மாலத்தீவில் ஆழ்கடல் குகை ஆய்வில் ஈடுபட்ட 5 பேர் பலி!
Share
மாலத்தீவில் கடலுக்கு அடியில் உள்ள ஆழமான குகை ஒன்றை ஆய்வு செய்யும் முயற்சியில் ஈடுபட்ட இத்தாலி நாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் பேராசிரியை, அவரது மகள் உட்பட 5 நீச்சல் வீரர்கள் (Divers) மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இத்தாலியின் புகழ்பெற்ற ஜெனோவா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் பேராசிரியை மோனிகா மான்டெ பால்கோன், அவரது மகள் ஜியோர்ஜியா உள்பட 4 ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஒரு படகு பயிற்றுநர் ஆகிய 5 பேர் கொண்ட குழுவினரே இந்த விபத்தில் சிக்கியுள்ளனர். இவர்கள் மாலத்தீவின் ‘வாவூ அட்டோல்’ என்ற ஆழ்கடல் பகுதிக்கு ஆராய்ச்சிப் பணிக்காகச் சென்றுள்ளனர்.
சுமார் 60 மீட்டர் ஆழத்தில் உள்ள இருண்ட கடல் குகைக்குள் அவர்கள் நுழைந்து ஆய்வு செய்துகொண்டிருந்தபோது, கடலில் திடீரென சக்திவாய்ந்த இராட்சத நீர்ச்சுழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக குகைக்குள் இருந்து அவர்களால் வெளியேற முடியாமல் போயுள்ளது. மேலும், கடலின் அந்த ஆழமான பகுதியில் நிலவிய கடும் ஆக்சிஜன் நச்சுத்தன்மை காரணமாக, அவர்கள் 5 பேரும் அடுத்தடுத்து மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட விபரங்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தவர்களில் இதுவரை ஒருவருடைய சடலம் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது. கடலில் நிலவும் மோசமான வானிலை காரணமாக ஏனைய நால்வரின் சடலங்களையும் மீட்பதில் கடும் சவால்கள் ஏற்பட்டுள்ளதாக மாலத்தீவு மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர். வானிலை சீரடைந்தவுடன் மீண்டும் மீட்புப் பணிகள் விரைவாக ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


