31 ஆண்டுகால சிறைவாசம் மீண்டு சாதனை படைத்த பேரறிவாளன்
Share
இந்தியப் பிரதமராக இருந்த ராஜிவ் காந்தியின் கொலைக்குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்டு சிறைத்தண்டனை பெற்ற பேரறிவாளனை அறியாதவர்கள் இருக்க முடியாது.
1991 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் திகதி தமிழகம் வந்திருந்த அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தி தற்கொலைக்குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
இதனையடுத்து முருகன், நளினி, குட்டி சாந்தன், பேரறிவாளன் உட்பட எழுவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
குண்டுத் தாக்குதலைத் திட்டமிட்டவர்களுக்கு பற்றி வாங்கிக்கொடுத்தார் என்ற குற்றச்சாட்டு தமிழகத்தைச் சேர்ந்த பேரறிவாளனுக்கு மரணதண்டனைத் தீர்ப்பைக் கொடுத்தது.
பேரறிவாளனை விசாரணை செய்த அதிகாரி ராஜிவ் காந்தி கொலைச் சம்பவத்தைத் தெரிந்து கொண்டே பேரறிவாளன் சம்பந்தப்பட்டவர்களுக்கு பற்றி வாங்கிக் கொடுத்தார் எனத் தனது விசாரணை அறிக்கையில் முன் மொழிந்திருந்தார்.
எனினும் பேரறிவாளனின் விடுதலைக்காக அவரின் தாயார் அற்புதம்மாள் அகிம்சை வழியில் போராடினார்.
இந்தியத் தலைநகர் டெல்லிக்குச் சென்று அரச தலைவர்களைச் சந்தித்து தன் மகன் நிரபராதி, பற்றியை வாங்கிக் கொடுத்தாரேயன்றி, அதன் நோக்கத்தை அவர் அறிந் திருக்கவில்லை என்பதை அற்புதம்மாள் எங்கும் எடுத்துரைத்தார்.
ஊடகங்கள் வாயிலாகத் தனது மகனுக்கு நீதி கேட்டார். அந்த சமயத்தில் விசாரணை அதிகாரி ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில்; பேரறிவானன் தொடர்பில் தனது அறிக்கை தவறானது என்பதை ஒப்புக் கொண்டதுடன் ராஜிவ் காந்தி கொலை தொடர்பில் பேரறிவாளன் எதுவும் அறிந்திருக்கவில்லை என்று அவர் கூறியதை அறிக்கையில் சேர்க்காமல் விட்டது நான் செய்த தவறு எனக் கூற, தீர்ப்பு வழங்கிய தலைமை நீதிபதியும் தன் தவறை ஒப்புக்கொள்ள, உச்ச நீதிமன்றில் தொடுக்கப்பட்ட மேன்முறையீட்டு வழக்கில் பேரறிவாளன் குற்றமற்றவர் எனத் தீர்ப்பளிக்கப்படுகிறது.
ஆம், 31 ஆண்டுகள் சிறை வாசம் இருந்த பேரறிவாளன் சிறையில் இருந்தபடியே முது மாணிப் பட்டத்தை நிறைவுசெய்தார்.
தொடர்ந்து விடுதலை பெற்ற அவர், சட்டப் படிப்பை மேற்கொண்டு இப்போது சென்னை உயர் நீதிமன்றின் சட்டத்தரணியாகச் சத்தியப் பிரமாணம் செய்துள்ளார் என்ற செய்திக்குள் இருக்கக்கூடிய அபாரமான சாதனையை நாம் ஒருகணம் நினைத்துப் பார்க்க வேண்டும்.
என்ன செய்வது, எங்கள் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட எத்தனையோ முன் னாள் போராளிகள் வீடுகளுக்குள் அமைதியாகி விட்டனர்.
அவர்களை வெளிக்கொணர்ந்து அவர்களை பேரறிவாளன் போல ஆளாக்குவதற்கு எங்களிடம் அற்புதம்மாள் உட்பட எவரும் இருக்கவில்லையெனும் போதுதான் எங்கள் இனத்தின் குறுகிய மனநிலை கண்டு இதயம் நொந்து போகிறது.
வலம்புரியின் ஆசிரியர் தலையங்கம்.


