ஈழத் தமிழர்களுக்கு குரல் கொடுத்தவர் பாரதிராஜா
Share
தமிழ்த் திரைப்பட உலகில் இயக்குநர் இமயமாக விளங்கிய பாரதிராஜா 10.06.2026 அன்று காலமானார் என்ற செய்தி அறிந்து ஈழத்தமிழ் மக்கள் சொல்லொணாத் துயரடைகின்றனர்.
தமிழகத் திரைப்படங்களில் அரும்பெரும் சாதனைகளை படைத்த பாரதிராஜா நாட்டுப்புறக் கதைகளை படங்களாகத் தருவதில் தனக்கு நிகர் தானே என்பதை நிரூபித்தவர்.
தமிழ்த் திரையுலகின் மூத்த திரைப்பட இயக்குநரான அவர், திரையுலகின் கோலோச்சக் கூடிய நடிகர்கள் பலரைத் திரையுலகிற்கு அறிமுகம் செய்துவைத்தவர்.
ஆம், பாரதிராஜா இல்லையயன்றால், பேராற்றல் கொண்ட நடிகர்கள் நம் தமிழ்த் திரை யுலகில் இல்லையென்றாகியிருக்கும்.
இஃது திரையுலகில் நாம் அறிந்த பாரதிராஜா பற்றிய சிறு குறிப்பு மட்டுமே.
மாறாக, ஈழத் தமிழர்களின் விடயத்தில் திரிகரண சுத்தியோடு எமக்காகக் குரல் கொடுத்த அற்புத மனிதர் பாரதிராஜா என்றால் அது சாலப் பொருத்துடையது.
ஆம், தமிழகத் திரையுலகம் ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுப்பதில் ஒருபோதும் பின் நின்றதில்லை.
ஆம், நம் இனம் பேரினவாதிகளின் இனவாதப் பேயாட்டத்திற்கு ஆளாகி, அல்லலுற்ற போதெலாம் தென்னிந்தியத் திரைப்படக் குழுமம் எங்களுக்காக அகிம்சை வழிப் போராட்ட ங்களை நடத்தி, உலகின் பார்வையை ஈழத்தின் பக்கம் திசை திருப்பிய சாதனைக்குரியவர்கள்.
இவ்வாறு ஒட்டுமொத்தத் தென்னிந்தியத் திரைப்படத்துறையினர் நம் ஈழத் தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுக்க முற்பட்டதற்கு மூலகாரணம் பாரதிராஜா போன்ற மூத்த தமிழ் திரைப்பட இயக்குநர்கள் என்றால் அது மிகையன்று.
உண்மை. ஈழத் தமிழ் மக்கள் உரிமை பெற்று, சுதந்திரமாக வாழவேண்டும் என தன் இறுதி மூச்சு வரை நினைத்தவர் அவர்.
யாழ்ப்பாணத்திற்கும் மட்டக்களப்பிற்கும் வருகை தந்த பாரதிராஜா தமிழின் உயிர் மூச்சு என்பது ஈழத் தமிழர்களிடமே உண்டு என்ற பொருள்பட கருத்துரைத்தார்.
இதையும் கடந்து, ஈழத் தமிழர்கள் எதனையும் சாதிக்கும் வல்லமை கொண்டவர்கள் எனப் பகிரங்கமாகக்கூறி, எங்கள் ஈழத் தமிழ் இனத்தை உன்னதமான இடத்தில் வைத்தார்.
பற்றுறுதியோடு நம் மக்களை நேசித்தவர் – எமக்காக அனுதினமும் குரல் கொடுத்தவர் – அத்தகைய ஈழத் தமிழ்ப் பற்றாளர் பாரதி ராஜா இன்று நம் மத்தியிலில்லை.
அவரின் குரல் இனி எங்களுக்காக ஒலிக்கப்போவதில்லை.
ஆனாலும் எங்களை மானசீகமாக நேசித்து எங்களுக்காக – எங்கள் உரிமைக்காக ஒலித்த பாரதிராஜாவின் அந்தக் குரல் என்றும் எங்கள் ஈழத்தில் ஒலிக்கும்.
ஈழத் தமிழர்களின் வரலாற்றில் அது காவியமாகும் என்ற நிதர்சனத்தை அவருக்கான அஞ்சலியாக சமர்ப்பிக்கின்றோம்.
வலம்புரியின் ஆசிரியர் தலையங்கம்.


