ஆச்சி அறிவுரை
Share
திருநெல்வேலி அம்மாச்சி உணவகம் விரைந்து திறக்கப்பட வேண்டும்பேராண்டி…
மனித மனம் மிகக் கொடுமையானது. அடுத்தவரின்ர மனதை கொஞ்சமும் சிந்திக்காமல் எடுத்தெறிஞ்சு கதைக்கிறது, கோபப்படுறது, மனம் கோண நடந்து கொள்ளுறது, மதிப்புக் கொடுக்காமல் செயற்படுறது இப்படி சகிக்க முடியாத செயல்களைச் செய்யக் கூடியது மனித மனம்.
வீட்டில் வளர்க்கிற நாயை ஏதோ கோபத்திலை அடிச்சுப் போடுவம். ஆனாலும் அடுத்த நிமிஷம் ஓடிவந்து எங்கட காலுக்குள்ள நிக்கும். கலப்படமில்லாத தூய அன்பைக் கொட் டித்தரும் அது.
ஆனால் மனிசர் கண்டதுக்கெல்லாம் நாயை உதாரணம் காட்டிப் பேசுவினம். நன்றி கெட்ட நாய் எண்டு நாக்கூசாமல் சொல்லுவினம்.
பேராண்டி போன வியாழக்கிழமை திருநெல்வேலி அம்மாச்சி உணவகத்துக்குப் போயிருந்தன்.
வழமையா சனக்கூட்டம் நிறைஞ்சிருக்கும். அண்டைக்கு கதவு பூட்டியிருந்துச்சு. உள்ளுக்கு இருந்தவை இண்டைக்குப் பூட்டு எண்டு சைகை காட்டிச்சினம்.
என்ன எண்டு விசாரிச்சால், சுகாதார சீர்கேடு இருந்ததால சுகாதார பரிசோதகரால சீல் வைச்சிருக்காம் எண்டிச்சினம்.
எனக்கு இடி விழுந்தது போல இருந்துச்சுது. ஆரோக்கியமான, சுவையான, மலிவான விலையில உணவுகளைக் கொடுக்கிற அம்மாச் சியில சுகாதாரச் சீர்கேடோ எண்டு ஏங்கிப் போனன்.
பெண் தலைமைத்துவக் குடும்பங்களின்ர வாழ்வாதார முன்னேற்றத்துக்காக கொண்டு வந்த அம்மாச்சி உணவகம் உண்மையில் வரவேற்கத்தக்கது.
வடமாகாணத்தில பல இடங்களில அம்மாச்சி உணவகம் திறந்திருக்குது.
மக்களுக்கு சிறந்த சேவை செய்யிறதால அது சுகாதாரச் சீர்கேட்டோட இயங்க முடியாது.
அதால இந்த விடயங்களைச் சீர் செய்து வலு சீக்கிரம் திருநெல்வேலி அம்மாச்சியை திறக்க அதிகாரிகள் முன்னிற்கவேணும்.
பேராண்டி அம்மாச்சி பூட்டெண்டு திருநெல்வேலியில இருக்கிற வேற கடையொண்டுக்குப் போய் சாப்பிட்டுக் கொண்டிருந்தன்.
அங்க வயோதிப மாது ஒருத்தர் சாப்பிட வந்திருந்தார். அனேகமாக அவர் துப்புரவுத் தொழிலாழியாக இருக்க வேணும்.
சோறு என்ன விலை எண்டு கேட்டார். சப்பிளேயர் விலையைச் சொல்ல, கொஞ்ச நேரம் யோசிச்சுப் போட்டு, பத்து இடியப்பம் தாங்கோ எண்டார்.
அதுக்கு அந்தச் சப்பிளேயர் இருநூறு ரூபாய் இருக்கோ? எண்டு கேட்டார்.
அப்போது அந்த வயோதிப மாது அவரை ஒரு பார்வை பார்த்தார். பேராண்டி அந்தப் பார்வை அவாவின்ர வலியை உணர்த்தினதோட நான் உழைச்சுச் சாப்பிடுறன் உன்னட்ட பிச்சை கேக்கேல்லை எண்ட மாதிரியும் இருந்துது.
எனக்கு கெட்ட கோபம் வந்துது. சாப்பிடுற எல்லாரிட்டையும் காசு இருக்கோ எண்டு கேட்டுத்தான் சாப்பாடு வைக்கிறவையோ?
ஏழை எளியதுகளெண்டால் அவைக்கு அவ்வளவு இளக்காரமாப் போச்சோ எண்ட கோபம் நெஞ்சை முட்டிட்டுது.
நான் சாப்பாட்டைப் பாதியிலேயே விட்டிட்டு அவாவுக்கும் சேர்த்து காசைக் குடுத்திட்டு வந்திட்டன்.
ஆச்சி வருவா…
மாவை.நா.கஜேந்திரன்


