ஈழத் தமிழர்களின் இதயங்களில் வாழ்கின்ற தேனிசை செல்லப்பா
Share
தேனிசை செல்லப்பா அவர்கள் காலமானார் என்ற செய்தி ஈழத் தமிழர்களுக்குத் தாளாத துயரத்தைத் தருவதாகும்.
ஆம், ஈழத் தமிழ் மக்களை மனம் மெய் மொழிகளால் நேசித்த பெருந்தகை அவர்.
விடுதலைப் போராட்டக் காலத்தில் எங்கள் ஈழத்துப் பாடலாசிரியர்களின் பாடல் வரிகளுக்கு தன் இசையால் உயிர்கொடுத்த தேனிசை செல்லப்பா அதனூடு ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தையும் உத்வேகப்படுத்தினார்.
உண்மை. விடுதலைப் போராட்ட காலத்தில் எங்கள் ஒவ்வொருவரினதும் தனிமைப் பொழுதென்பது தேனிசை செல்லப்பா பாடிய புரட்சிப் பாடல்களை மீளிசைப்பதாக இருந்தது.
அந்தளவு தூரம் எங்கள் விடுதலைப் போராட்டத்துக்கு தேனிசை செல்லப்பா தனது இசை வல்லமையால் பெரும் பங்காற்றினார்.
அவர் பாடிய பாடல்கள் எம் ஈழத் தமிழ் மக்களின் இதயங்களில் இன்னமும் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன.
அவர் தமிழகத்தவராக இருந்தாலும் எங்கள் ஈழத் தமிழர்கள் அவரை தங்களில் ஒருவ ராகவே நேசித்தனர். அதுபோல தேனிசை செல்லப்பாவும் தன்னை ஈழத் தமிழர்களுக் காக அர்ப்பணித்தார்.
உண்மை. தேனிசை செல்லப்பா என்ற பெயர் தமிழகத்தில் அறியப்பட்டதைவிட, ஒட்டுமொத்த ஈழத் தமிழர்களாலும் புலம்பெயர் எம் உறவுகளாலும் அறியப்பட்டதுதான் அதிகம் எனலாம்.
ஒரு காலத்தில் விடுதலைப் புலிகளால் யாழ்ப்பாணம் முற்றவெளியில் முன்னெடுக்கப்பட்ட முத்தமிழ் விழாவில்; தேனிசை செல்லப்பாவின் இசை விருந்தை அள்ளிப்பருக அலையெனத் திரண்ட மக்கள் கூட்டத்தை ஒரு கணம் நினைத்துப் பார்க்கின்றோம்.
தமிழகத்தின் புகழ்பூத்த இசை மேதைகள் பலர் இருந்தனராயினும் தேனிசை செல்லப்பா எங்கள் ஈழத் தமிழ் மக்களை திரிகரண சுத்தியோடு நேசித்தார்.
போரபாயம் இருந்தபோதிலும் தமிழகத்தில் இருந்து நம் யாழ்ப்பாணத்துக்கு வந்தவர்.
தன் தேனிசையால் புரட்சிப் பாடல்களை தமிழ் கூறும் நல்லுலகெங்கும் கொண்டு சென்றவர்.
ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் அவரின் வகிபாகம் தமிழ் மக்களால் ஒரு போதும் மறக்கவும் மறுக்கவும் முடியாதது.
நம் ஈழத் தமிழர்களை நேசித்ததால் அவர் தனது நாட்டில் சட்டரீதியான நடவடிக்கை களுக்கு முகங்கொடுக்க வேண்டியதாயிற்று.
இருந்தும் எந்த இடராயினும் அதனைத் தன் உடன்பிறப்புகளான ஈழத் தமிழர்களுக் காகத் தாங்கிக் கொண்டார்.
சுருங்கக்கூறின் தமிழகத்து உடன்பிறப்புகளில் எங்கள் விடுதலைப் போராட்டத்துக்கு தேனிசை செல்லப்பா தனது இசையால் ஆற்றிய பெரும் பங்கை எங்கள் ஈழத் தமிழர் வரலாறு என்றும் நினைவுபடுத்தும் என்ற செய்தியோடு, ஈழத் தமிழ் மக்களின் இதயபூர்வமான அஞ்சலிகளைத் தேனிசை செல்லப்பா அவர்களுக்குக் காணிக்கையாக்குகின்றோம்.
நீங்கள் இசைத்த அந்தப் பாடல்களினூடு உங்கள் நினைவுகள் ஈழத் தமிழர்களோடு என்றும் உயிர் வாழும் இது சத்தியம்.
வலம்புரியின் ஆசிரியர் தலையங்கம்.


