Type to search

Articles Headlines தரிசனம்

தரிசனம்

Share

10.04.2026 தொடர்ச்சி

இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனமும் 6

தரிசனத்தின் இரண்டாம் அங்கமாக இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனமும் என்ற விடயப் பொருளை தரிசனத்திற்காக எடுத்திருந்தோம்.

ஐந்து அத்தியாயங்கள் வெளிவந்த நிலையில், தவிர்க்க முடியாத சில காரணங்களால் தரிசனம் தொடர்ச்சியாக வெளிவர முடியாமல் போயிற்று.

அதற்காக மனம் வருந்துகின்றோம். எனினும் மீண்டும் தரிசனம் வெளிவருகிறது.

கடந்த தொடர்களில் இலங்கையில் இந்து சமயத்தின் நிலை குறித்து ஆராய்ந்திருந்தோம்.

அன்னியராட்சியில் கல்வி, வேலைவாய்ப்பு என்பவற்றுக்காக மதம் மாறிய சிங்களத் தலைவர்கள் மீளவும் பெளத்த மதத்தைத் தழுவிக் கொண்டனர் என்பதை இவ்விடத்தில் குறித்துரைத்து; தந்தை செல்வ நாயகம் தென்னிந்தியத் திருச்சபையினின்றும் விலகி மீளவும் தாய்ச் சமயமாகிய சைவ சமயத்தைத் தழுவ வில்லை என்பதைச் சுட்டிக் காட்டியிருந்தோம்.

இது குறித்துப் பலரும் தமது கருத்துக்களைப் பதிவு செய்தனர். அதில் தந்தை செல்வநாயகம் அவர்கள் தனது உடலை சைவ முறைப்படித் தகனம் செய்யும்படி கூறியிருந்தார் எனவும் அவரின் விருப்பப்படி அவரின் உடல் தகனம் செய்யப்பட்டது எனவும் தெரிவித்திருந்தனர்.

உண்மை, தந்தை செல்வ நாயகம் அவர்களின் புகழுடல் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த போது; பாடசாலை மாணவர்களாக அவருக்கு அஞ்சலி செலுத்திய நினைவும் மாணவர்கள் கூட்டாக இருந்து சிவபுராணம் பாடிய ஞாபகமும் இன்னமும் எம் ஆழ்மனதில் அப்படியே இருக் கிறது.

இங்கு தந்தை செல்வ நாயகம் தனது பூதவுடலை சைவ முறைப்படித் தகனம் செய்யுமாறு கூறியதற்கு மூல காரணம்; தளபதி அமிர்த லிங்கம், தர்மலிங்கம், சிவ சிதம்பரம், யோகேஸ்வரன் உள்ளிட்ட தலைவர்கள் சைவ சமயத்தவர்களாக இருந்த போதிலும் தந்தை செல்வ நாயகத்தைத் தங்களின் தலைவராக ஏற்றுக் கொண்டு அவரின் கட்டளையைச் சுமந்து பணியாற்றினர்.

எந்தச் சந்தர்ப்பத்திலும் அவர்கள் தந்தை செல்வநாயகத்தைத் தென்னிந்தியத் திருச்சபையைச் சார்ந்தவர் என நினைத்ததில்லை.

ஆனால் தந்தை செல்வ நாயகம் அவர்கள் சைவ சமய சடங்குகளைத் தவிர்த்து வந்தார் என்ற தகவல்கள் உண்டு.

ஒரு முறை ஒரு நிகழ்வின் பொருட்டு சைவாலயத்திற்கு தந்தை செல்வநாயகத்தை அழைத்துச் சென்ற போது, ஆலய சிவாச்சாரியார் திருநீற்றுப் பிரசாதத்தைக் கொடுப் பதற்காக தந்தை செல்வ நாயகத்தை அணுகிய வேளை, தந்தை செல்வா பின்நோக்கி நகர்ந்தார் என மூத்த பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் அவர்கள் ஒரு சந்தர்ப்பத்தில் கூறியிருந்தார்.

ஆக, அந்திம காலத்தில் தனது உயிர் பிரிந்த பின்னர் தனது உடலை சைவ முறைப்படித் தகனம் செய்யும்படி தந்தை செல்வநாயகம் கூறியதற்கு, சைவ மக்களும் தளபதி அமிர்தலிங்கம் போன்றவர்களும் தன் மீது கொண்ட மாறாத பற்றுக் காரணமேயன்றி வேறில்லை.

ஆம், மதம் மாறிய நம்மவர்கள் மீளவும் எங்கள் தாய்ச் சமயமாகிய சைவ சமயத்திற்குத் திரும்ப வேண்டும் எனத் தந்தை செல்வநாயகம் கூறவோ அன்றி, தனது குடும்பத்தினரைச் சைவ சமயத்தைப் பின்பற்றுமாறு கூறவோ இல்லை.

ஆனால் மதம் மாறிய சிங்களத் தலைவர்கள் சுதந்திர இலங்கையில் தாம் பெளத் தர்களாக இருக்க வேண்டும். இந்த நாடு பெளத்த நாடு. மதம் மாறிய நாம் மீளவும் பெளத்தத்தைத் தழுவா விட்டால், பெளத்த சிங்களம் என்பது இல்லாது போய்விடும். அந்த நிலைமையானது இலங்கை என்ற இந்த நாட்டின் மீது நாம் உரிமை கொள் வதற்குத் தடையாக இருக்கு மெனக்கருதியதன் பால், அவர்கள் தங்கள் தாய்ச்சமய மாகிய பெளத்தத்திற்கு மீளவும் வந்துள்ளனர்.

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அறைகூவல் விடவில்லை.

மேற்படி விடயத்தை நாம் கூறும் போது, மதம் மாறிய நம் உறவுகள் மீளவும் தாய்ச் சமயமாகிய சைவசமயத்திற்கு வர வேண்டும் என ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மற்றும் சைவப் பெருவள்ளல் சேர்.பொன் இராமநாதன் போன்றவர்கள் அறைகூவல் விடுக்கவில்லை.

உண்மையில் மேற்குறித்த தலைவர்கள்; மதம் மாறியவர்களைத் தாய்ச்சமயத்திற்கு அழைத்திருந்தால், அவர்கள் மீளவும் சைவ சமயத்தைத் தழுவக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கும்.

இங்கு தான் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அவர்கள் பிறமதங்களும் நம் மண்ணில் சீவிப்பதற்கு இடம் கொடுக்க வேண்டும் எனக் கருதியுள்ளார் என அனுமானிக்க முடிகிறது. அவ்வாறு அனுமானிப்பதில் குற்றம் இருப்பதாகவும் தெரியவில்லை.

தொடரும்…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link