எதற்கும் எதிர்ப்பு சரியான அணுகுமுறையா?
Share
செம்மணிப் புதைகுழி உலக வரலாற்றில் இடம்பிடித்து விட்டதென்றே கூறவேண்டும். ஆம், உலக வரலாற்றில் மிகப்பெரிய மனிதப் புதைகுழித் தொடராக செம்மணிப் புதைகுழி அடையாளப்படுத்தப்பட்டிப்பது ஈழத்தமிழினத்தின் மீதான இன அழிப்பை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.
அங்கு புதைக்கப்பட்டிருப்பவர்கள் அனைவரும் தமிழர்கள் என்பதில் மாற்றுக் கருத்தேதும் இல்லை. ஈழத்தேசத்தில் அரச படைகள் மேற்கொண்ட மிகப்பெரும் வெறியாட்டத்தின் சாட்சியாக செம்மணி புதைகுழி திகழ்கின்றது என அரசியல் ஆய்வாளர்கள் கூறியிருக்கின்றனர்.
1995 இற்குப் பிற்பட்ட காலத்தில் நடந்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் இப்புதைகுழியின் மர்மங்கள் துலங்குமாயின் அது நிச்சயம் ஈழத்தமிழினத்திற்கு நல்லதொரு தீர்வைப் பெற்றுத் தரும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
செம்மணிப் புதைகுழி அகழ்வுப்பணிகள் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் எதிர்வரும் ஜூலை 15 ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகவுள்ளது. அங்கு இதுவரை 412 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்பது சர்வ சாதாரணமான விடயமல்ல.
நாளுக்கு நாள் செம்மணிப் புதைகுழியில் எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்படுவதென்பது நிச்சயம் தமிழ் மக்களை உளரீதியாகப் பாதிப்படையச் செய்யும்.
செம்மணி புதைகுழி விசாரணை துரிதப்படுத்தி, உண்மையைக் கண்டறிந்து, குற்றவாளிகளை உடன் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டியது இலங்கையரசின் தலையாய கடமை.
இதற்குப் பலம் சேர்ப்பதாயும் துரும்புச் சீட்டாயும் அமைவது கிரிசாந்தி கொலைவழக்கில் மரண தண்டனை கைதியான, சிறையில் இருக்கும் சோமரத்ன ராஜபக்ஷ ஆவார். அண்மையில் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார கூறியிருக்கும் கருத்து ஒன்று மிகப் பயங்கரமானது.
ஆம், “செம்மணிப் புதை குழி தொடர்பில் நான் பல்வேறு உண்மைகளைக் கூறுகின்றேன். ஆனால் என்னைப் பொது மன்னிப்பில் இந்த அரசு விடிவிப்பதாக உறுதியளிக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார் என நீதியமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
கிரிசாந்தி கொலை வழக்கில் மரண தண்டனைக் கைதியாக சிறையில் இருக்கும் முன்னாள் இராணுவ வீரர் சோமரத்ன ராஜபக்ஷ நீண்ட காலமாக செம்மணி, யாழ்ப்பாணம் மற்றும் அரியாலை போன்ற பகுதிகளில் கடமையாற்றியுள்ளார்.
இவற்றை வைத்துப் பார்க்கும் போது அவரின் வாக்குமூலம் நிச்சயம் இன்னும் பல திடுக்கிடும் உண்மைகளைக் கொண்டு வரும் என்பது உண்மை. ஆயினும் அவரின் கோரிக்கையை அரசாங்கம் ஏற்றுக்கொள்வதென்பது எந்தளவுக்குச் சாத்தியப்படும் என்பது கேள்விக்குறி.
இருப்பினும் இது விடயத்தில் சோமரத்ன ராஜபக்ஷவை மீண்டும் விசாரணை செய்தால் செம்மணிப் புதைகுழி விடயங்களை அம்பலப்படுத்தவும் முடிவுறுத்தவும் முடியும் என்பது இங்கு கவனிக்கத்தக்க விடயம்.
இங்குதான் ஈழத்தமிழிர்களாகிய நாம் பொறுமையுடனும் மிக அவதானத்துடனும் நடந்து கொள்ள வேண்டும்.
