Type to search

Articles ஆலடி மாநாடு

ஆலடி மாநாடு

Share

தென்பகுதிக்கு விருப்பம் இல்லாத மண்டைதீவு கிரிக்கெற் மைதானம்

வாத்தியார் வைத்திலிங்கம் தலைமையில் ஆலடி மாநாடு கூடியது. மாநாட்டு உறுப்பினர்கள் அனைவரும் ஆலடிக்கு வந்திருந்தனர்.

இறைவணக்கத்துடன் ஆலடி மாநாட்டை ஆரம்பிப்பம் என்று வாத்தியார் கூற, அனைவரும் எழுந்து நின்று இறை வணக்கம் செலுத்தி அமர்ந்தனர்.

தொடர்ந்து பண்டிதர் பரமலிங்கம் எழுந்தார். யாழ்ப்பாணம் லிங்கன் கூல்பார் உரிமையாளர் நாகலிங்கம் அப்புலிங்கம் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து துயரடைகின்றோம். தனது கடும் முயற்சியாலும் தெய்வ பக்தியாலும் ஒரு பலமான தொழில் ஸ்தாபனத்தை ஆரம்பித்து அதன் மூலம் பலருக்கு வேலைவாய்ப்பையும் வழங்கியவர்.

இதுதவிர, பாடசாலைகள் வெளியிடும் சஞ்சிகைகளுக்கு விளம்பரங்கள் வழங்கி மாணவர்களின் ஆக்கங்கள் வெளிவருவதற்கு அவர் உதவி செய்தார். அவருக்கு இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்துவோம் எனக் கூற, அனைவரும் எழுந்து நின்று இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்தி அமர்ந்தனர்.

தொடர்ந்து வாத்தியார் வைத்திலிங்கம் எழுந்தார். ஓய்வு பெற்ற அதிபர் பெருமாள் கணேசன் அவர்கள் விபத்தொன்றில் அகால மரணமடைந்து விட்டார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைகின்றோம்.

எப்போதும் உற்சாகமாகவும் கலகலப்பாகவும் இருக்கின்ற அவர் எல்லோரையும் நட்பாக்கும் ஆற்றல் மிக்கவர்.

இதேபோன்று மூத்த பத்திரிகையாளர் ஏ.என்.எஸ். திருச்செல்வம் அவர்கள் காலமாகிவிட்டார். பத்திரிகைத் துறையில் மிகவும் அர்ப்பணிப்போடு செயலாற்றிய திருச்செல்வம் எவரையும் கடிந்து கொள்ளாமல் அனைவருடனும் நட்புப்பாராட்டியவர்.

இவர்களுக்காக இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்துவோம் எனக்கூற, அனைவரும் எழுந்து நின்று இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்தி அமர்ந்தனர்.

தொடர்ந்து ஆலடியில் அமைதி நிலவியது. அமைதியைக் குலைக்க விதானையார் விசுவலிங்கம் குரல் கொடுத்தார்.

விதானையார்:- அப்ப மண்டைதீவில அமையவிருந்த சர்வதேச கிரிக்கெற் மைதானத்திற்கும் ஒரு மாதிரியாக சமாதிகட்டியாயிற்றுது போல…

கங்காணி:- தெரியாமல் தான் கேட்கிறன் மண்டைதீவில சர்வதேச கிரிக்கெற் மைதானம் அமைவது சாத்திய மில்லையயண்டால், எதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மண்டைதீவுக்கு வந்து மைதானத்திற்கு அடிக்கல் நாட்டினவர்.

பண்டிதர்:- மண்டை தீவு சர்வதேச கிரிக்கெற் மைதானத்திற்கு ஜனாதிபதி அநுர அடிக்கல் நாட்டினாலும் பரவாயில்லை, அடிக்கல் நாட்டிய பின்பு அங்கு பிரமாண்டமாக அமைக்கப்பட்ட மண்டபத்தில ஜனாதிபதி அநுர உரையாற்றினார்.

முன் ஆசனங்களில மந்திரி பிரதானிகள், கிரிக்கெற் சபைத் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் என உயரதிகாரிகள் அமர்ந்திருந்தனர். அந்தச் சந்தர்ப்பத்தில கிரிக்கெற் சபைத் தலைவரைப் பார்த்து ஜனாதிபதி அநுர கேட்கிறார்; உள்ளக மட்டத்தில இந்த மைதானத்தில எப்ப கிரிக்கெற் போட்டியை நடத்தப் போகிறீர்கள் எண்டு.

