Type to search

Articles ஆலடி மாநாடு

ஆலடி மாநாடு

Share

அரையும் குறையுமான சரத்தியப் பயிற்சி

வாத்தியார் வைத்திலிங்கம் தலைமையில் ஆலடி மாநாடு கூடியது. மாநாட்டு உறுப்பினர்கள் அனைவரும் ஆலடிக்கு வந்திருந்தனர்.

இறைவணக்கத்துடன் ஆலடி மாநாட்டை ஆரம்பிப்பம் என வாத்தியார் கூற, அனைவரும் எழுந்து நின்று இறைவணக்கம் செலுத்தி அமர்ந்தனர்.

தொடர்ந்து பண்டிதர் பரமலிங்கம் எழுந்தார். கண் வைத்தியர் மகேஸ்வரிதேவி சரவணமுத்து அவர்கள் காலமாகி விட்டார் என்ற செய்தியறிந்து துயரடைகின்றோம்.

யாழ். போதனா வைத்திய சாலையில் கண் வைத்தியராக அர்ப்பணிப்புடன் சேவையாற்றியவர். மருத்துவருக்குரிய சிறப்புக்களைக் கொண்ட அவர், பொதுமக்களுடன் மிக வும் மதிப்புடன் பழகியவர். அவருக்கு இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்துவோம் என க்கூற, அனைவரும் எழுந்து நின்று இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்தி அமர்ந்தனர்.

தொடர்ந்து விதானையார் விசுவலிங்கம் எழுந்தார். இலங்கை வங்கியின் ஓய்வு பெற்ற உத்தியோகத்தர் சொக்கலிங்கம் சிவபாலன் அவர்கள் இயற்கை எய்திவிட்டார் என்ற செய்தி அறிந்து வேதனையடைகின்றோம்.

மாக்சிசக் கொள்கை மீது அதீத பற்றுக் கொண்ட சிவபாலன், ஒரு நேர் மனப்பாங்கான விமர்சன சிந்தனை கொண்டவர்.

தர்க்க ரீதியாக விவாதிப்பதில் அவர் தேர்ச்சி பெற்றவர். நல்ல புத்தகங்களை வாசிப்பதிலும் அது பற்றி பிரஸ்தாபிப்பதிலும் ஈடுபாடுடைய சிவபாலனுக்கு இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்துவோம் எனக்கூற, அனைவரும் மீண்டும் எழுந்து நின்று இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்தி அமர்ந்தனர்.

தொடர்ந்து ஆலடியில் அமைதி நிலவியது. அமைதியைக் குலைக்க கங்காணி கார்த்திகேயன் குரல் கொடுத்தார்.

கங்காணி: யாழ்ப்பாணம் பண்ணை வீதியில வாகன சாரத்தியப் பயிற்சி பெற்ற சனுயன் என்ற இளைஞன் வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் மிகுந்த வேதனையானது. அதேநேரம் யாழ்ப்பாணத்தில வாகனப் பயிற்சிகளை வழங்குவதற்குச் சரியான இடங்கள் இல்லாமை பெரும் இடர்பாடாக உள்ளது.

உண்மையில சாரத்தியப் பயிற்சி வழங்கு வதற்குச் சரியான இட ங்கள் இருக்க வேணும். இதை விட்டிட்டு வாகன நெருக்கடியான இடங்களில சாரத்தியப் பயிற்சி வழங்குவதென்பது எந்த வகையிலும் பொருத்த மானதல்ல.

சிறாப்பர்: உண்மை தான். முன்பு யாழ்ப் பாணம் முற்றவெளி மைதானத்தில தான் வாகனப் பயிற்சிகள் நடக்கும். ஆனால் முற்றவெளி மைதானத்தை தொல்லியல் திணைக்களம் வேலி போட்டுத் தடை செய்ய, யாழ்ப்பாணத்தில உள்ள லேணர்ஸ் காரர்கள் திக்குத் திக்காகக் கலைந்து இப்ப யாழ்-பண்ணை வீதியில பயிற்சி கொடுக்கினம்.

உண்மையில இது பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆராய்ந்து சாரத்தியப் பயிற்சி வழங்கக் கூடிய இடங்களை அடையாளப்படுத்த வேணும்.

மூப்பர்: என்னைப் பொறுத்த வரையில யாழ்ப்பாணத்தில சாரத்தியப் பயிற்சி வழங்குகின்ற நிறுவனங்கள் பணத்தை அறவிடுவதில தான் கண்ணும் கருத்துமாக இருக்கினம்.

