வியாசர் பத்திலகள்
Share
1) போகிற போக்கைப் பார்த்தால் செருப்புகளுக்கு கிராக்கி வரப்போகிறதே வியாசரே?
தரன்- வதிரி
உண்மை. ஆனாலும் செருப்புக்கு வாயிருந்தால், நீயும் ஒரு மனிதனா? நீ சோறு தான் சாப்பிடுகிறாயா அல்லது வேறேதும்..?
ஒரு மனிதன் நடந்து கொள்வது போலவா நடந்து கொள்கிறாய்? ஏன் இவ்வளவு ஆணவம். அகங்காரம் உனக்கு.
எனக்கு உன்னில் சரியான கோபம் இருக்கிறது. இனி நீ என் கண்ணில் படக்கூடாது. மீறிப் பட்டால் என்ன ஆகும் என எனக்குத் தெரியாது.
மூன்று வருடமாக ஒரே செருப்பைப் போட்டிருக்கிறியே. நானும் பாவம் தானே என்று திட்டித் தீர்த்திருக்கும் தன் உரிமையாளரை.
இதென்னடா செருப்புக்கு வந்த சோதனை.
2) வாழ்க்கை என்றால் என்ன வியாசரே?
ரொபின்- யாழ்ப்பாணம்
இன்பம் – துன்பம் நிறைந்தது. சொந்தம்- பந்தம் படர்ந்தது. வெட்கம் துக்கம் அறியாதது.
மனிதனுக்குக் கிடைத்த இந்த வாழ்க்கை மகத்துவமானது. இந்த வாழ்க்கை நமக்கு இன்னொரு முறை கிடைக்காது என்பதை அறியாத மனிதன் போடும் ஆட்டம் அளவிட முடியாதது.
மரணம் என்பது எவராலும் திட்டமிட்டு வருவதல்ல. அது கணப்பொழுதில் நிகழவல்லது. அந்தக் கணப்பொழுது இப்போதும் வரலாம் எப்போதும் வரலாம்.
அந்த ஒற்றை உண்மையை அறிந்து கொண்டால் அடுத்த வீட்டுக் காரனுடன் வேலிச் சண்டையும் அண்ணனும் தம்பியும் சொத்துச் சண்டையும் இப்படி எவரிடையேயும் சண்டை சச்சரவே வராது.
ஆனாலும் அந்த உண்மையை நாம் உணர மறந்து விடுகிறோம்.
3) பூனூல் அணிந்தவர்களும் கொள்ளையடிப்பும். இது தொடர்பில் தங்களின் கருத்து?
கஜீபன்- கோண்டாவில்
ஒரு விடயத்தில் இருவேறு பார்வை இருக்கும்.
அதாவது இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது போல, நாம் எப்போதும் எமது நிலையில் நின்று பார்ப்போம்.
கொஞ்சம் அவர்களின் நிலையில் நின்றும் பார்க்க வேண்டும்.
மகாபாரதத்தில் கர்ணன் பாண்டவர்களுடன் இணைந்திருக்கலாம்.
அவ்வாறு இணைந்திருந்தால் அவன் மரணமடைந்திருக்கமாட்டான் என்று நினைப்பவர்கள் பலர்.
தனது மானம் காத்து தனக்கு சோறிட்டவனை இறப்புவரினும் விடேன் என்ற கர்ணனின் பார்வையில் பார்க்க வேண்டிய தேவையுண்டல்லவா?
4) தமிழ்த் தலைவன் என் தலைவன் என்றவர் இப்போது மகிந்தரை தன் தலைவன் என்கிறாரே?
சுதன் – குப்பிழான்
சிலருக்கு வாக்களித்தமைக்கு நாம் வெட்கித் தலைகுனிய வேண்டும்.அதில் இதுவுமொன்று. என்ன செய்ய புலித்தோல் போர்த்திக் கொண்டு ஊருக்குள் நரி புகுந்ததென்று யாருக்குத் தெரியும்.
இது புலிதான் என்று நம்பியவர்கள் தமிழ் மக்கள். போகப் போகத் தானே அது புலியில்லை நரியயன்று தெரிந்து கொண்டனர்.
