Type to search

Editorial

ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்

Share

“ஊழிற் பெரு பலியாவுள” என்பார் வள்ளுவர்.

இந்தப் பிரபஞ்சத்தின்கண் உள்ள அனைத்து ஜீவராசிகளும் ஊழ்வினையின் பாற்பட்டவை.

இங்கு ஊழ்வினை என்பது நல்வினை – தீவினை ஆகிய இரண்டையும் உள்ளடக்கியதாகும்.

இருந்தும் நடைமுறை உலகில் ஊழ்வினை என்றால் அது தீவினைப் பயன் எனக்கருதப்படுகின்றது.

உண்மையில் ஓர் உயிரினம் மகிழ்வாக இருப்பதற்கும் துன்பத்தில் வீழ்ந்து துடிப்பதற் கும் அதன் “ஊழ்” காரணம் என்பதை சிலப்பதிகாரத்தைத் தந்த இளங்கோ அடிகள் மிகத் தெளிவாக கூறிநிற்கிறார்.

ஆம், ஊழ்வினை பற்றி நாம் மிகத் தெளிவாக அறிந்திருப்பது அவசியம்.

ஏனெனில் இம்மையிலும் மறுமையிலும் உயிர்ப்புக்களின் அனுபவிப்புகள் ஊழ்வினைப் பயனின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுகின்றன.

ஆக, கன்மவினை பற்றி நாடாளும் மன்னர் முதல் சாதாரண மக்கள் வரை அறிந்து தம் வாழ்வில் எப்போதும் உண்மை, நேர்மை, நீதி, அகிம்சை ஆய அறங்களைப் பின்பற்ற வேண்டும்.

மாறாக, கன்மவினை தொடர்பில் நம்பிக்கையற்று, ஆணவச் செருக்குக் கொண்டு அதர்மக் காரியங்களைச் செய்யத் தலைப்படுவது அழிவிற்கான ஏற்பாடுகளேயன்றி வேறில்லை.

இது தொடர்பில் பல விடயங்களை இங்கு முன்வைக்க முடியும்.

உதாரணத்துக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ­ நேற்றுமுன்தினம் (12) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு முன் ஆஜராகியுள்ளார்.

இந்த நாட்டில் இரண்டு தடவைகள் ஜனாதிபதியாக இருந்த ஒருவர்; இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு முன் ஆஜராகி வாக்குமூலம் வழங்குவதென்பது மிகப்பெருத்த அவமானத்திற்குரியதாகும்.

அதாவது இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேற்றுமுன்தினம் மே மாதம் 12 ஆம் திகதி இலஞ்ச ஊழல் ஆணைக்குழு முன்தோன்றி அதிகாரிகளின் கேள்விகளுக்கு – குறுக்கு விசாரணைகளுக்குப் பதிலளித்துள்ளார்.

இதை நாம் கூறும்போது அப்படியே 2009 ஆம் ஆண்டு மே மாதம் 12 ஆம் திகதிக்கு வாருங்கள்.

வன்னி நிலப்பரப்பை ஒரு கணம் திரும்பிப் பாருங்கள். எங்கள் உறவுகளின் மரண ஓலம் உரத்துக் கேட்கிறது.

அதேவேளை, அப்போதைய ஜனாதிபதி மகிந்த நெஞ்சை உயர்த்தி ஆணவச் செருக்கு தலைக் கேறிய திமிரோடு நிற்கிறார்.

ஆகா! தமிழ் மக்களைக் கொன்றழித்து விடுதலைப் புலிகளை இல்லாதொழிக்கும் நானும் என் குடும்ப வாரிசுகளுமே இனி இந்த நாட்டின் மன்னர்கள் என்பது அவரின் நினைப்பாக இருந்தது.

இப்போது அந்த நினைப்புக்கு நடந்தது என்னவென்று பார்த்தீர்களா?

நடக்கவும் இருக்கவும் முடியாத அளவில் உடல் தளர்ந்து நிற்கும் அந்திம நேரத்தில், ஊழல் குற்றச்சாட்டின் கீழ் இப்படியயொரு அவமானம் முன்னாள் ஜனாதிபதி மகிந் தவுக்கு.

இதைத்தான் ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்கின்றார் சிலப்பதிகாரம் தந்த இளங்கோவடிகள்.

வலம்புரியின் ஆசிரியர் தலையங்கம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link