Type to search

Editorial

காலதாமதமாகும் தண்டனைகள் குற்றங்களைக் குறைக்க மாட்டா

Share

குற்றங்களுக்கான தண்டனைகள் தனித்து குற்றங்களுக்கானவை மட்டுமல்ல. மாறாக, ஏனையவர்கள் குற்றம் செய்யாமல் தடுப்பதற்கும் ஆனது.

எனினும் நம் நாட்டில் குற்றங்களுக்கான தண்டனைகள் மிகக் காலதாமதம் ஆகுவது தான் பல்வேறு சிக்கல்களை தோற்றுவிக்கின்றன.

ஆம், குற்றங்களுக்கான தண்டனைகள் உடனுக்குடன் வழங்கப்பட வேண்டும்.

அப்போது தான் பாதிக்கப்பட்டவர்கள் ஆற்றுப்படுவதுடன் குற்றங்களை இழைத்தால் அது நமக்குத் தண்டனையைப் பெற்றுத்தரும் என்ற மன நிலையையும் ஏற்படுத்தும்.

ஆனால் இலங்கையைப் பொறுத்தவரை குற்றங்களுக்கான தண்டனை கிடைப்பதற்குப் பல ஆண்டுகள் ஆகின்றன.

இவ்வாறான நிலைமைகள் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் குற்றச்சாட்டில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கும் தண்டனை கிடைக்காமல் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்குமான சந்தர்ப்பத்தை ஏற்படுத்துகின்றன.

இது தவிர, உடனுக்குடன் தண்டனை வழங்கப்படாமல் காலதாமதம் செய்வது குற்ற வாளிகள் தொடர்ந்தும் குற்றம் புரிவதற்கு வாய்ப்பளிக்கிறது.

அதேநேரம் குற்றம் செய்து விட்டு சம்பந்தப்பட்டவர்கள் சுதந்திரமாக நடமாடுவது குற்றச் செயல்கள் தொடர்பில் அச்சமற்ற சூழ்நிலையை – மனநிலையை ஏற்படுத் தவே செய்யும்.

இதற்கும் மேலாக, குற்றம் செய்வதற்கான தண்டனைகள் காலதாமதமாகும் போது குறித்த குற்றவாளியால் பாதிக்கப்பட்டவர்கள் அச்சத்துடனும் நிம்மதி இன்றியும் வாழுகின்ற பரிதாபகரமான – பாதுகாப்பற்ற சூழ்நிலையும் உருவாகும்.

எனவே குற்றங்களுக்கான தண்டனைகள் விரைவுபடுத்தப்படும் போது அது ஒட்டுமொத்த குற்றச் செயல்களையும் கடுமையாகக் குறைக்கும் என்பது நிறுதிட்டமான உண்மை.

அந்த வகையில், குற்றங்களை விசாரிப்பதையும் அதற்குரிய தீர்ப்பை வழங்குவதையும் நீதி பரிபாலனம் விரைவுபடுத்த வேண்டும்.

ஆம், 2026 மே தின நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க் குற்ற வழக்குகளை விரைந்து விசாரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனக் கூறியிருந்தார்.

ஆம், இந்த நாட்டில் இடம்பெற்ற மிக மோசமான குற்றங்களுக்கு இன்னமும் தண்டனைகள் கிடைக்கப்படவில்லை.

குறிப்பாக, வன்னி யுத்தத்தில் போர்க் குற்றம் புரிந்தவர்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் இன்னமும் அரசியல் பலத்தோடு வாழ்கிறார்கள்.

அதுபோல இந்த நாட்டில் நடந்த ஈனத்தனமான ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சூத்திர தாரிகள் பற்றி பாராளுமன்றத்தில் அமைச்சர்கள் உரையாற்றி இருந்தாலும் சம்பந்தப்பட்ட வர்களை சிறையில் அடைப்பதற்கு இன்னமும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை – நடவடிக்கை எடுக்கவும் முடியவில்லை.

எனவே குற்றங்களுக்கான தண்டனைகள் உரிய காலத்தில் வழங்கப்பட வேண்டும். இதனை அநுர அரசாங்கம் விரைவுபடுத்தும் என நம்பலாம்.

வலம்புரியின் ஆசிரியர் தலையங்கம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link