Type to search

Articles ஆலடி மாநாடு

ஆடி மாநாடு

Share

எங்கட ஆலயங்களில கேரள மேளக் கச்சேரிகள்

வாத்தியார் வைத்திலிங்கம் தலைமையில் ஆலடி மாநாடு கூடியது. மாநாட்டு உறுப்பினர்கள் அனைவரும் ஆலடிக்கு வந்திருந்தனர்.

இறைவணக்கத்துடன் ஆலடி மாநாட்டை ஆரம்பிப்பம் என்று வாத்தியார் கூற, அனைவரும் எழுந்து நின்று இறை வணக்கம் செலுத்தி அமர்ந்தனர்.

தொடர்ந்து ஆலடியில் அமைதி நிலவியது. அமைதியைக் குலைக்க பண்டிதர் பரமலிங்கம் குரல் கொடுத்தார்.

பண்டிதர்: அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி என்ற தமிழ்ப் பழமொழி நூற்றுக்கு நூறு சரியானது தான்.

கங்காணி: என்ன பண்டிதர் ஐயா சொல்லுறியள்.

பண்டிதர்: மகிந்த ராஜபக்­ஷா மற்றும் கோட்டாபாய ராஜபக்­ஷ ஆகியோர் ஜனாதி பதிகளாக இருந்த போது, நினைவேந்தலைத் தடுப்பதற்காக தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் படையினரைக் குவிப்பினம். கைதுகள் நடக்கும். அதிலும் குறிப்பாக, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுழைவாயிலுக்கு முன்பாகப் படைத்தரப்புக் குழுமி நிற்கும்.

ஆனால் அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதியாக இருக்கிற இந்த வேளையில, தமிழர் தாயகத்தில அமைதியான முறையில நினைவேந்தல்கள் நடந்தன.

அதேநேரம் முன்பெல்லாம் வடக்கில வெசாக் பண்டிகைக் கொண்டாட்டங்களை படைத்தரப்பு முன்னெடுக்கும்போது தமிழ் மக்களிட்ட ஒருவிதமான சலசலப்பு ஏற்படும்.

குறிப்பாக, யாழ்ப்பாணம் ஆரிய குளத்தில் பெளத்தமத அடையாளங்களை காட்சிப் படுத்தக்கூடாது என்ற தீர்மானம் யாழ்ப்பாண மாநகர சபையில நிறைவேற்றப்பட்டது.

ஆனால் இந்த வருடம் வெசாக் காலத்தில ஆரிய குளத்தில தாமரை மலர்கள் காட் சிப்படுத்தப்பட்டிருந்தன. ஆனால் அது கண்டு நம் மக்கள் எந்தச் சலனமும் கொள்ளவில்லை.

இதைத்தான் சொன்னனான் அரசன் எவ்வழி குடிகள் அவ்வழியெண்டு.

சாத்திரியார்: பண்டிதர் ஐயா சொல்வதை நானும் ஏற்றுக்கொள்கிறன். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவப் பீடத்தில வைக்கப்பட்ட வெசாக் கூடுகளில சில கூடுகள் இனந்தெரியாத விசமிகளால சேதமாக்கப்ப ட்டது.

இந்த இடத்தில முகாமைத்துவப்பீட மாணவர் ஒன்றியம் ஓர் அறிக்கையை வெளியிட்டது.

அந்த அறிக்கையில, வெசாக் நிகழ்வை மாணவர் ஒன்றியமும் சேர்ந்து செய்திருந்தது. எனவே ஒரு சிலர் செய்கின்ற கீழ்மைத்தனமான வேலையைப் பொதுமைப்படுத்தக் கூடாது என அந்த அறிக்கை வெளிவர,

அதே சமநேரத்தில கொழும்பில உள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்த அறிக்கையில்; யாழ்.பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தில வெசாக் கூடுகளைச் சேதமாக்கியவர்கள் இனம் தெரியாத ஒரு சில வி­மிகளே.

அங்கு தமிழ்-சிங்கள மாணவர்கள் ஒற்றுமையாக மிகவும் அன்னியோன்னியமாக உள்ளனர் என்றவாறு அந்த அறிக்கை வெளியிடப்பட்டது.

