Type to search

Articles ஆச்சி அறிவுரை

ஆச்சி அறிவுரை

Share

நோயாளி இறந்து ஒருவருடம் கழிந்தது சத்திர சிகிச்சைக்கு திகதி பிறந்தது பேராண்டி…

“கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் எதற்கு” எண்டொரு பழமொழியுண்டல்லோ. அதின்ர பொருள் தெரியும்தானே. அதததை அந்தந்தக் காலத்தில் செய்திடவேணும். அப்பிடிச் செய்யாமல் விட்டிட்டு, எல்லாம் முத்தி வெடிச்சதுக்குப் பிறகு பலன் தேடிப் பரிகாரம் செய்யிறதிலை எந்தப் பிரயோசனமும் இல்லை.

ஓம் பேராண்டி, அண்டைக்குத் தாத்தாவின்ர நெருங்கின சொந்தக்காரர் ஒருத்தர் வீட்ட வந்திருந்தார்.

ஏதோ அலுவலா வந்தவராம். என்னையும் பாத்திட்டும் போவம் எண்டு வந்த வர் எண்டார்.

கிட்டடியிலதான் அவரின்ர அம்மா (மனைவி) தவறினவா. நான் மரண வீட்டுக்கும் போயிருந்தனான். பாவம் அவர் சரியா உடைஞ்சு போனார்.

எல்லாப் பெண்களும் தாங்கள் பூவோடையும் பொட்டோடையும் போக வேணும் எண்டு விரும்புவினம்.

ஆனாலும் நான் கண்டவரை, கணவன் இருக்க மனைவி இறந்தது போனால் அது கணவனைப் பெரும் துயரத்துக்குள்ளாக்கி விடும். தன்ர வாழ்க்கையின்ர எல்லாமுமாய் இருந்த மனைவியின்ர இறப்பு ஆண்களைப் பெரிதாகப் பாதித்துப்போடும்.

கணவனை இழந்த பெண்களை விதவை எண்டும் மனைவியை இழந்த கணவனை தபுதாரன் என்றும் சொல்லுற வழமை இருக்கு பேராண்டி.

வந்தவர் பலதும் பத்தும் பேசிக்கொண்டிருக்கேக்குள்ள, ஏன் நீங்கள் நல்லா உடைஞ்சு போனியள் எண்டு கேட்டன், மனிசனின்ர கண்ணில இருந்து கண்ணீர் ஆறாப் பெருகிட்டுது.

ஒரு மாதிரி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார். தண்ணீர் குடிக்கக் கொடுத்தன் குடிச்சார்.

போன செவ்வாய்க்கிழமை ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. யார் எண்டு கேட்டன். நாங்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில இருந்து கதைக்கிறம்.

அவாவின்ர பெயரச் சொல்லி அவருக்கு நீங்கள் யார்? எண்டு கேட்டினம். நான் கணவன். என்ன விசயம் சொல்லுங்கோ எண்டன்.

அவா இதய நோயாளிதானே. அவாவுக்கு இதய சத்திர சிகிச்சை செய்யிறதுக்கு திகதி தாறதுக்காகத்தான் கோல் எடுத்தனாங்கள் எண்டினம்.

எனக்கு சரியான கோபம் வந்திட்டுது. அம்மா! அவாவுக்கு இதய நோய் இருக்கெண்டு கண்டுபிடிச்சு, சத்திர சிகிச்சை செய்யவேணுமெண்டு சொல்லி மூண்டு வருசமாச்சு.

மாதா மாதம் கிளினிக் வரேக்குள்ள “ஐயா ஒப்பரேஷனுக்கு டேட் தருவியளோ?” எண்டு எவ்வளவு கெஞ்சியிருப்பன்.

இப்ப டேட் தர ஏலாது ஐயா! எண்டு சொல்லிச் சொல்லி அவா இறந்து இண்டைக்கு ஒரு வரிச திதி நாளில எடுக்கிறியளே?

காசு பணம் இருந்தால் நாங்கள் பிறைவேற்றாச் செய்திருப்பமே. நாங்கள் கெஞ்சிக் கேக்கேக்குள்ள நீங்கள் திகதி தரேல்ல. இப்ப நீங்கள் திகதி தார நேரம் அவா உயிரோட இல்லை எண்டன்.

மன்னிச்சுக் கொள்ளுங்கோ ஐயா! எண்டு சொல்லிபோனை வைச்சிட்டினம்.

எண்டு சொல்லிக் கொண்டிருக்கவே அவரின்ர கண்ணால கண்ணீர் பீறிட்டு ஓடுது பேராண்டி.

நான் அவரின்ர தோழில தொட்டு யோசிக்காதீங்கோ! விதிப்பயன் எதுவோ அதுவே நடக்கும் எண்டன்.

அவரும், எல்லாம் அந்த வீரகத்தியானுக்குத் தெரியும்.

அவன் பார்த்துக் கொள்ளுவான் எண்டு பெருமூச்சு விட்டபடி புறப்பட்டார்.

ஆச்சி வருவா…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link