அதற்கு இலங்கை கிரிக்கெற் சபைத் தலைவர்; எதிர்வரும் டிசெம்பர் மாதம் (2025 டிசெம்பர்) உள்ளக மட்ட கிரிக்கெற் போட்டியை வைக்கவுள்ளோம் என்று கூறினார்.

அவர் இவ்வாறு கூறிய போது, சுத்த அமாவாசை நாளில இன்று பெளர்ணமி என்று அபிராமிப்பட்டர் கூறிய கதைதான் எனக்கு ஞாபகம் வந்தது.

மூப்பர்:- என்ன பண்டிதர் ஐயா சொல்லுறியள்.

பண்டிதர்:- மண்டைதீவு சர்வதேச கிரிக்கெற் மைதானத்திற்கு 2025 செப்ரெம்பர் 01 ஆம் திகதி ஜனாதிபதி அநுர அடிக்கல் நாட்டினார்.

மாரி காலத்தில அந்த இடம் முழுவதிலும் மழை வெள்ளம் பெருகிக் கிடக்கும். இந்த நேரத்தில அந்த மைதானத்தில உள்ளக மட்டத்தில கிரிக்கெற் போட்டியை நடத்துவம் எண்டு கிரிக்கெற் சபைத் தலைவர் கூறினார் எண்டால், அவருக்கு மண்டைதீவு கிரிக்கெற் மைதானம் தொடர்பில எந்த விபரமும் தெரியாது என்பது தான் உண்மை.

சாத்திரியார்:- ஏன் பண்டிதர் ஐயா! அடிக்கல் நாட்டுறதோட மண்டைதீவு சர்வதேச கிரிக்கெற் மைதானத்தின்ர கதை முடியுமென்பது தெரிந்தால், நடக்காத கிரிக்கெற் போட்டிகளை மாரி காலத்தில நடத்தினாலென்ன! கோடை காலத்தில நடத்தினா லென்ன! எல்லாம் வெறும் வார்த்தை ஜாலம் மட்டும் தானே!

வாத்தியார்:- என்னைப் பொறுத்தவரை சர்வதேச கிரிக்கெற் மைதானத்திற்கு நிதி இல்லை என்பதை நான் ஒரு போதும் ஏற்க மாட்டன். ஏனெண்டால், அரசாங்க நிதியில் மண்டைதீவு சர்வதேச விளையாட்டு மைதானத்தை அமைப்பதற்கான திட்டம் இருக்கவில்லை.

மாறாக, மிகப் பிரபலமான தனியார் நிறுவனங்கள் மூலம் மண்டைதீவு சர்வதேச கிரிக்கெற் மைதானத்திற்கு முதலீடு செய்யிறதுதான் அதன் திட்டம். ஆக, அரசாங்கத் திட்ட நிதி இல்லை எண்டு கூறுவது வெறும் பொய்ச்சாட்டு.

சிறாப்பர்:- அப்ப ஏன் அப்படிச் சொல்ல வேணும்.

வாத்தியார்:- வட மாகாணத்தில சர்வதேச கிரிக்கெற் மைதானத்தை அமைப்பதில தென்பகுதியைச் சேர்ந்த ஒரு தரப்பிற்கு விருப்பம் இல்லை.

அந்தநேரத்தில எங்கட ஆட்கள் சிலர் மண்டைதீவில சர்வதேச கிரிக்கெற் மைதானத்தை அமைத்தால், அது சூழலுக்குப் பாதிப்பு, பறவைகளுக்குப் பேரிழப்பு எண்டு கடிதம் அனுப்ப எங்கே எண்டு பார்த்திருந்தவர்களுக்குக் கிடைத்தது நல்ல சந்தர்ப்பம்.

பிறகென்ன, மண்டைதீவு சர்வதேச கிரிக்கெற் மைதானம் அமைவது நிறு த்தப்படுகிறது என அறிவிக்க எல்லாம் முடிஞ்சுபோச்சுது.

இவ்வாறு வாத்தியார் கூற அந்நேரம் பார்த்து ஆலடிப் பிள்ளையார் கோவில் கண்டா மணியும் ஒலிக்க, ஆலடியில் இருந்தவர்கள் எழுந்து கோயிலுக்குச் சென்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link