20 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் இந்திய மாம்பழங்களுக்கு தடை விதித்த ஜப்பான்
Share
1986 ஆம் ஆண்டு பழ ஈக்கள் அச்சுறுத்தல் காரணமாக இந்திய மாம்பழங்களுக்கு, ஜப்பான் தடை விதித்திருந்தது. பின்னர் 20 ஆண்டுகளுக்கு பிறகு 2006 ஆம் ஆண்டு அந்த தடை நீக்கப்பட்டதால், ஜப்பானுக்கான மாம்பழ ஏற்றுமதி மீண்டும் தொடங்கியது .இந்நிலையில் மீண்டும் 20 ஆண்டுகளுக்கு பின்பு இந்திய மாம்பழங்களை இறக்குமதி செய்வதற்கு ஜப்பான் தடை விதித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம், உத்தரப் பிரதேசத்தின் ரஹ்மான்பூரில் உள்ள பதப்படுத்தும் ஆலையில் (VHT) ஜப்பானிய அதிகாரிகள், ஆய்வு மேற்கொண்டபோது, மாம்பழங்களைக் கிருமி நீக்கம் செய்யப் பயன்படுத்தப்படும் புகைமூட்டும் செயல்முறையில் குறைபாடுகள் இருந்ததை அவர்கள் கண்டறிந்ததாக கூறப்படுகிறது.
இந்திய மாம்பழங்களை இறக்குமதி செய்வதற்கு ஜப்பானின் யோகோஹாமா தாவரப் பாதுகாப்புச் சங்கம் தடை விதித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், இறக்குமதியை மீண்டும் தொடங்குவதற்கான காலக்கெடு எதுவும் குறிப்பிடப்படவில்லை.
இந்திய ஆலைகளில் செயல்பாட்டுத் தரங்கள் மேம்பட்டுள்ளன என்பதில் ஜப்பானிய அதிகாரிகள் திருப்தி அடையும் வரை, இறக்குமதி இடைநிறுத்தம் செய்யப்படும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அல்போன்சோ, கேசர், லங்ரா மற்றும் பங்கனபள்ளி ஆகிய முக்கிய ரக இந்திய மாம்பழங்களின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளன.


