ஆச்சி அறிவுரை
Share
மாணவர்களைக் கண்கலங்கவைத்த பொலிஸ் அதிகாரியின் பேச்சுபேராண்டி…
தென்னிலங்கைப் பாடசாலை ஒன்றில் விழிப்புணர்வு நிகழ்ச்சியில கலந்துகொண்ட பொலிஸ் அதிகாரி பேசிய பேச்சைக் கேட்டு அந்தப் பள்ளிக்கூட மாணவர்கள், ஆசிரியர்கள் அழுதிருக்கிறார்கள்.
குறித்த சம்பவம் தொடர்பான காணொளி வெளியாகியிருந்தது. நானும் அதைப் பார்த்தனான்.
அந்தப் பொலிஸ் அதிகாரி அப்பிடி என்ன சொன்னவர், ஓம் பேராண்டி, அவர் பிள்ளைகளை பெற்றார் வளர்க்கிறதுக்கும் கல்வி கற்பிக்கவும், சமூகத்தில அவர்களை நல்ல நிலைக்குக் கொண்டுவாறதுக்கும், அவர்களைப் பாதுகாப்பான சூழலில வைச்சிருக்கிறதுக்கும் எவ்வளவு கஷ்ரப்படுகினம் எண்டு உணர்வுபூர்வமாப் பேசினவர்.
அதிலும் மாணவர்களைப் பார்த்து உங்கள் தந்தை உங்களுக்கு வாங்கித் தரும் புத்தக்கத்தில் அவரின் கைரேகை மட்டுமல்ல அவரின் இரத்தமும் தோய்ந்திருக்கும்.
அது எப்போதாவது உங்கள் கண்களுக்குத் தெரிந்திருக்கிறதா?
நீங்கள் அணிந்திருக்கும் வெள்ளை சட்டை அழுக்கில்லாமல் இருப்பதற்காக உங்கள் தந்தை எத்துணை அழுக்கு நிறைந்த இடங்களில் கஷ்ரப்படுகிறார் என்று உங்களுக்குத் தெரியுமா?
என்று அந்தப் பொலிஸ் அதிகாரி கேக்க, அங்க கூடியிருந்த அத்தனை மாணவர்களும் அழத் தொடங்கிட்டினம்.
உண்மைதான் பேராண்டி. பிள்ளைகளை வளர்த்தெடுக்கப் பெற்றார் படுற பாடிருக்கே, தங்கட சொந்த விருப்புக்களை ஓரம் கட்டிப்போட்டு பிள்ளைகளுக்காக, அதுகளே உலகமெண்டு வாழுற பெற்றோரின்ர தியாகத்தை உணர்ந்துகொள்ளாட்டி அது பிள்ளையில்லை எண்டுதான் நான் சொல்லுவன்.
பிள்ளைகளை வழிப்படுத்துறது சின்ன விசயம். ஆனால் அதுகளை வழிதவறிப் போகவிட்டால் அதுகளை மீட்கிறது இயலாத காரியம்.
பெற்றார் பிள்ளைகள் நல்லா வரவேணுமெண்டு இரவு – பகல் பாராமல் ரியூசன் ரியூசனா ஏத்தியிறக்க, ஆசிரியர்கள் அதுகளுக்கு கல்வியோட வாழ்க்கையையும் சொல்லிக் குடுக்காமல் தங்கட பெயரைக் காப்பாற்றுறதுக்குத் துடிக்க,
பிள்ளைகளுக்கு பிழை எது? பிறழ்வெதெண்டு தெரியாமல் வழிதவறிப் போடுதுகள்.
இந்தப் பொலிஸ் அதிகாரி போல நாலுபேர் இருந்தால் போதும். எந்தப் பிள்ளையும் வழிதவறிப் போகாது.
பேராண்டி இப்ப பிரசவ வாட்டுக்குள்ள தந்தை நிக்கவேணும் எண்டுற கலாசாரம் வந்திட்டுது.
சமூகம் கட்டமைப்புக்களைத் தாண்டி; உன்னை இந்த உலகிற்குக் கொண்டுவர உன் தாய் பட்டபாட்டை உணருறதுக்கு அது ஏதுவாய் இருக்கும்.
ஆச்சி வருவா…