உலகிலுள்ள கெட்ட வேலை அத்தனையும் செய்து விட்டு, மக்கள் மத்தியில் மகான்போல உலா வர ஒரு துணிச்சல் வேண்டும். அந்தத் துணிச்சல் சிலருக்கு இருக்கவே செய்கிறது.
5) தனிமையிலே இனிமை காண முடியுமா வியாசரே?
செவ்வேன்- மானிப்பாய்
சைக்கிளுக்கு நன்றாகக் காற்று அடியுங்கள். அரைக்கிலோ மிக்சர், அரைக்கிலோ பகோடா, ஒன்றரை லீற்றர் பெப்சி சோடா வேண்டுங்கள்.
ஆள் அரவமற்ற ஒரு வயல் வெளிக்கு சைக்கிளை விடுங்கள்.
சிறிய துண்டை நிலத்தில் விரித்து அதில் மேற்குறித்த அயிற்றங்களை அடுக்கி வைத்துவிட்டு அமைதியாக இருந்து அவற்றை தின்னத் தொடங்குங்கள்.
ஆஹா என்ன இனிமையாக இருக்கும். தனிமை ஒரு இனிமை என்பது இதில் பங்கு கேட்க ஆள்வரும் வரை தான்.
6) அன்பின் வியாசரே எனக்குப் பாட்டுப் பாட ஆசை, பாட்டு விபரீதமானால் என்னை பிணையில் எடுப்பீர்களா? பாராமுகமாகச் செல்வீரா?
சிவயோகன்- புளியங்குளம்
சிவயோகன் பாடும் பாட்டு “காற்று வாங்கப் போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன் அதைக் கேட்டு வாங்கப் போனால் இந்தக் கன்னி என்னவானாள்…” என்ற பாட்டென்றால் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.
உங்களை எங்கும் வந்து காப்பாற்றுவேன். அதே நீங்கள் “புலி உறுமுது புலி உறுமுது கொடி பறக்குது கொடி பறக்குது வேட்டைக் காரன் வரவைப் பார்த்து…”என்று பாடினால் அடியேனால் எதைச் செய்ய முடியும்.
7) ஒன்றும் ஒன்றும் சேர்ந்தால் இரண்டு தானே வியாசரே? இதிலென்ன சந்தேகம் தங்களுக்கு?
சதீஸ்- கிளிநொச்சி
அதென்றால் உண்மை தான். ஆனாலும் மனைவியின் கணக்குகள் சில நேரங்களில் மடாரடியாய் இருக்கும்.
அப்போது அவள் ஒன்றும் ஒன்றும் மூன்றென்றால் ஆம் நானும் நீயும் நமது பிள்ளையும் என்று அதற்கு வலுச் சேர்க்கும் வான்மை வேண்டும்.
இல்லை இரண்டு தானென்று அவளுடன் வாதிட்டால் இரண்டாகி இருக்க வேண்டி வரும். தம்பி சதீசுக்கு எது வசதி, இரண்டா? மூன்றா?
8) அகலிகையைக் கல்லாக்கியது இரக்க குணமா? அரக்க குணமா?
க.சிவராசா- தாவடி
தன் கற்பு நெறிக்கு களங்கம் விளைவித்தாள் என்று கெளதம முனிவர் அகலிகையை கல்லாக்கினார்.
ஆனால் இந்திரன் தன்னைப் போல (கெளதமர்) வேடம் புனைந்தான் என்ற உண்மை தெரிந்ததும் இந்திரனைப் பார்த்து உன் உடலெங்கும் ஆயிரம் கண்கள் தோன்றட்டும் என்றும் சாபமிட்டார்.
அகலிகை பல வருடங்களாக கல்லாய் இருந்தாள், ஒரு தர்ம பத்தினி விரத முடையவன் திருவடிக்காக. அந்தத் திருவடிக்குச் சொந்தக்காரன் ஏக பத்தினி விரதன் இராமன்.
இங்கு இரக்க, அரக்க குணங்களைத் தாண்டி உண்மைக்கும் நேர்மைக்கும் என்றும் அழிவில்லை என்பதே நிரூபணமாகிறது.