ஆம், எமது செயற்பாடுகள் வெண்ணெய் திரண்டு வரும் நேரம் தாளி உடைந்த கதையாகி விடக்கூடாது. செம்மணிப் புதைகுழியை கடந்த 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்கார பார்வையிட வந்திருந்தார்.
இதன்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஒரு கவனயீர்ப்புப் போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.
குறித்த கவனயீர்ப்புப் போராட்டம் நீதியமைச்சருக்கு எதிரான போராட்டமாகவும் அவர் செம்மணியைப் பார்வையிடக்கூடாது என்பதான போராட்டமாகவும் திரிவுபடுத்தப்பட்டிருந்தமை அபத்தம் நிறைந்தது.
தமது உறவுகளைத் தொலைத்து விட்டு வருடக்கணக்காக அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா? இல்லையா? என்பது கூடத் தெரியாமல் ஏங்கித் தவிக்கும் உறவுகளின் மனக் குமுறல் மிகக்கொடுமையானது.
ஆயினும் நாம் மேற்கொள்ளும் எதிர்ப்பு வெண்ணெய் திரள தாளியுடைவதாய் அமைந்து விடுமோ என்ற பயம் இருக்கவே செய்கிறது.
இதிலும் “நீதி இல்லாத நாட் டில் நீதி அமைச்சர் எதற்கு?” என்ற வாசகம் நிச்சயம் செம்மணிப் புதை குழி விசாரணைகளைத் துரிதப்படுத்துவதில் பாதிப்புச் செலுத்தும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
இதுவரை ஆட்சிபீடமேறிய ஆட்சியாளர்களில் அநுர அரசு பரவாயில்லை ரகமே.
இதுவே வேறு யாரும் ஆட்சியில் இருந்திருந்தால் ஆட்சிக் காலத்தில் செம்மணிப் புதை குழி அடையாளப்படுத்தப்பட்டிருந்தால் அது எப்போதோ கிடப்பில் போடப்ப ட்டிருக்கும்.
செம்மணிப் புதைகுழியைப் பார்வையிட்ட நீதியமைச்சர், ஊட கங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போது, செம்மணிப் புதைகுழி தொட ர்பில் நீதி நிலை நாட்டப்படும். தமிழ் மக்களை ஒரு நாளும் ஏமாற்றமாட்டோம் எனத் தெரிவித்திருந்தார்.
எதற்கெடுத்தாலும் எதிர்ப்பை வெளியிடும் சிந்தனையிலிருந்து தமிழர்களாகிய நாம் வெளியே வர வேண்டும். எமக்குச் சாதகமான முறையில் செயற்படுபவர்களிடத்தேயும் நாம் எதிர்ப்பைத் தெரிவிப்போமானால் எமக்கான நீதி கிடைப்பதில் தாமத மேற்பட வாய்ப்புக்கள் அதிகம்.
தவிர, ஒட்டுமொத்த ஈழத் தமிழினமும் இப்படிப்பட்டவர்களே எனும் மகா பழிச்சொல்லுக்கு நாம் ஆளாகி விடுவோம். தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுபவார்கள் என ஒரு பெரும்பான்மை அமைச்சர் கூறும் போது நாம் அதை ஆமோதித்து தவறிழைத்தவர்கள் மீது விசாரணைகளை மேற்கொள்ள ஊக்கப்படுத்த வேண்டும்.
இதைவிடுத்து நாம் “இல்லை நீங்கள் விசாரணை செய்ய மாட்டீர்கள், உங்களால் அது முடியாது” என எதிர்மறையாக பேசுவோமானால் எமக்கு நல்லது செய்யும் எண்ணம் அவர்களிடம் இல்லாது போய் விடும்.
இங்கு எமக்குத் தேவை நீதி. அந்த நீதியை யார் தந்தால் என்ன. எமக்கு நீதி கிடைத்தால் போதும். அதாவது யார் குற்றியேனும் அரிசியானால் சரி.
அபிமன்யு.


