Type to search

Editorial

விசாரணை நகர்வுகளில் நிதானம் தெரிகிறது…

Share

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் அரசாங்கம் என்பது இந்த நாட்டில் மக்கள் புரட்சி ஏற்பட்டதன் பின்பாக அமையப்பெற்றதாகும்.

ஆம், கோட்டாபய ராஜபக்ஷ ­ ஜனாதிபதியாக இருந்த போது இந்த நாட்டில் பெரும் மக்கள் புரட்சி வெடித்தது.ஜனாதிபதி மாளிகையை மக்கள் சூழ்ந்து கொண்டனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ­ படைத்தரப்பின் உதவியோடு நாட்டை விட்டுத் தப்பியோடினார்.

தவிர, அவரை உலக நாடுகள் ஏற்றுக் கொள்ளவும் மறுத்தன. இதன் காரணமாக சில நாடுகளுக்கிடையே அவர் பயணம் மேற்கொண்டு அடைக்கலம் தேட வேண்டியவரானார்.

இந்தப் பின்னணிகள் அத்தனைக்கும் மூலகாரணம் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் என்பதை எவரும் ஏற்றுக்கொள்வர்.

ஆனாலும் அரசாங்கத்திற்கு எதிரான புரட்சி என்பது நாட்டின் பொருளாதார வீழ்ச்சி, அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம், ஆட்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட ஊழல், மக்களின் வறுமை என்பன காரணமாக ஏற்பட்டதாகவே முன்மொழியப்பட்டது.

குறித்த விவகாரமும் மக்கள் புரட்சிக்கான காரணமாக இருந்த போதிலும் ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் உண்மைத் தன்மையை மக்கள் அறிந்த போது எழுந்ததுதான் அரகல போராட்டம்.

எனினும் சமகால அமைதிச்சூழலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ­ தரப்பு அரகலப் போராட்டத்தை மறந்து விட்டது போல் அறிக்கைகளை வெளியிடுகிறது.

நாட்டை எங்களிடம் தாருங்கள். நாங்கள் நடத்திக் காட்டுகின்றோம். பொதுஜன பெரமுன வலிமையான சக்தியுடன் இருக்கிறது என்றவாறு மகிந்த ராஜபக்ஷ அண்மையில் கூறியிருந்தார்.

இவ்வாறு மகிந்த ராஜபக்ஷ­ கூறுவதற்கு முன்னதாக, அவர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு முன் தோன்றி, வாக்குமூலம் கொடுத்திருந்தார் என்பதும் ஏலவே முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்­வுக்கு நீதி மன்றம் பயணத்தடை விதித்திருப்பதும் வேறுகதை.

ஆக, தங்கள் மீதான மக்களின் எதிர்ப்பு வலுக்குறைந்து விட்டதாக மகிந்த தரப்பு கருதுகிறது. ஆனால் மக்கள் தரப்போ மகிந்த தரப்பை ஆட்சிப் பீடத்தில் இருந்து அகற்றிவிட்டோம். ஊழல் மோசடிகளை முற்றற நீக்கவல்ல ஆட்சியை – அரசாங்கத்தை அமைத்துவிட்டோம். இனி யார் கூப்பாடு போட்டாலும் அது காட்டுக்கத்தல் மட்டுமே.

மற்றும்படி கடந்தகால கொலைக் குற்றச் சாட்டுக்கள், ஊழல் மோசடிகள் மற்றும் போதைப் பொருள் கடத்தல்கள் என அனைத்திலும் விசாரணைகள் முறையாக நடக்கின்றன. கைதுகளுக்கும் குறைவில்லை.கூடவே வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள குற்றவாளிகளுக்கும் சரியான வலை விரிப்பு.

இவற்றின் மத்தியில் விரைவில் சம்பந்தப்பட்டவர்கள் நீதியின் தீர்ப்பைப் பெறுவர் என்ற பரிபூரண நம்பிக்கையில் நாட்டு மக்கள்.

வலம்புரியின் ஆசிரியர் தலையங்கம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link