Type to search

Editorial

திருவள்ளுவர் கலாசார மையம் படும்பாடு காண்மின்களே!

Share

இந்திய மத்திய அரசின் நிதி உதவியில் யாழ்ப்பாண மக்களிற்காக அமைக்கப்பட்ட திருவள்ளுவர் கலாசார மையத்தை நிர்வகிப்பது தொடர்பில் இன்னமும் ஒரு தீர்க்கமான முடிவு எட்டப்படவில்லை.

இந்த அவலமான நிலைக்கு நாமே பொறுப்பாளிகள் என்பதை முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஆம், இந்திய மத்திய அரசினால் யாழ்ப்பாண மக்களுக்காக அமைக்கப்பட்ட திருவள்ளுவர் கலாசார மையத்தை பொறுப்பேற்கு மாறு யாழ்ப்பாண மாநகர சபையிடம் இந்திய தூதரகம் கேட்டிருந்தது.

எனினும் மண்டபத்தின் விஸ்தீரணத்தை கண்ட மாத்திரத்தில் பயந்தடித்த யாழ்ப்பாண மாநகர சபை, இத்துணை பெரிய கட்டிடத்தை – மண்டபத்தைப் பரிபாலனம் செய்ய எங்களால் முடியாது.

அதற்கான நிதியும் எங்களி டம் இல்லை என்று அப்போதைய யாழ். மாநகர சபை நிர்வாகம் அறிவித்து விட, திருவள்ளுவர் கலாசார மையத்தைத் தத்தெடுப்பது யார் என்ற கேள்வி எழலாயிற்று.

அன்று தொட்ட தழப்பம் இன்று வரை நீண்டு – அகன்று – ஆழமாகச் செல்கிறது.

இந்நிலையில் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மையத்தின் முகாமைத்துவப் பணிகளை மேற்கொள்வதற்கு நம்பிக்கைப் பொறுப்பு நிதியமொன்றை உருவாக்குவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

என்ன செய்வது எங்களின் கைகளுக்குள் இருக்க வேண்டிய ஒரு நிர்வாகத்தை நாங்கள் கைவிட, இப்போது புத்தசாசன அமைச்சு நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்தை அமைத்து அதன்மூலம் திருவள்ளுவர் கலாசார மையத்தை நிர்வகிப்பதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளது.

இவ்வாறு ஒரு நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்தின் கீழ் திருவள்ளுவர் கலாசார மையம் முகாமை செய்யப்படும் போது; அங்கு சிங்களப் பிரதிநிதிகளும் இடம்பெறுகின்ற ஏற்பாடுகள் நிச்சயம் இருக்கும்.

தவிர, எமது கலாசார நிகழ்வுகளுக்காக குறித்த மண்டபத்தைப் பெற்றுக் கொள்வதினும் தாமதங்கள், இழுத்தடிப்புகள், கேள்விகள், விளக்கங்கள் என ஏகப்பட்ட நிபந்தனைகள் முன்வைக்கப்படக்கூடிய நிலைமைகளும் உருவாகும்.

இவ்வாறான நிலைமைகள் எந்த நோக்கத்திற்காக – எந்த மக்களுக்காக இந்திய மத்திய அரசு கலாசார மண்டபத்தை அமைத்துக் கொடுத்ததோ அந்த நோக்கம் நிறை வேறாமல் போகக்கூடிய சந்தர்ப்பங்களும் உண்டு.

எனவே திருவள்ளுவர் கலாசார மையத்தை முகாமை செய்வதற்கான நிர்வாகக் கட்ட மைப்பானது யாழ்ப்பாணத்தை மையப்படுத்தியதாக இருப்பதுடன் அதில் இந்திய துணைத் தூதரகத்தின் கண்காணிப்பும் பங்கேற்பும் இருப்பது கட்டாயமானது.

இதை விடுத்து நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் என்ற அரச கட்டமைப்பு உருவாகுமாயின் அஃது தேவையற்ற குழப்பங்களைத் தோற்றுவித்து சுமூகநிலைக்கு குந்தகம் ஏற்படுத்தும்.

வலம்புரியின் ஆசிரியர் தலையங்கம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link