Type to search

Headlines Local News News

சசீந்திர ராஜபக்ச உள்ளிட்ட மூவருக்கு எதிராக மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

Share

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்ச உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக, இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் இன்றைய தினம் (19) கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த குற்றப்பத்திரிகையில், ஏனைய பிரதிவாதிகளாக சேபாலிகா சமன்குமாரி மற்றும் கீர்த்தி பண்டார கொடகம ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

ஸ்ரீலங்கா மகாவலி அதிகார சபைக்குச் சொந்தமான செவனகல, கிரியிப்பன்மைவ பகுதியில் அமைந்துள்ள காணியொன்றில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த கட்டடம் உள்ளிட்ட சொத்துக்கள், கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் 09 ஆம் திகதி ஏற்பட்ட அத்துமீறிய வன்முறைகளின் போது (அரகலய) சேதமடைந்திருந்தன.

குறித்த சொத்துக்களுக்கு இழப்பீடு வழங்குவது நிராகரிக்கப்பட்டிருந்த போதிலும், அதற்குப் புறம்பாக, இழப்பீட்டுக்கான அலுவலகத்துடன் இணைக்கப்பட்டிருந்த சில அரசாங்க அதிகாரிகளுக்குத் தங்களது உத்தியோகபூர்வ அதிகாரத்தைப் பயன்படுத்தி அழுத்தம் கொடுத்து, 8,850,000/- (எண்பத்தெட்டு இலட்சத்து ஐம்பதாயிரம்) ரூபாய் இழப்பீட்டைப் பெற்றுக்கொண்டதன் ஊடாக “ஊழல்” எனும் குற்றத்தைப் புரிந்தமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை தொடர்பிலேயே பிரதிவாதிகளுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த வழக்கில் பிரதிவாதிகளுக்கு எதிராக 10 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதோடு, சாட்சியாளர்களாக 30 நபர்களின் பெயர்களும், வழக்கு பொருட்களாக 38 ஆவணங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link