Type to search

Editorial

யாழ். மறை மாவட்டத்தின் புதிய ஆயருக்கு ஓர் அன்பு மடல்

Share

யாழ்ப்பாண மறை மாவட்டத்தின் புதிய ஆயராக பேரருட்திரு அன்ரன் ரஞ்சித் பிள்ளை நாயகம் அவர்கள் நேற்று முன்தினம் புனித பாப்பரசரால் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய ஆயருக்கு எமது வாழ்த்துக்களையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அதேபோன்று இதுகாறும் யாழ்.மறை மாவட்டத்தின் ஆயராக இருந்து பெரும்பணியாற்றி ஓய்வு பெறும் பேரருட்திரு கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

யாழ்.மறை மாவட்டத்தின் ஆயராகப் பதவி யேற்றுள்ள அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் ஆண்டகை அவர்களின் இறையியல் பணி கள் கொழும்பை மையமாகக் கொண்டிருந்தாலும் அவரின் பிறந்த மண் யாழ்ப்பாணமாகவும் அவரின் பட்டப் படிப்புகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமாக இருப்பதனாலும் யாழ்ப்பாண மாவட்டத்தின் சமகால நிலைமைகளை தாங்கள் நன்கு அறிந்திருப்பீர்கள் என்பதில் எந்த ஐயமும் இருக்க நியாயமில்லை.

அதேவேளை எங்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் “சமயம்” என்பது ஒருபோதும் பிரச்சினைக்குரியதாக இருக்கவில்லை.

மாறாக, சைவசமயத் தலைவர்களும் கத்தோலிக்க மதத்தலைமைகளும் எப்போதும் ஒற்றுமையுடன் பயணித்துள்ளதை இவ்விடத்தில் நினைவுபடுத்துவது மிகவும் முக்கியமானது.

அதிலும் தேகவியோகமடைந்த நல்லை ஆதீனத்தின் இரண்டாவது குருமகா சந்நிதானம், யாழ்.மறை மாவட்ட ஆயர்களுடன் மிகவும் அந்நியோன்னியமான நட்புறவைப் பேணியிருந்தார்.

அதுபோல யாழ்ப்பாண ஆயர்களும் நல்லை ஆதீன சுவாமிகள் மீது மிகுந்த மதிப்புக் கொண்டிருந்தனர். உண்மையில் இத்தகைய சமய சமரச உறவு நிலை எங்கள் தமிழினத்தின் ஒற்றுமைக்கு மிகவும் அவசியமானதாகும்.

இதை நாம் இங்கு கூறும் போது, மன்னாரில் இந்த நிலைமை இல்லாது போனமை மிகவும் வேதனைக்குரியதாகும்.

ஆம், மன்னாரில் சைவமக்களை இரண்டாந்தரத்திற்க்கு நகர்த்துவதில் மன்னார் மறை மாவட்ட ஆயர் இல்லம் சார்ந்த ஒரு பகுதி குருமார் அதி தீவிரமாகச் செயற்படுகின்றனர்.

இதனால் அங்குள்ள சைவமக்கள் மனம் நொந்துள்ளனர்.

அதிலும் குறிப்பாக திருக்கேதீச்சர ஆலய நுழைவுவாயில் வளைவை தள்ளி விழுத்தி நந்திக் கொடிகளை சப்பாத்துக் கால்களால் உழக்கிய கொடும் செயலைச் செய்தவர்கள் சில பாதிரிமார் என்பது சகிக்க முடியாத உண்மை.

இங்கு தான் யாழ்ப்பாணம், சமய ஒற்றுமையில் உச்சம் தொட்டு சமய சமரசத்தின் அவசியத்தை ஏனைய மாவட்டங்களுக்கு வலியுறுத்துவதுடன் அவற்றுக்கு எடுத்துக்காட்பாகவும் விளங்குகிறது.

இந்த நிலைமை தங்களின் காலத்தில் இன்னமும் மேலோங்கிஇ தமிழ் பண்பாட்டை – தமிழ்க் கலாசாரத்தை தமிழின் பேரால் அனைத்துத் தமிழர்களும் பின்பற்ற வகை செய்ய வேண்டும்.

இந்த உன்னதமான தமிழ்ப்பற்று தஙக்ளின் காலத்தில் மென்மேலும் உயர்வடைய வேண்டும் என்பதே தங்களிடம் நாம் முன் வைக்கின்ற தரழ்மையான கோரிக்கையாகும்.

வலம்புரியின் ஆசிரியர் தலையங்கம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link