ஆக, ஒரு சில லேணர் ஸில தான் அதன் உரிமை யாளர்கள் சாரத்தியப் பயிற்சியை கொடுக்கினம். மற்றும்படி சாரத்தியப் பயிற்சி கொடுக்கிறவர்கள் சம்பள அடிப்படையில வேலை செய்கிறவர்கள்.

இதிலும் சிலர் தங்கட கடமைகளைச் சரியாகச் செய்வதில்லை. சாரத்தியப் பயிற்சி பெறுகின்றவர்களுக்கு உரிய போக்கு வரத்து விதிமுறைகளைச் சொல்லிக் கொடுப்பதில்லை.

இத்தகைய பயிற்றுநர்கள் தொடர்பில அந் தந்த சாரத்தியப் பயிற்சி நிறுவனங்களும் கருசனை கொள்வதில்லை. இதால சாரத்தியப் பயிற்சி என்பது எங்கட பிள்ளைகளிட்ட அரைகுறைப் பயிற்சியாகத்தான் இருக்குது.

வாத்தியார்: மூப்பர் சொல்லுறது நூறு வீதம் உண்மை. அண்மையில தீவகத்திற்குச் சென்று விட்டு பண்ணை வீதியால யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டி ருந்தன்.

பண்ணை வீதியில சாரத்தியப் பயிற்சியில ஈடுபட்ட வாகனம் ஒன்று சடுதியாக நிறுத்தப்பட்டது.

சரி என்று நினைப்பதற்குள், சாரத்தியப் பயிற்சியில் ஈடுபட்ட ஓர் இளைஞர் சடுதியாக வாகனக் கதவைத் திறந்து சாரதி ஆசனத்தில் இருந்து இறங்கினார்.

கடவுள் காத்தது. நான் சிலோவாக மோட்டார் சைக்கிளைச் செலுத்தியதால இன்றைக்கு உங்களோட இருந்து கதைக்கக் கூடியதாக இருக்குது.

இதுபற்றி நான் சாரத்தியப் பயிற்சியை வழங்கும் பயிற்றுநரிடம் தெரியப்படுத்தி, வாகனத்தின்ர சைற் கண்ணாடியைப் பார்ப்பதற்கு முதலில பழக்கிக் கொடுங்கள் என்று கூறிவிட்டுச் சென்றேன்.

அவர் அதனை ஏற்றுக் கொண்டார். உண்மையில சாரத்தியப் பயிற்சி வழங்குபவர்கள் வாகனத்தை ஓட்டுவதற்கு பழக்குகின்றார்களே தவிர, ஒரு சாரதி வாகனத்தில ஏற முதல்-ஏறிய பின்பு எத்தகைய படிமுறைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதைப் பயிற்றுநர்கள் பயிற்சி பெறுபவர்களுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

அதைவிட வாகனத்தை நிறுத்தும் போதும் வாகனத்தில் இருந்து இறங்கும் போது அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளைச் செம்மையாகச் சொல்லிக் கொடுத்தால்தான் தரமான வாகன சாரதிகளை உருவாக்க முடியும்.

என்னைப் பொறுத்தவரையில சாரத்தியப் பயிற்சியில உள்ள பலயீனங்களே, பயிற்சி பெற வந்த அருமந்த ஓர் இளைஞனின் உயிரைக் காவு கொண்டது.

எனவே இனிமேலாவது சாரத்தியப் பயிற்சி கொடுக்கின்றவர்கள் போக்குவரத்து விதிமுறைகளைச் சொல்லிக் கொடுக்க வேணும்.

இருபத்தொரு வயது நிரம்பிய இளைஞன் எதிர்காலக் கனவுகளுடன் வாகனம் பழக வந்த இடத்தில, அந்த இளைஞனின் கதை முடிந்து போவதென் பது மிகவும் கொடுமையானது.

எனவே தயவு செய்து சம்பந்தப்ப ட்டவர்கள் இது விடயத்தில கவனம் செலுத்த வேணும்.

இவ்வாறு வாத்தியார் கூற, அதனைத் தானும் ஆமோதிப்பது போல ஆலடிப் பிள்ளையார் கோவில் கண்டா மணியும் ஒலிக்க, ஆலடியில் இருந்தவர்கள் எழுந்து கோயிலுக்குச் சென்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link