ஒரே நாளில் 274 பேர் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து புதிய சாதனை!
Share
274 மலையேற்ற வீரர்கள் உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட் சிகரத்தை (8,849 மீற்றர்) ஒரே நாளில் நேபாளப் பகுதியூடாக சென்றடைந்து புதிய உலக சாதனை படைத்துள்ளதாக நேபாள மலையேற்றக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
எவரெஸ்ட் வரலாற்றில் ஒரே நாளில் இத்தனை அதிகமானோர் சிகரத்தைத் தொட்டது இதுவே முதல் முறையாகும்.
மலையேற்ற வீரர்கள் நேபாளம் மற்றும் சீனாவின் திபெத் ஆகிய இரு பகுதிகளிலிருந்தும் எவரெஸ்ட்டை அடைய முடியும் என்ற போதிலும், நடப்பு ஆண்டில் சீன அதிகாரிகள் எவ்வித அனுமதிகளையும் வழங்காததால் திபெத் பகுதியில் மலையேற்றம் முற்றிலும் முடங்கியுள்ளது. இதனால் அனைத்து சர்வதேச மலையேறுபவர்களும் நேபாளத்திலான பாதையையே பயன்படுத்தியுள்ளனர்.
கின்னஸ் உலக சாதனைகளின்படி, இரு பக்கங்களையும் சேர்த்து ஒரே நாளில் 354 பேர் சிகரத்தை அடைந்ததே ஒட்டுமொத்த சாதனையாகும். தற்போது நேபாளப் பகுதியில் மட்டும் 274 பேர் சிகரத்தை எட்டியுள்ளனர். சிகரத்தை அடைந்த மேலும் சிலமலையேற்ற வீரர்கள் இன்னும் தங்களின் அடிப்படை முகாமிற்கு தகவல் வழங்காததால், இந்த எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என நேபாள மலையேற்ற ஆபரேட்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரிஷி பண்டாரி தெரிவித்துள்ளார்.
முதற்கட்ட தகவல்களின்படி 250 க்கும் மேற்பட்டோர் சிகரத்தை எட்டியுள்ளது உறுதியாகியுள்ளது. எனினும், மலையேறுபவர்கள் அனைவரும் முகாமிற்குத் திரும்பி வந்து, தங்களின் புகைப்படங்கள் மற்றும் இதர சான்றுகளை சமர்ப்பித்த பின்னரே இறுதி எண்ணிக்கை உத்தியோகபூர்வமாக உறுதி செய்யப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்படும் என நேபாள சுற்றுலாத்துறை அதிகாரி ஹிமால் கௌதம் தெரிவித்துள்ளார்.
அத்தோடு இதற்கான கட்டணமாக தலா 15,000 அமெரிக்க டொலர்கள் வசூலிக்கப்படுகிறது மேலும் ஒரே நாளில் இவ்வளவு அதிகமானோர் மலையேறுவது கடுமையான ‘போக்குவரத்து நெரிசலை’ உருவாக்கம் என பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பது உயிராபத்தை விளைவிக்கக்கூடும்.எனினும், போதுமான ஆக்ஸிஜன் இருப்பு மற்றும் முறையான திட்டமிடல் இருந்தால் இந்த எண்ணிக்கை பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என ஆஸ்திரியாவைச் சேர்ந்த மலையேற்ற அமைப்பாளர் லூகாஸ் ஃபர்டன்பாக் தெரிவித்துள்ளார்.


