இராவணனை வீழ்த்திய நாரதர் போல ஆளுநருக்கும் யாரெனும் வாய்த்தனரோ
Share
முப்பத்து முக்கோடி தேவர்களையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என இலங்கை வேந்தன் இராவணேஸ்வரன் விரும்பினான்.
அஃது நடப்பதாக இருந்தால், நவக்கிரகங்களும் எங்கெங்கு இருக்க வேண்டும் என வேத சாஸ்திர விற்பன்னர்களுடன் கலந்துரையாடினான். எனினும் அவனுக்கு சரியான ஆலோசனை கிடைக்கவில்லை. இச்சந்தர்ப்பத்தில் இராவணன் நாரதமுனியைச் சந்திக்கின்றான்.
தன் விருப்பத்தை நாரதரிடம் எடுத்துக் கூறி, முப்பத்து முக்கோடி தேவர்களையும் எனது கட்டுப்பாட்டில் கொண்டு வரும் பொருட்டு நவக்கிரகங்களை ஒழுங்குபடுத்துவது எப்படி எனக் கேட்கின்றான்.
இராவணனின் அபரிதமான போக்கை உணர்ந்த நாரதர்; இராவணனின் இச்சிந்தையால் தேவர்கள் துன்பப்படும் வாய்ப்பு உண்டு. ஆகையால் இதற்கோர் முடிவு கட்ட வேண்டும் என முடிவு செய்தார்.
இராவனேஸ்வரரின் சிம்மாசனப் படிகள் ஒன்பது.அந்த ஒன்பது படிகளிலும் ஒன்பது கிரகங்கள். இதில் எட்டாவது படியில் சனீஸ்வரன். அதுவும் படியைப் பார்த்தவாறு முகக்குப்புறக் கிடக்கின்றார்.
இப்போது நாரதர் இராவணனுக்கு ஆலோசனை கூறுகிறார். இராவணனே! உன் சிம்மாசனப் படிகளில் எட்டாவது இடத்தில் சனீஸ்வரன் உள்ளார்.
இதுகாறும் அவர் முகக்குப்புறக் கிடக்கிறார். இனிமேல் அவரை நீ நிமிர்த்தி அவரின் நெஞ்சில் உன் காலை வைத்து படி ஏறுக! அவ்வாறு செய்தால், நீ நினைத்தது நடக்கும் என்றார்.
அவ்வளவு தான் நாரதரின் சூழ்ச்சியைப் புரிந்து கொள்ளாத இராவணன் தன் சிம்மாசனத்தின் எட்டாவது படியில் குப்புறக்கிடக்கும் சனீஸ்வரனை நிமிர்த்திக் கிடத்தி அவரை மிதித்த போது எட்டாமிடத்து சனீஸ்வரன் இராவணனைப் பார்க்கிறார்.
பிறகென்ன வாரணம் கொடுத்த மார்பு வரையினை எடுத்த தோள் நாரத முனிவற்கேற்ப நயம்பட உரைத்த …….. பத்தும் சங்கரன் கொடுத்த வாளும் வீரமும் களத்தே போட்டு வெறுங்கையோடு நிற்கிறான் இலங்கை வேந்தன்.
அது சரி, இப்போது இந்தக் காதை எதற்கு என்று நீங்கள் கேட்கலாம். எல்லாம் காரணத்தோடு தான்.
எங்கள் வடக்கு மாகாண ஆளுநரின் உத்தரவின் பேரில் வவுனியா மாநகர சபை முதல்வர் மற்றும் சாவகச்சேரி நகர சபை உப தவிசாளர் ஆகியோரின் பதவிகள் வெறிதாக்கப்பட்டுள்ளன.
மேற்போந்த சம்பவம் இப்போது பேசுபடுபொருளாகியுள்ளது. தவிர, நாமல் ராஜபக்ஷவும் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் அளவில் நிலைமை வந்துள்ளது.
இப்போது நாமல் ராஜபக்வின் எதிர்ப்புப் பற்றி நமக்கு எந்தக கவலையும் இல்லை.
மாறாக, இராவணனுக்குக் கிடைத்த நாரதர் போல வடக்கு ஆளுநருக்கும் யாரேனும் நாதரர் கிடைத்தினரோ என்பது தான் நம் கவலை.
வலம்புரியின் ஆசிரியர் தலையங்கம்.


