அறிவுறுத்தலும் அச்சுறுத்தலும்
Share
அறிவுறுத்தல் என்பதும் அச்சுறுத்தல் என்பதும் ஒன்றன்று. அறிவுறுத்தல் என்பது விழிப்படைய வைப்பதற்கானது. அச்சுறுத்தல் என்பது பயப்படுத்துவதற்கானது.
பொதுவில் எந்தவிடயமாயினும் அது சார்ந்து அறிவுறுத்தல்களை வழங்கி, மக்களை விழிப்படையச் செய்தல் வேண்டும். உதாரணத்திற்கு உலகப் பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய மந்த நிலை மற்றும் உணவுக்கான தட்டுப்பாடு என்பன குறித்து ஐ.நா சபை அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது.
ஐ.நா சபையின் இந்த முன்னறிவித்தல் உலக மக்களை விழிப்படையச் செய்வதற்கான தாகும். இருந்தும் உலகில் பெரும் உணவுப் பஞ்சம் ஏற்படப்போவதாக உரத்துக் கூறுவதானது, மக்களை அச்சுறுத்தி அவர்களைப் பயப்படுத்துவதற்கான ஏற்பாடாகும்.
உண்மை. அண்மைய நாட்களாக உலகப் பொருளாதாரம் தொடர்பிலும் உள்நாட்டின் பொருளாதாரம் குறித்தும் அபாயச்சங்கொலி எழுப்பப்பட்ட வண்ணமுள்ளன.
அதிலும் நாட்டின் கையிருப்பிலுள்ள அமெரிக்க டொலரின் அளவு கணிசமாகக் குறைந்துள்ளது. எனவே இறக்குமதிகளைக் கட்டுப்படுத்துங்கள் என இந்த நாட்டின் ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.
உண்மையில் டொலரின் கையிருப்புக் குறைவதாக இருந்தால், அதற்கான உடன் நடவடிக்கை இறக்குமதியைக் கட்டுப்படுத்துவதாகும். அதிலும் இறக்குமதிகளைக் கட்டுப்படுத்தல் என்பது ஆடம்பர இறக்குமதிகளைக் குறிப்பதாகும்.
ஏனெனில், உள்நாட்டு உற்பத்தி நடவடிக்கைகள் மற்றும் தொழில்முயற்சிகளுக்கான மூலப்பொருட்கள் என்பது இறக்குமதியினூடாகக் கொண்டு வரப்படும் பட்சத்தில், அதன் இறக்குமதியைத் தடுப்பது ஏற்புடையதன்று.
தவிர, பொருளாதார வீழ்ச்சி – பணவீக்க அதிகரிப்பு – உணவுப்பஞ்சம் என மக்களைப் பயப்படுத்தும் வகையில் அரசாங்கம் அறிக்கைகளை விடுவதும் அவ்வளவு பொருத்தப்பாடானதல்ல.
உண்மையில் அரசியலில் மட்டுமல்ல, பொருவியலினும் சில இரகசியங்களை இலங்கை அரசாங்கமும் மத்திய வங்கியும் பேணிப் பாதுகாக்க வேண்டும்.
அப்போது தான் பொருளாதாரம் குறித்த அச்சத்தில் இருந்து மக்களை விடுவிக்க முடியும். இருந்தும் அரசாங்கத்தின் அண்மைக்கால அறிவிப்புகள் பொருட்களின் விலைகளைக் கண்டபாட்டில் உயர்த்துவதற்கு வாய்ப்பளிக்கிறது.
ஆம், பொருளாதார மந்தம் ஏற்படவுள்ளது. உணவுப்பஞ்சம் உருவாகப் போகிறது என்ற எச்சரிக்கைகள் கொள்ளை இலாபமடிக்கும் வர்த்தகர்களுக்கு வாய்ப்பாக அமைவதுடன் அது ஏழை மக்களின் வயிற்றில் அடிப்பதாகவும் ஆகிவிடுகிறது.
எனவே பொதுவான அறிவுறுத்தல்களை வழங்கி மக்களை விழிப்படையச் செய்வதே உகந்தது.
வலம்புரியின் ஆசிரியர் தலையங்கம்.


