தரிசனம்
Share
இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனமும் 8
தந்தை செல்வாவின் உரைகளைத் தொகுத்த தென்னிந்தியத் திருச்சபையின் முன்னாள் பேராயர் கலாநிதி எஸ்.ஜெபநேசன் அவர்கள், தந்தை செல்வாவின் 49 ஆவது நினைவு தினமாகிய கடந்த 26.04.2026 அன்று வலம்புரி நாளிதழின் 22 ஆம் பக்கத்தில் தந்தை செல்வாவின் தீர்க்கதரிசன உரைகள் எனக் கட்டுரைத் தொகுப்பை வழங்கியிருந்தார்.
தந்தை செல்வநாயகம் அவர்கள் ஆற்றிய ஓர் உரையில் அவர் பின்வருமாறு கூறுகிறார்.
“தமிழ் மக்களுக்கு சுயாதீனம் கிடைத்தால், பெரும்பான்மையாக உள்ள இந்து சமயத்தினர் சிறுபான்மையான கிறிஸ்தவர்களை துன்புறுத்துவர் என்பது உண்மையே.
இதற்காக தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை மழுங்கடித்து விடக் கூடாது…” என்பதாக அவரின் உரை அமைந்திருந்தது.
தந்தை செல்வா ஆற்றிய மேற்படி உரை ஆற்றப்பட்ட ஆண்டு பற்றிய குறிப்புரைகள் எதனையும் பேராயர் ஜெபநேசன் அவர்கள் குறித்துரைக்க வில்லை.
தந்தை செல்வாவின் உரைகளின் தொகுப்பாக அது இருந்ததன் காரணமாக குறித்த உரை ஆற்றப்பட்ட ஆண்டு பிரஸ்தாபிக்காமல் விடப்பட்டிருக்கலாம்.
ஆக, தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை கிடைத்தால், பெரும்பான்மையாக இருக்கக் கூடிய இந்துக்கள் சிறுபான்மையான கிறிஸ்தவர்களைத் துன்புறுத்துவர் என்ற கற்பனைவாத நோய் தந்தை செல்வாவிடம் இருந்துள்ளதென்பது இங்கு உறுதி யாகிறது.
ஆம், தமிழ் மக்கள் அதிலும் குறிப்பாக சைவத் தமிழ் மக்கள் தந்தை செல்வாவைத் தமிழ் இனத்தின் தலைவராக ஏற்றிப் போற்ற, தந்தை செல்வா; சைவ மக்கள் மீது ஐயம் கொண்டிருந்தார் என்பதனூடு, தமிழ் மக்களுக்கு ஏற்ற அரசியல் தலைவர்கள் இதுவரை வாய்க்கவில்லை என்ற உண்மை உறுதியாகிறது.
ஆம்,மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகவும் ரணில் விக்கிரமசிங்க பிர தமராகவும் இருந்தபோது, புதிய அரசியலமைப்புச் சீர் திருத்தம் கொண்டுவரப்படு வதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றன.
புதிய அரசியலமைப்புக் குறித்து பெளத்த பீடங்கள் மெளனமாகியிருந்த வேளை, புதிய அரசியலமைப்புச் சீர்திருத்தம் எந்த வகையிலும் பெளத்தத்திற்கான அதிகாரத்தைக் குறைத்து விடக்கூடாது எனக் கூறியவர் கொழும்பு கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை என்பதை நினைக்கும் போதும்-தமிழ் இனத்தின் அரசியல் தலைவராக தென்னிந்தியத் திருச்சபை சார்ந்த தந்தை செல்வாவை சைவ மக்கள் ஏற்றுக் கொண்டிருந்த போதிலும் தந்தை செல்வநாயகம் ஆற்றிய உரையை நினை க்கும் போதும் எங்கள் இனம் இத்துணை தூரம் துன்பப்படுவதற்கான கார ணம் என்ன என்பதை இப்போது அனுமானிக்க முடிகிறது.
ஆம், தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை கிடைத்தால் பெரும்பான்மை இந்துக்கள் சிறுபான்மையான கிறிஸ்தவர்களை துன்புறுத்துவர் என்ற தந்தை செல்வாவின் வார்த்தைகள் மிகவும் உக்கிரமானவை.
ஆம், தமிழர் தாயகத்தில் இந்துக்கள் ஒருபோதும் கிறிஸ்தவர்களை பகை கொண்டு நோக்கியதில்லை.
தவிர, ஒரு குடும்ப உறவுகளுக்குள்ளேயே சைவமும் கிறிஸ்தவமும் கலந்திருந்தன.
இந்நிலையில் கிறிஸ்தவர்களை இந்துக்கள் துன்புறுத்துவர் என்ற மிக மோசமான வார்த்தையை தந்தை செல்வநாயகம் அவர்கள் பிரயோகித்தமைக்கான காரணம் அவரின் தனிப்பட்டதாக இருக்க நியாயமில்லை.
இருந்தும் அவர் கூறிய வார்த்தைகளின் வலி அவர் நெஞ்சை நிச்சயம் சுட்டிருக்க வேண்டும்.
அதனாலன்றோதன் பூதவுடலை சைவ முறைப்படி தகனம் செய்யுமாறு தந்தை செல்வநாயகம் தனது அந்திம காலத்தில் கூறினார் என்று கருதுவதும் ஏற்புடையதே.
எது எவ்வாறாயினும் நம் ஈழத்திருநாடு சிவபூமி எனப் போற்றப்படுவது. சிவபூமியில் சமயப் பேதமைக்கு இடமேதுமில்லை.
இருந்தும் மன்னார் திருக்கேதிச்சரத்தின் நுழைவாயில் வளைவை அடித்து-உடைத்து-நொருக்கி சைவ மக்களின் வழிபாட்டு நந்திக்கொடியை சப்பாத்துக் கால்களால் உழைக்கி பெரு நிந்தை செய்த மன்னார் கத்தோலிக்க குருமார் என்றோ ஒரு நாள் தாம் செய்த சைவசமய நிந்தைக்காக மனம் வருந்துவர்.
ஏனெனில் பிதாமகன் யேசுபிரான்; உன்னைப் போல் மற்றவர்களையும் நேசிக்குமாறு மனித குலத்திற்கு போதனை செய்கிறார்.
பிதாமகனின் போதனை களை சுமக்கும் பொருட்டு துறவு வாழ்க்கை மேற் கொண்ட கத்தோலிக்க குருமார் இன்னொரு சமயத்தை நேசிக்காமல், தூசிப்பதை பரமபிதா ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்.
தொடரும்…


