தரிசனம்
Share
இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனங்களும் 12
காஞ்சி காமகோடி பீடம் மற்றும் ஆதீனங்கள் என்பவற்றுக்கப்பால், இந்திய தேசத்தில் இருக்கக்கூடிய ஆன்மீகத் தலைவர்களின் ஆச்சிரமங்கள், அவர்களின் வழிபாட்டு ஸ்தலங்கள் என்பவற்றின் பலமும் விஸ்தீரணமும் உலகில் வேறு எந்தச் சமயங்களிலும் இல்லை என்று கூறுமளவில் வியாபகம் பெற்றுள்ளன.
ஆம், மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள சீரடி என்ற ஊரில் இருக்கக்கூடிய சீரடி பாபா சமாதிக் கோவிலுக்கு நாள்தோறும் இலட்சக் கணக்கான பக்தர்கள் சென்று வருகின்றனர்.
அதேபோல ஆந்திர மாநிலத்தின் புட்டப்பர்த்தியில் இருக்கக்கூடிய ஸ்ரீ சத்யசாயி பாபா ஆச்சிரமம் மக்கள் வெள்ளத்தால் நிறைந்து வருகிறது.
இதுபோல ஆந்திர மாநிலத்தில் வரதபாளையத்தில் இருக்கக்கூடிய கல்கி பகவான் என அழைக்கப்படும் அம்மபகவானின் ஆச்சிரமம் மற்றும் இந்திய தேசம் முழுமையிலும் பேசுபொருளாகிய-இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அதி செல்வாக்கைப் பெற்றுள்ள ஸ்ரீசற்குரு சுவாமிகளின் மிகப்பிரமாண்டமான ஆச் சிரமம்.
அந்த ஆச்சிரமத்தில் இருக்கக் கூடிய மிகப்பிரமாண்டமான சிவபெருமானின் உருவத் திருமேனிக்கு முன்பாக சிவராத்திரி நாளில் இலட்சோப இலட்சம் மக்கள் தியானம் செய்கின்ற அந்த அற்புதம் என இந்துத்துவ ஆச்சிரமங்களின் அபரிதமான எழுச்சி இந்திய தேசத்தில் இந்து சமயத்தின் பாதுகாப்புச் சுவராக வானுயர்ந்து நிற்கின்றன.
இஃது ஒருபுறமிருக்க, தியான மண்டபங்களின் வரிசையில் சுவாமி இராமகிருஷ்ண மிசன், ரமணரிஷியின் ஆச்சிரமம், மகரிஷி வேதாத்திரி சுவாமிகளின் வாழ்க வளமுடன் தியான நிலையம், ஸ்ரீஸ்ரீ பூச்ய ரவிசங்கர் சுவாமிகளின் வாழும் கலைப் பயிற்சியகம் மற்றும் யோகாசன நிலையம் என பற்பல ஆச்சிரமங்கள் அகண்ட பாரதம் முழுமையையும் ஆட்சி செய்கின்றன.
இவையாவற்றுக்கும் மேலாக, விமர்சனங்கள் பலவற்றைக் கடந்து “கைலாசா” எனும் நாட்டையே உருவாக்கி உலகம் முழுமையிலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கக்கூடிய நித்தியானந்த சுவாமிகள் என, ஆச்சிரமக் கட்டமைப்பு இமயமென வானுயர்ந்து நிற்கின்றன.
இஃது ஒருபுறமென்றால், மறுபுறத்தில் வட இந்தியாவின் இமாலயப் பிரதேசத்தில் தியானத்தில் இருக்கக்கூடிய சாதுக்கள்-துறவிகள்-ஞானிகள் மற்றும் இதற்கு மேலாக அகோரிகள் என பாரதப் பூமி ஞான பூமியாக தெய்வீகப் பொலிவுடன் விளங்குகிறது.
இங்கு தான் ஒரு விடயத்தை நாம் கவனித்தாக வேண்டும்.
அதாவது மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த சீரடி சாயிபாபா பிறப்பால் ஓர் இஸ்லாமியர்.
எனினும் அவரின் ஆன்மீகப் பணியும் தெய்வீக நிலையும் இந்துக்களால் அங்கீ கரிக்கப்பட்டு, அவர் ஓர் இந்து சமயத்தவர் போல வணங்கப்படுகிறார் என்பதற்குள் இந்திய தேசத்தில் இறைஞானம் எச் சமயத்தவரிடமும் இருக்கலாம்.
ஆனால் அவரின் அந்த வெளிப்படுகை இந்து சமயத்தினூடாக ஏற்பட்டால் மட்டுமே அது நிலைத்து நிற்கும் என்ற உண்மை உணர்த்தப்படுகிறது.
இந்திய மத்திய அரசு
பாரதிய ஜனதாக் கட்சி என்ற ஓர் அரசியல் கட்டமைப்பு இந்தியாவில் இல்லாதிருந்தால், இந்து மதம் மீள்எழுச்சி பெற்றிருக்க முடியுமா? என்ற கேள்வி எழுவதில் நியாயம் இருக்கவே செய்கிறது.
ஆம், இந்தியக் காங்கிரஸ் ஆட்சியில் மத சார்பின்மை என்ற கொள்கை பின்பற் றப்பட்டது. மத சார்பின்மை என்ற கொள்கையை இந்திய காங்கிரஸ் கொண்டிருந்தாலும் அன்னை இந்திராகாந்தி தன் கழுத்தில் சிவசின்னமாகிய உருத்திராட்ச மாலையை அணிந்திருந்தார் என்பதும் அவர் தனது வெளிநாட்டுப் பயணங்களின் போதும் உருத்திராட்ச மாலையைக் கைவிடவில்லை என்பதும் இங்கு கவனிக்கப்பட வேண்டும்.
அதுதவிர, இராஜராஜ சோழ மன்னனின் சிலையை தஞ்சைப் பெருங்கோவிலில் பிரதிஷ்டை செய்வதற்கான ஏற்பாடுகள் அன்றைய தமிழக முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆரால் முன்னெடுக்கப்பட்டது.
இராஜராஜ சோழ மன்னனின் சிலையை தஞ்சைப் பெருங்கோவிலில் பிரதிஷ்டை செய்கின்ற அப்பெரும் விழாவில் அன்றைய இந்தியப் பிரதமர் அன்னை இந்திரா காந்தி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார் என்பதற்குள் மதச்சார்பின்மை என்பது கொள்கையாக இருந்தாலும் அன்னை இந்திரா காந்தியின் வாழ்வு இந்து சமயத்தை முழுமையாகப் பின்பற்றுதலோடு பின்னிப் பிணைந்திருந்ததென்பதை மறுக்கவும் மறுதலிக்கவும் முடியாது.
இது தவிர, ஆரியத்திற்கு எதிராக எழுந்த திராவிட சிந்தனை தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் பரந்திருந்ததாயினும் இந்து ஆலயத்தின் அடையாளமாக இரு க்கக்கூடிய இராஜகோபுரமே தமிழக அரசின் இலட்சனையாக இருப்பதற்குள் இந்து மதத்தை ஓரங்கட் டுவதை திராவிட அமைப்புகளாலும் செய்து விட முடியாதென்பது உறுதி செய்யப்படுகிறது.
(இனி இந்து சமயம் தொடர்பில் தமிழக அரசுகளின் போக்குக் குறித்துப் பார்க்கலாம்.)
தொடரும்…


