வனாத்தவில்லு முந்திரித் தோட்டத்தில் இளைஞர் அடித்துக்கொலை
Share
புத்தளம், வனாத்தவில்லு, காரைதீவு பகுதியில் அமைந்துள்ள பிரதான பயிர்ச்செய்கை நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமான முந்திரி தோட்டத்தில் நபர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், அவர் மீது துப்பாக்கி பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வனாத்தவில்லு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை (09) அதிகாலை வேளையில் இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்து வனாத்தவில்லு பொலிஸ் நிலையத்திற்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சம்பவத்தில் கல்லடி பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளின்படி, உயிரிழந்தவர் காரைத்தீவு பகுதியில் உள்ள குறித்த நிறுவனத்தின் முந்திரித் தோட்டத்திற்குள் முந்திரிப் பழங்களைச் சேகரிப்பதற்காகச் சென்றுள்ளார்.
அப்போது, அங்கு காவற்கடமையில் ஈடுபட்டிருந்த தோட்டக் காவலர்களிடம் அவர் சிக்கியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அங்கிருந்த காவலர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அந்த இளைஞரை தாக்கியுள்ளனர். அத்துடன், அவர்கள் வைத்திருந்த துப்பாக்கியினால் அந்த இளைஞரைக் குறிவைத்துச் சுட்டுக் கொலை செய்துள்ளமை பொலிஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
அதனை தொடர்ந்து 08 தோட்ட காவலாளர்கள் பொலீஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். மேலும், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட 04 துப்பாக்கிகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் 19 முதல் 41 வயதுக்குட்பட்டவர்கள் எனவும், அவர்கள் ஏத்தம்பலை, புத்தளம், கற்பிட்டி, அனுராதபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், அப்பகுதி பொலிஸார் இக்கொலை குறித்து மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


