Type to search

Articles தரிசனம்

தரிசனம்

Share

இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனமும் 22

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ்ஜாவிடம் சிவபூமி அறக்கட்டளையின் ஸ்தாபகர் கலாநிதி ஆறுதிருமுருகன் அவர்கள் திருகோணமலை திருக்கோணஸ்வரர் ஆலயப் புனரமைப்புத் தொடர்பில் வினவியபோது, இலங்கை அரசாங்கத்தினூடாக கோணேஸ்வரர் ஆலயப் புனரமைப்புத் தொடர்பிலான கோரிக்கையை முன்வையுங்கள் எனத் தூதுவர் கூறியமை ஏற்புடையதா என்பதை இந்தியா ஒரு கணம் பரிசீலிக்க வேண்டும்.

ஆம், திருக்கோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலயப் புனரமைப்பில் மிகப் பெரும் தடையாக இருப்பது இலங்கை தொல்லியல் திணைக்களம்.

உண்மையில் தொல்லியல் திணைக்களம் என்பது இலங்கைப் பிரஜைகளுக்கான தன்று, மாறாக அஃது இந்த நாட்டின் பெளத்த சிங்கள மக்களுக்கானது என்பதை பல சந்தர்ப்பங்களில் அந்தத் திணைக்களம் உறுதி செய்துள்ளது.

இது தவிர, திருக்கோணேஸ்வரர் ஆலயத்திற்கு இலண்டனில் இருந்து தருவிக்கப்பட்ட காண்டாமணிக்கான மணிக்கோபுரத்தை ஆலய வளாகத்தில் அமைப் பதற்குத் தடைவிதித்து வருவதும் தொல்லியல் திணைக்களம் என்பதை இந்த இடத்தில் ஏலவே குறிப்பிட்டிந்தோம்.

ஆக, திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் புனரமைப்பு மற்றும் மணிக்கோபுர அமைப்பு என எதையுமே செய்ய முடியாத வகையில் தொல்லியல் திணைக்களம் செயற்படுகிற தெனில், அதன் பொருள் தொல்லியல் திணைக்களத்தினூடாக அரசாங்கம் அதனைச் செயற்படுத்துகிற தென்பதேயாம்.

உண்மை. தொல்லியல் திணைக்களத்தின் பணி, தொல்லியல் சான்றுகளை – அதன் அம்சங்களைப் பாதுகாப்பது எனில், காலத்தால் முந்தய திருக்கோணேஸ்வரர் ஆலயத்தைப் பாதுகாப்பதும் ஆலயத்தின் புனரமைப்புப் பணிகளுக்கு அனுமதி வழங்கி ஆலயத்தின் பழமையை வெளிப்படுத்துவதற்குமான ஏற்பாட்டைச் செய்தாக வேண்டும்.

ஆம், இலங்கைத் தொல்லியல் திணைக்களம் திருக்கோணேஸ்வரர் ஆலயத்தை அப்படியே அமுக்கி, அங்கு பெளத்த விகாரைகளை அமைத்து இலங்கை வேந்தன் இராவணேஸ்வரன் அமைத்த திருக்கோணேஸ்வர ஆலயத்தைக் கபளீகரம் செய்வது தான் அதன் திட்டமாகும்.

நிலைமை இதுவாக இருக்கையில், இலங்கை அரசாங்கத்தினூடாக திருக்கோணேஸ்வரர் ஆலயப் புனரமைப்புத் தொடர்பான கோரிக்கையை இந்திய மத்திய அரசுக்கு அனுப்பி வையுங்கள் எனக் கூறுவது இந்தியத் தூதுவராலயம் நிலைமையை சரிவரப் புரிந்து கொள்ளவில்லை என்றே கருத வேண்டியுள்ளது.

யாழ் இந்தியத் துணைத் தூதரகத்தின் பணி

இலங்கைக்கான இந்தியத் துணைத் தூதரகம் யாழ்ப்பாணத்தில் அமையப் பெற்றமை யாழ்ப்பாண மக்களுக்கு பெருங்கொடை எனலாம்.

யாழ்ப்பாணத்தில் இந்தியத் துணைத் தூதரகம் அமைந்ததன் காரணமாகவே யாழ்ப்பாண மக்களுக்காக இந்திய மத்திய அரசு திருவள்ளுவர் பண்பாட்டுமையத்தை அமைத்துத் தந்தது.

எனவே யாழ்ப்பாண இந்திய துணைத் தூதரகம் தமிழ் மக்களின் சமகால நிலைமை தொடர்பில் இந்திய மத்திய அரசிற்குத் தெளிவுபடுத்துகின்ற கடமையைக் கொண்டுள்ளது.

அந்த வகையில், பாடல் பெற்ற திருக்கோணேஸ்வரர் ஆலயப் புனரமைப்பை இந்திய மத்திய அரசு செய்து, சிவபூமி ஆகிய இலங்கை மண்ணின் ஆதிச்சமயம் சைவம் என்ற வரலாற்று உண்மையை நிலை நிறுத்த வேண்டும்.

இதற்கு யாழ்ப்பாண இந்திய துணைத் தூதரகம் உதவும் என நம்பலாம்.

ஆம், எங்கள் திருகோண மலை ஈழத்தமிழர்களின் தலை நகரங்களில் ஒன்று. அங்குள்ள கன்னியா வெந்நீரூற்று என்பது, இராவணேஸ்வரன் தன் தாயாரின் அந்திமக்கிரியைகளுக்காக வெட்டுவித்த ஏழு கிணறுகள் என்கிறது வரலாறு.

இத் துணைக்கும் மேலாக, திருகோணமலையில் உள்ள திருக்கோணஸ்வரர் ஆலயத்தின் தோற்றம் எவ்வாறு இருந்தது என்பதை போர்த் துக்கேய பாதிரியாரான பெர்னாவ் டி குயிரோஷ் எழுதிய புத்தகத்தின் ஊடாக நாம் அறிய முடிகிறது.

இந்த அரிய பொக்கிசம் எங்கள் கோணேஸ்வரர் ஆலயத்தின் புனரமைப்பு எவ்வாறாக இருக்க வேண்டும் என்பதை சுட்டி நிற்கும்.

ஆம்,அயோத்தியில் இராம ஜென்ம பூமியில் பால இராமர் வாழ்ந்த இடத்தில் இருந்த பாபர் மசூதியை விலத்தி, இராமருக்கு கோயில் கட்டியதன் மூலம் வரலாற்றைப் பாதுகாக்கின்ற இந்திய மத்திய அரசு, ஈழத்தில் இராவணேஸ்வரன் அமைத்த திருக்கோணேஸ்வரம் எனும் சிவன் தலத்தை புனரமைத்துத் தந்து எங்கள் ஈழத் தமிழ் மக்களின் பன்னெடுங்கால வேணவாவை நிறைவேற்ற வேண்டும்.

இதற்கு யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தித் துணைத் தூதரகம் உதவ வேண்டும் என்பது இத் தரிசனத் தினூடாக நாம் முன்வைக்கின்ற தாழ்மையான கோரிக்கை ஆகும்.

தொடரும்…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link