கனவு இல்லம் மெய்ப்பட
Share
வீட்டுக் கட்டுமானத்திற்கு பொறியியலாளர் தேவையா
1. அறிமுகம்: ஒரு பொதுவான மாயையும் யதார்த்தமும்
“வீடு” என்பது வெறும் கற்களாலும் சீமெந்தினாலும் கட்டப்படும் ஒரு பொருளல்ல. அது ஒவ்வொரு மனிதனின் வாழ்நாள் கனவு, உழைப்பின் பலன், அவனது சந்ததிக்கான சொத்து. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த வீட்டைக் கட்டும் போது, பலரது மனதில் எழும் ஒரு பொதுவான கேள்வி: “வீடு என்பது ஒரு சிறிய கட்டுமானம் தானே, இதற்கு ஏன் ஒரு பொறியியலாளர் தேவை?”
காலங்காலமாக மேசன்களை வைத்தே வீடுகள் கட்டப்பட்டு வரும் நிலையில், பொறியியலாளர் ஒருவரை வேலைக்கு அமர்த்துவது அவருக்குக் கொடுப்பனவு வழங்க வழிவகுத்து, வீணான செலவை ஏற்படுத்தும் என்ற ஒரு சிந்தனை நம் சமூகத்தில் பரவலாகக் காணப்படுகிறது.
ஆனால், இன்றைய நவீன கட்டுமான உலகில் இது ஒரு தவறான புரிதலாகும். வீட்டுக் கட்டுமானத்தில் ஒரு தகுதிவாய்ந்த பொறியியலாளரின் பங்களிப்பு இருந்தால் என்னென்ன நன்மைகள் உண்டாகும், எத்தகைய பேராபத்துகளும் நிதி இழப்புகளும் தவிர்க்கப்படலாம் என்பதை இந்த பகுதியில் விரிவாகப் பார்ப்போம்.
2. திட்டமிடப்படாத செலவுகளும் அதன் விளைவுகளும்
வீடு கட்டத் தொடங்கும் பலருக்கு இருக்கும் மிகப்பெரிய பொதுவான அனுபவம் – “நினைத்த பட்ஜெட்டை விட இரண்டு மடங்கு செலவாகிவிட்டது” என்பது தான்.
•தவறும் கணக்குகள்: “50 இலட்சம் ரூபாயில் வீட்டை முடித்துவிடலாம்” என்று உத்தேசமாகக் கணக்குப் போட்டுத் தொடங்கும் வீடுகள், இறுதியாக ஒரு கோடி அல்லது ஒன்றரை கோடி ரூபாய்க்குப் போய் முடிவதைக் கண்கூடாகக் காண்கிறோம்.
•சமூகப் பாதிப்புகள்: 50 இலட்சம் மட்டுமே நிதி வசதி கொண்ட ஒரு நடுத்தர வர்க்கத்து மனிதர், இந்தத் திட்டமிடல் இல்லாத கட்டுமானச் சூழலில் சிக்கிக் கொள்ளும் போது வீட்டை முடிக்க முடியாமல் பாதியிலேயே கைவிடுகிறார். அல்லது, கஷ்டப்பட்டு வட்டிக்குக் கடன் வாங்கியும், நகைகளை அடகு வைத்தும், ஏனைய பூர்வீகச் சொத்துக் களை இழந்தும் வீட்டை முடிக்கப் போராடுகிறார். இறுதியில், நிம்மதிக்காகக் கட்டிய வீட்டிற்குள் நிம்மதியின்றி வாழும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்.
முக்கிய விதி: வீடு கட்டும் போது ஆரம்பத்தில் மதிப்பிடும் தொகை, எதிர்பாராத காரணங்களால் (பொருட்களின் விலை ஏற்றம் போன்ற) 5% அல்லது 10% வரை வேண்டுமானால் கூடலாம். ஆனால், அது 2 மடங்கு அல்லது 3 மடங்காக மாறுவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளத் தக்கது அல்ல.
