Type to search

Editorial

நீளும் காலதாமதங்கள் நீதியைத் தடுக்க வல்லவை

Share

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கம் நீதியை நிலைநாட்டுவதில் தீவிர மாக இருப்பதைக் காணமுடிகிறது.

ஆம், மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்திலும் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த வேளையிலும் நடந்த ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவது அநுர அரசு மீது நம்பிக்கையைத் தருவதாகும்.

அதிலும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அழைத்து, விசாரணை நடத்தியிருப்பது நீதி பரிபாலனத்தில் ஏற்பட்ட மிகப்பெரும் முன்னேற்றம் எனலாம்.

ஆம், இந்த நாட்டின் ஜனாதிபதியாக – அமைச்சராக – அரசியல்வாதியாக இருந்தால், சட்டத்தை மதிக்காமல் – சட்டத்தை மீறிச் செயற்பட முடியும் என்ற நினைப்பு இந்த நாட் டின் அரசியல் கட்டமைப்பில் ஊழல் தலைவிரித்தாடுவதற்கு வழிவகுத்தது.

அந்த அடிப்படையிலேயே கடந்த கால ஆட்சியில் இருந்தவர்கள் தங்களுக்கு இருக் கக்கூடிய அதிகாரங்களைப் பயன்படுத்தி ஊழல் மோசடிகளைச் செய்து, பல தலைமுறைகளுக்குப் போதுமான சொத்துக்களைச் சேர்த்துக் கொண்டனர்.

வேலியே பயிரை மேய்கின்ற அபத்தம் காரணமாக நம் நாடு பொருளாதார ரீதியில் கந்தறுந்து போனது.

அதேவேளை ஆட்சியில் இருந்தவர்களின் ஊழல் நடவடிக்கைகளுக்குத் துணைபோனவர்கள் விசாரணைகளை எதிர்கொள்ள முடியாமல் தங்கள் உயிர்களை மாய்த்துக் கொள்கின்றனர் அல்லது அதிகாரத்தில் இருந்த போது இலஞ்சம் பெற்றவர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளை மர்மமான முறையில் தீர்த்துக்கட்டுகின்றனர் எனக் கூறுமளவில் சமகால சூழ்நிலை உள்ளது.

இது தவிர, இந்த நாட்டில் இடம்பெற்ற ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் இன்னமும் குற்றவாளிகள் அடையாளப்படுத்தப்படவில்லை.

எனினும் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் விசாரணைகளில் இருந்து தாக்குலை நடத்தியவர்கள் – அதற்குத் துணைபோனவர்கள் – தாக்குதலை நடத்தியதன் நோக்கம் என்பன வெளிப்பட்டுள்ளன.

ஆம், ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகவே ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் மேற் கொள்ளப்பட்டது என அமைச்சர் ஒருவர் பாராளுமன்றத்தில் கூறியமை குற்றவாளிகள் யார் என்பதை மறைமுகமாகச் சுட்டி நிற்கிறது.

ஆக, இலஞ்ச ஊழல் மற்றும் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பில் சம்பந்தப்பட்டவர் களை நோக்கி நீதியின் கரங்கள் நெருங்குகின்றன.

ஆயினும் நீளும் காலதாமதங்கள் நீதி கிடைப்பதைத் தடுத்துவிடும் வல்லமை கொண் டவை என்பதால், குற்றவாளிகளுக்கான தண்டனைகளை விரைவுபடுத்துவதன் மூலமே இந்த நாட்டில் இலஞ்ச, ஊழல் மோசடிகளையும் ஈனத்தனமான தாக்குதல்களையும் தடுத்து, நாட்டை சமாதானப்பாதையில் கொண்டு செல்ல முடியும்.

வலம்புரியின் ஆசிரியர் தலையங்கம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link