Type to search

Headlines Local News News

மார்பகப் புற்றுநோயை கண்டறியும் அதிநவீன இயந்திரங்கள் நாட்டுக்கு

Share

நாட்டில் மார்பகப் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதற்கும், சிகிச்சைக்குப் பின்னரான பராமரிப்பை மேம்படுத்துவதற்கும், வைத்தியசாலைகளில் நிலவும் நீண்ட காத்திருப்புப் பட்டியல்களைக் குறைக்கும் முகமாகவும் 5 அதிநவீன மேமோகிராபி இயந்திரங்களை நாட்டுக்கு பெற்றுக்கொள்வதற்கு சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. 

சுகாதார சேவையின் பெளதீக வளங்களை அதிகரித்து, பொதுமக்களுக்கு வினைத்திறனான சேவைகளை வழங்கும் நோக்கில், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸவின் வழிகாட்டுதல் மற்றும் அறிவுறுத்தலின் கீழ் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 

பெண்களிடையே மிகவும் பொதுவாகக் காணப்படும் மார்பகப் புற்றுநோய் மற்றும் அசாதாரண கட்டிகளைக் கண்டறிவதற்காக, தலா 153 மில்லியன் ரூபாய் பெறுமதியான 5 அதிநவீன இயந்திரங்கள் பின்வரும் முக்கிய வைத்தியசாலைகளுக்கு வழங்கப்படவுள்ளன, 

கொழும்பு தேசிய வைத்தியசாலை, காலி கரப்பிட்டிய தேசிய வைத்தியசாலை, கண்டி தேசிய வைத்தியசாலை , அநுராதபுரம் போதனா வைத்தியசாலை, அபேக்ஷா வைத்தியசாலை (மகரகம) இதன் மொத்த மதிப்பு 765 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. 

இதற்கான நிதியுதவியை சுகாதார அமைப்புகள் மேம்பாட்டுத் திட்டம் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவை வழங்கியுள்ளன. 

அவசரத் தேவையைக் கருத்திற் கொண்டு திருகோணமலை மற்றும் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைகளுக்கு இரண்டு பயன்படுத்தப்பட்ட மார்பகப் பரிசோதனை இயந்திரங்களை வழங்கவும் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. 

தற்போது நாடு முழுவதும் உள்ள அரச வைத்தியசாலைகளில் 16 மேமோகிராபி இயந்திரங்கள் பயன்பாட்டில் உள்ளன. 

கொழும்பு, காலி, கண்டி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, கல்முனை, குருநாகல், அநுராதபுரம், பொலன்னறுவை, பதுளை, இரத்தினபுரி, ராகம, பேராதெனிய மற்றும் களுபோவில ஆகிய பகுதிகளில் உள்ள முக்கிய வைத்தியசாலைகளில் இதில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link