பொறியியலாளரின் தீர்வு:
ஒரு தொழில்முறை பொறியியலாளர் உங்களிடம் முறையாக உரையாடி, உங்களின் தேவைகளையும், ஆசைகளையும், உங்களின் உண்மையான பொருளாதார நிலமையையும் கேட்டறிவார்.
அதற்கேற்ப துல்லியமான மதிப்பீட்டு அறிக்கை மற்றும் திட்ட வரைபடத்தைத் தயாரித்து வழங்குவார். இதனால், வீடு கட்டிமுடியும் போது ஆரம்ப பட்ஜெட்டை விட 5% முதல் 10% இற்கு மேல் செலவு அதிகமாவதற்கு வாய்ப்பே இருக்காது.
3.தேவையற்ற செலவுகளும், “அதிகப்படியான” கட்டுமானமும்
முறையான தொழில்நுட்ப அறிவு இல்லாத போது, தேவையில்லாத இடங்களில் அதிக செலவு வைக்கும் கட்டுமான முறைகள் கையாளப்படுகின்றன.
பொறியியலாளர் இல்லாத கட்டுமானங்களில் இரண்டு தீவிரமான தவறுகள் நடக்கும்: ஒன்று தேவைக்குக் குறைவாகக் கட்டுவது, மற்றொன்று தேவைக்கு மிக அதிகமாகக் கட்டுவது.
• அளவுக்கு மிஞ்சிய கொங்கிரீட்டும் கம்பிகளும்: பல இடங்களில் “வீடு பலமாக இருக்க வேண்டும்” என்ற பெயரில், தேவைக்கு அதிகமாக இரும்பு கம்பிகளைப் பயன் படுத்துவதும், தேவையற்ற அளவுப் பரிமாணத்தில் கொங்கிரீட் போடுவதும் நடை முறையில் நடக்கிறது. இது பாதுகாப்பைத் தருவதில்லை, மாறாக பண விரயத்தையே தருகிறது.
• அழகைக் கெடுக்கும் தூண்கள்: உதாரணத்திற்கு, பல இடங்களில் சிறிய அளவிலான (எடுத்துக்காட்டாக 10ft * 10ft ) அறைகளில்கூட பெரிய தூண்களை அமைப்பது வழக்கமாக உள்ளது. இது தேவையற்ற செலவை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், வீட்டின் உட்புற அழகையும் , இடவசதியையும் , சொகுசுத் தன்மையையும் பெருமளவில் பாதிக்கும்.
ஒரு பொறியியலாளர், மண்ணின் தன்மை மற்றும் வீட்டின் எடையைக் கணக்கிட்டு, எந்த இடத்திற்கு எவ்வளவு தேவையோ, அந்த அளவிற்கான கம்பிகளையும் கொங்கிரீட்டையும் துல்லியமாக வடிவமைப்பு செய்து பணத்தை மிச்சப்படுத்துவார்.
4. பிழையான கட்டுமானங்கள்: எதிர்காலப் பேரழிவுகள்
மேற்பார்வை மற்றும் பொறியியல் வழிகாட்டுதல் இல்லாத கட்டுமானங்கள், பிற்காலத்தில் வீட்டின் ஆயுளையே கேள்விக்குறியாக்கிவிடும். கள நிலவரத்தில் பின்வரும் பிழையான கட்டுமானங்கள் சாதாரணமாக நடைபெறுகின்றன:
கட்டுமானப் பிழைகள்
• தேவையான அளவு கம்பிகள் போடாமல் விடுதல்.
• உரிய இடங்களில் கம்பிகளை வளைக்காமல் அல்லது பொருத்தாமல் விடுதல்.
•தவறான முறையில் கம்பிகளைப் பரப்புதல்.
• தரமற்ற அல்லது குறைவான அளவு கொங்கிரீட் கலவை.
அதனால் ஏற்படும் விளைவுகள்
•தூண்கள் மற்றும் பீம்கள் பலவீனமடைதல்.
• நிலநடுக்கம் அல்லது அதிர்வுகளின் போது தாங்காமல் போதல்.
• கொங்கிரீட்டின் பிணைப்புத் தன்மை குறைதல்.
• கூரை மற்றும் சுவர்களில் நீர் கசிவு ஏற்படுதல்.
