்தில்லை.

வாகன உரிமை மாற்ற வாறவையிட்ட, அவை வரிசையில இருக்க முன்னம் அவை வைச்சிருக்கிற ஆவணங்கள் சரியானதோ. ஏதும் பிழை யெண்டால் திருத்தவும். மேலதிகமா எடுக்கவேணுமெண்டால் அறிவுறுத்தவும் ஒரு அதிகாரி இருந்தால் எவ்வளவு நல்லது.

இதென்னெண்டால், மணித்தியாலக்கணக்கா வரிசையில காத்தி

ருந்திட்டு ஏதும் ஆவணம் பிழையெண்டால் அல்லது எடுக்கவேணும் எண்டால் அடுத்த நாளும் வரவேண்டியெல்லோ இருக்குது.

வரிசையில இருந்த இன்னொருத்தர் சொன்னார், நான் மீன் வியாபாரி. முன்னப் பின்ன வாகன உரிமைமாற்றின அனுபவமும் இல்லை. இவை அது பிழை, இது பிழையெண்டு அலக்கழிச்சால் என்ர தொழிலெல்லோ பட்டுப்போகுதெண்டு.

பேராண்டி, எல்லாம் காலக்கொடுமை அவ்வளவுதான்.

ஆச்சி வருவா…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link