உண்மையில அதைப் பார்த்து நான் மகிழ்ந்தன். இது தான் ஆட்சித் தலைவன் எல்லா இன மக்களையும் சமமாக நடத்தும் போது, அந்த நாட்டு மக்களும் ஒற்றுமைக்குப் பங்கம் இல்லாமல் நடந்து கொள்வினம்.

மூப்பர்: உண்மை தான். இப்ப மகிந்த அல்லது கோட்டா இருந்தால், அவர்கள் இருக்கிறார்கள் என்ற உசாரில சிங்களப் பேரனவாதிகளும் பெளத்த மதவாதப் பிக்குகளும் வீதியில இறங்கி தமிழ்-சிங்கள மாணவர்களிடையே ஒரு பெரும் கலவரத்தை ஏற்படுத்தியிருப்பினம்.

இவ்வாறு மூப்பர் கூற, அதனை ஏற்றுக் கொள்வது போல ஆலடி மெளனமாகியது.

மெளனத்தை நீடிக்க விடாமல் சிறாப்பர் கனகசபை குரல் கொடுத்தார்.

சிறாப்பர்: அது சரி இப்ப எங்கட கோயில்களில கேரள மேளத்திற்கு நல்ல மவுசு ஏற்பட்டிருக்குது.

வாத்தியார்: உண்மைதான். எங்கட தவில் நாதஸ்வரக் கலைஞர்கள் மூன்று இலட்சம், நான்கு இலட்சம் எண்டு காசு கேட்க, அந்த ஊட்டுக்குள்ள கேரள மேளம் புகுந்திட்டுது.

இப்ப கேரள மேளம் வாசிக்கப்படுவதைப் பார்க்க சனம் கூடி நிற்குது.

விதானையார்: அப்ப எங்கட ஈழத்திற்குப் பெருமை சேர்த்த தவில் நாதஸ்வரமும் பரணை ஏறப்போகுதோ

வாத்தியார்: ஓ! எங்கட தவில் நாதஸ்வர வித்துவான்களை வெளிநாட்டிற்கு அழைத்து, அவர்களுக்கு நம்மவர்கள் அள்ளிக்கொடுக்க, அவர்கள் இங்க வந்து ஆலடி வைரவரு க்கும் அரசடிப் பிள்ளையாருக்கும் அந்தக் கட்டணத்தையல்லோ கேட்கினம்.

பண்டிதர்: ஏன்? வாத்தியார் இஞ்சயும் தவில் நாதஸ்வரக் கலைஞர்களுக்கு எங்கட காரைநகரார் அள்ளிக் கொடுத்துப் பழுதாக்கிப் போட்டினம் எண்டு தானே பொதுவாகக் கதைபடுகுது.

வாத்தியார்: என்னதான் இருந்தாலும் தவில் நாதஸ்வரக் கலைஞர்கள் தங்கட கட்டண த்தை வலுவாகக் குறைத்து எல்லாச் சேவகங்களையும் தங்களுக்காக்க வேணும்.

அதோட வாங்கிற காசுக்கேற்ப வாசிப்பும் இருக்க வேணும்.

ஆனால் சில தலைக்கனம் பிடித்த கலைஞர்கள் விழாவுக்குத் தாங்கள் வந்தாலே சிறப்பு எண்ட நினைப்பில ஒரு 15 நிமிட வாசிப்போட அடுத்த விழாவுக்கு வெளிக்கிடுவதாக ஆலய உபயகாரர்கள் முணுமுணுக்கினம்.

ஆகையால இது தொடர்பில எங்கட ஏறுபடிகள் கவனம் செலுத்த வேணும்.

இது பற்றி முன்னமும் இந்த இட த்தில பிரஸ்தாபித்தனாங்கள்.

இது பற்றி உரியவர்கள் சிந்திக்கத் தவறினால் புருசோத்தமன், மணிகண்டன் என்ற கட்டிடக் கலைஞர்கள் எங்கட ஆலயங்களை ஆட்கொண்டது போல, கேரள மேளமும் எங்கட எல்லாக் கோயில்களையும் ஆக்கிரமிக்கும். இதை யாரும் மறந்துவிடக் கூடாது.

இவ்வாறு வாத்தியார் கூற, அதனைத் தானும் ஆமோதிப்பது போல ஆலடிப் பிள்ளையார் கோவில் கண்டாமணியும் ஒலிக்க, ஆலடியில் இருந்தவர்கள் எழுந்து கோயிலுக்குச் சென்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link