இத்தகைய தவறுகளால், புதிய வீடு கட்டி குடியேறிய சில வருடங்களிலேயே சுவர்களில் பெரிய விரிசல்கள், பூச்சுக்கள் உதிர்வது, கூரையிலிருந்து நீர் ஒழுகுவது போன்ற பெரும் குறைபாடுகள் தோன்றும். இவற்றை சரிசெய்ய மீண்டும் இலட்சக்கணக்கில் செலவிட வேண்டியிருக்கும். ஒரு பொறியியலாளரின் நேரடி மேற்பார்வை இத்தகைய அனைத்துப் பிழைகளையும் ஆரம்பத்திலேயே தடுத்து, வீட்டின் ஆயுளை 50 முதல் 100 ஆண்டுகள் வரை உறுதியாக வைத்திருக்க உதவும்.
5. நியாயமான தொகையில் தரமான இல்லம்:
உறவுகள் மேம்பட உண்மையான வெற்றிகரமான கட்டுமானம் என்பது, நியாயமான தொகையைச் செலவு செய்து, நவீன அழகியலுடன் கூடிய தரமான வீட்டை உருவாக்குவதே ஆகும்.
•மகிழ்ச்சியான சூழல்: வீடு தடையின்றி, திட்டமிட்ட பட்ஜெட்டுக்குள் தரமாக முடியும் போது, அது வீடு கட்டிய உரிமையாளருக்கும், அதனைப் பொறுப்பேற்று கட்டிக் கொடுத்த ஒப்பந்தக்காரருக்கும் இடையே ஒரு பெரும் மகிழ்ச்சியையும் திருப்தியையும் ஏற்படுத்தும்.
•நீடித்த நல்லுறவு:
பல கட்டுமானங்களில் பட்ஜெட் ஏறுவதனாலும், தரக்குறைபாடுகளினாலும் உரிமையாளருக்கும் மேசனுக்கும் இடையே சண்டைகளும், நீதிமன்ற வழக்குகளும் வருவதைக் காண்கிறோம்.
ஆனால், ஒரு பொறியியலாளர் நடுவராக இருந்து தரத்தையும் செலவையும் கட்டுப்படுத்துவதால், இரு தரப்பினருக்கும் இடையிலான நல்லுறவு எப்போதும் உடையாமல் இருக்கும்.
எனவே, வீட்டு உரிமையாளர் அல்லது வீட்டுக் கட்டுமானத்தை மேற்கொள்பவர், ஆரம்பத்திலேயே ஒரு பொறியியலாளரை முழுமையாக ஈடுபடுத்துவது பண விரயத்தைத் தடுத்து மன அமைதியைத் தரும்.
6. முடிவுரை: நிம்மதியான வாழ்விற்கு முறையான திட்டமிடல்
வீடு என்பது நாம் அன்றாடம் தங்கிச் செல்லும் விடுதி அல்ல. அது சௌகரியங்கள் நிறைந்த, பாதுகாப்பான, நம் தலைமுறைகள் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டிய ஒரு தலம்.
ஆரம்பத்தில் பொறியியலாளருக்குக் கொடுக்கும் சிறிய அளவிலான கொடுப்பனவை ஒரு “செலவு” என்று பார்க்காமல், அது ஒட்டுமொத்த கட்டுமானத்தில் இலடசக்கணக்கான ரூபாய் வீணாவதைத் தடுக்கும் ஒரு “முதலீடு” என்று புரிந்து கொள்ள வேண்டும்.
செலவுகளைக் குறைக்கக்கூடிய தொழில்நுட்ப வழிகளைக் கண்டுகொள்ளவும், கட்டுமானத்தின் தரத்தினை 100% உறுதிப்படுத்தவும், ஆரம்பத்திலேயே வேலையை முறையாகத் திட்டமிடவும் ஒரு பொறியியலாளரின் அறிவுரையும் ஆலோசனையும் மிக மிக இன்றியமையாதது. முறையான திட்டமிடலுடன் உங்கள் கனவு இல்லத்தை அமைத்து, அதில் மன நிம்மதியுடன் வாழ வாழ்த்துகிறோம்!


