Type to search

Editorial

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது அரசுக்கு சாதகம்

Share

மாகாண சபைத் தேர்தல் இந்த வருடத்திற்குள் (2026) நடத்தப்படுமென விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிரிஷாந்த அபயசேன தெரிவித்துள்ளார்.

மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண் டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வரும் நிலையில், அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு எம் தமிழ்த் தரப்புகளை உற்சாகப்படுத்தும் என்பதில் மாற்றுக் கருத்திருக்க முடியாது.

ஆம், ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதில் இழுத்தடிப்பு செய்வது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நினைப்பாக இருந்த போதிலும் எதிர்க்கட்சிகளின் அழுத்தமும் சர்வதேச நாடுகளின் வலியுறுத்தல்களும் காரணமாக, ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டியதாயிற்று.

ஜனாதிபதித் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றிபெற்றதையடுத்து,

தேர்தல்களை நடத்துவதில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மிகவும் கரிசனை கொண்டிருந்தார்.

அதன் பிரகாரம் பொதுத் தேர்தல், உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஆகியவற்றை நடத்தி முடித்த ஜனாதிபதி அநுர, மாகாணசபைத் தேர்தலை நடத்துவதில் அக்கறை கொண்டி ருந்தாலும் சில தடைகளை அவர் எதிர்கொள்ள வேண்டியதாயிற்று.

அதாவது, மாகாணசபைத் தேர்தலை பழைய முறையில் நடத்துவதில் ஏற்பட்ட சட்டச் சிக்கல்கள் காரணமாக மாகாண சபைத் தேர்தல் காலதாமதமாயிற்று.

இவ்வாறு மாகாண சபைத் தேர்தல் காலம் கடப்பது கூட, அநுரவின் அரசாங்கத்திற்குச் சாதகம் என்றே கூறலாம்.

ஆம், மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் எனக் கோரிக்கை முன் வைத்த எதிர்க்கட்சிகள் மாகாணசபைத் தேர்தலை நடத்துகின்ற எண்ணம் அநுர அர சாங்கத்திடம் இல்லை எனக் குற்றச்சாட்டின.

கூடவே மாகாணசபைத் தேர்தலை தமிழ்த் தரப்புகளும் வலியுறுத்தின.

இங்கு மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு எதிர்க்கட்சிகள் முன்வைக்கின்ற கோரிக் கையை விட, அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளும் மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு கோருவதென்பது அரசாங்கத்திற்குப் பலமாக அமைகிறது.

அதாவது மாகாண சபை நிர்வாகம் என்பது இனப் பிரச்சினைக்குத் தீர்வாக முன்வைக்கப்பட்ட கட்டமைப்பாகும்.

எனினும் ஆரம்ப காலங்களில் மாகாணசபை என்பது எங்களுக்கான தீர்வல்ல என்ற நிலைப்பாட்டில் இருந்த தமிழ் அரசியல் கட்சிகள், சமஷ்டியே இனப் பிரச்சினைக்கான தீர்வு எனக் கூறிவந்தன.

நிலைமை இதுவாக இருக்கையில், மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் எனத் தமிழ் அரசியல் கட்சிகள் கேட்பதானது, மாகாண சபைக் கட்டமைப்பை தமிழ்த் தரப்புகள் ஏற்றுக் கொள்வதற்கான அறிகுறியாக அமைகிறது.

எனவே இத்தகையதொரு சூழமைவை எதிர்பார்த்திருந்த அநுர அரசு; 2026 ஆம் ஆண்டிற்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடிவு செய்துள்ளது.

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதன் மூலம் நாட்டில் அதிகாரப் பரவலாக்கல் நடை முறைப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் அரசாங்கம் சர்வதேச சமூகத்தில் உரக்கக் கூறிக் கொள்ளும் என்பது நிறுதிட்டமான உண்மை.

வலம்புரியின் ஆசிரியர் தலையங்கம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link