Type to search

Editorial

கம்யூனிஸ்ட் குமாரசாமி எனும் சிறுகதை போல…

Share

என் சிறுவயதில் கம்யூனிஸ்ட் குமாரசாமி எனும் சிறுகதையைப் படித்த ஞாபகம் உண்டு.

ஆம், சிறுகதையை எழுதியவர் யார் என்பது எனக்கு ஞாபகம் இல்லை. ஆனால் ஒரு சிறுகதைத் தொகுப்பில் அந்தக் கதை இடம்பெற்றிருந்தமை நினைவில் உண்டு.

கதை வருமாறு; கம்யூனிஸ்ட் குமாரசாமி என்பவர் ஒரு நிறுவனத்தில் பணியாற்றுகி றார். அந்த நிறுவனம் சிறு தொகைப் பணத்தை அவரிடம் கொடுத்து வங்கியில் வைப்புச் செய் கின்றது. அவரின் நேர்மை குன்றாத செயலால் அவர் மீது நம்பிக்கை கொண்ட நிறுவனத்தின்  முகாமை படிப்படியாக அவர் மூலம் வங்கியில் வைப்புச் செய்யும் பணத்தொகையை அதிகரித்து வருகிறது.

கம்யூனிஸ்ட் குமாரசாமியிடம் எந்தச் சலனமும் இல்லை. அவர் ஒழுங்காகப் பணத்தை வைப்புச் செய்கிறார். ஒருமுறை குறித்த நிறுவனம் அதிகூடிய தொகையை கம்யூனிஸ்ட் குமாரசாமியிடம் கொடுத்து விடுகிறது.

வங்கியில் பணத்தை வைப்புச் செய்வதற்காகச் சென்ற குமாரசாமியை இன்னமும் காணவில்லை. பதற்றமடைந்த நிறுவன முகாமை குமாரசாமியைத் தேடுகிறது.

அவரை எங்கும் காணவில்லை. கம்யூனிஸ்ட்  குமாரசாமி பெருந்தொகைப் பணத்துடன் தலைமறைவாகிவிட்டார்.

ஆம், சிறுதொகைப் பணத்தில் நேர்மையாக இருந்த குமாரசாமி பெருந்தொகைப் பணத்தைக் கண்டதும் தனது கைவரிசையைக் காட்டிவிட்டார் என்பது அந்தக் கதையின் உட்பொருள்.

என் சிறுவயதில் அக்கதையைப் படிக்கும் கால், கதையின் போக்கை மட்டுமே புரிந்து கொண்டேன்.

ஆனால் பின்னாளில் கம்யூனிஸத்திற்கு  எதிராகப் புனையப்பட்ட கதை அது என புரிந்து கொண்டேன்.

இப்போது அந்தக் கதையினை நினைத்துப் பார்க்கின்றேன்.

கதையின் போக்கு கம்யூனிஸத்திற்கு எதிரானதாயினும் கம்யூனிஸத்தை ஒதுக்கி வைத்துவிட்டு கதைப்பொருளைப் பார்க்கும் போது இக்கதையானது நடைமுறைச் சாத்தியத்தைத் தழுவிச் செல்வதை உணரமுடிகிறது.

இதை நாம் கூறும்போது, கம்யூனிஸ்ட் குமாரசாமி என்ற அந்தச் சிறுகதை இப்போது எதற்கு என்று நீங்கள் கேட்கலாம்.

ஆம், பெளத்த தேரர்களின் ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்காக தர்ம நீதிமன்றம் ஒன்றை நிறுவுவதென ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கூறியதைப் பார்த்தபோது கம்யூனிஸ்ட் குமாரசாமி என்ற சிறுகதை என் ஞாபகத்திற்கு வந்தது.

ஆம், சட்டத்தின் முன் அனைவரும் சமன் எனக் கூறி வரும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, இப்போது குற்றம் இழைத்த தேரர்கள் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தர்ம நீதிமன்றத்தை நிறுவப் போவதாகக் கூறுவது கம்யூனிஸ்ட் குமாரசாமி என்ற சிறுகதையை நினைவுபடுத்துகிறது.

ஆம், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதால், தர்ம நீதிமன்றத்தை நிறுவுவதற்கு பொதுமக்கள் குறிப்பாக சட்டத்தரணிகள் தமது எதிர்ப்பைக் கடுமையாக வெளிப்படுத்தி தர்ம நீதிமன்றத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

வலம்புரியின் ஆசிரியர் தலையங்கம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link