செம்மணி மனிதப் புதைகுழி தக்க சாட்சி சோமரத்ன
Share
செம்மணியில் மனிதப் புதைகுழி உள்ள தென்ற தகவலை முதலில் தெரிவித்தவர் லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ.
மாணவி கிருஷாந்தி கொலை வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ, செம்மணி மனிதப் புதைகுழி விடயம் தொடர்பில் முதலில் தகவல் தெரிவித்திருந்தார்.
செம்மணியில் மனிதப் புதைகுழி உள்ளதென அவர் கூறியதும் ஒவ்வொரு இரவுப் பொழுதிலும் செம்மணிப் பகுதியில் வாகனங்கள் ஓடித் திரிவதையும் அப்பகுதியில் படையினரின் நடமாட்டம் அதிகரித்திருந்ததையும் பொதுமக்கள் அறிந்திருந்தனர்.
எனினும் அன்றைய சூழலில் அதுபற்றி யாரிடமும் தெரிவிக்க முடியவில்லை.
இந்நிலையில் செம்மணியில் மனிதப் புதைகுழி உள்ளது எனக் கூறிய சோமரத்ன ராஜபக்ஷவை நீதிமன்றின் உத்தரவில் செம்மணிக்கு அழைத்து வந்து, மனிதப் புதைகுழி உள்ள இடத்தை இனங்காட்டுமாறு கேட்கப்பட்டது.
இருந்தும் சோமரத்ன இனங்காட்டிய இடத்தில் மனிதப் புதைகுழிகள் இருக்கவில்லை.
அதனோடு அந்த விவகாரம் அப்படியே அமிழ்ந்து போனது.
செம்மணியில் மனிதப் புதைகுழி உள்ளது எனக் கூறிய சோமரத்ன வேண்டுமென்றே அவ்வாறு கூறினார் என்பதாகக் கதை முடிக்கப்பட்டது.
ஆனால் நிலமகள் எந்தக் குற்றங்களையும் மறைப்புச் செய்பவள் அல்ல.
ஆம், செம்மணி சித்துப்பாத்தி மயானப் பகுதியில் கட்டிட அமைவுக்காக அத்திபாரம் வெட் டிய போது, அங்கு மனித என்புக் கூடுகள் வெளிவந்தன. அது தொடர்பில் பொலிஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.
அதிலிருந்து ஆரம்பித்த செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு நானூறு மனித என்புத் தொகுதிகளை மீட்கின்ற அளவில் விரிந்து செல்ல, அகழ்வுப் பணிகள் தொடர்கின்றன.
ஆக, சோமரத்ன ராஜபக்ஷ கூறிய செம்மணி மனிதப் புதைகுழி நிஜமானது என்பது இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தவிர, மரண தண்டனையை அனுப வித்துக் கொண்டிருக்கும் சோமரத்ன ராஜபக்ஷ சிறையில் இருந்தபடி இந்த நாட்டின் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு எழுதிய கடிதங்கள் செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் பல உண்மைகளை வெளிப்படுத்தக்கூடியவை.
ஆம், ஜனாதிபதிக்கு அவர் எழுதிய கடிதத்தில் மாணவி கிருஷாந்தி கொலையுடன் தொடர்புபட்ட அதிகாரிகள், அந்தக் காலப்பகுதியில் செம்மணிக்குக் கொண்டு வரப்படும் சடலங்கள், அவை புதைக்கப்படுகின்ற விடயங்கள் எனப் பலவற்றை அவர் கூறியுள்ளார்.
ஆக, செம்மணி மனிதப் புதைகுழி விடயத்தில் உண்மைகள் வெளிவர வேண்டுமாயின், அதற்கு லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவின் வாக்குமூலம் – சாட்சியம் மிகவும் அவசியமும் முக்கியத்துவமும் வாய்ந்த தாகும்.
வலம்புரியின் ஆசிரியர் தலையங்கம்.


