Type to search

Editorial

கற்றறிந்தவர்கள் செய்யும் அநீதி நாட்டை நிந்தாகுலப்படுத்தும்

Share

கற்றவர்கள் கயவர்களாக இருந்தால் இந்த மண் தாங்காது என்றார் தவத்திரு குன்றக்குடி அடிகளார் ஒருமுறை யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தபோதே இதனை அவர் கூறியிருந்தார்.

ஆம், கற்றவர்கள் கெடுதியாளர்களாக இருப்பார்களாயின் அவர்கள் கெடுதிகளை – தீங்குகளை – ஈனத்தனங்களை கனகச்சிதமாகச் செய்து முடிப்பர்.

அவ்வாறு அவர்கள் மிகவும் நுட்பமாக கெடுதிகளைச் செய்யும்போது, அதனால் அப் பாவி மக்கள் மீட்சிபெற முடியாத அவலத்தை சந்திப்பர்.

அந்த வகையில் கற்றவர்கள் எப்போதும் நல்லவர்களாக – அறம் காப்பவர்களாக இருக்க வேண்டும். அப்போதுதான் இந்த நாடும் இந்த மண்ணும் உய்வு பெறமுடியும்.

ஆனாலும் இலங்கைத் திருநாட்டில் அரசியல் துறையில் கற்றவர்கள் நீதி மிக்கவர்க ளாக – அறத்தைப் பேணுபவர்களாக இருக்கவில்லை.

இதன் காரணமாக இலங்கைத் திருநாட்டில் இனவாதம் மிகுந்து இரத்த ஆறு ஓடியது. எல்லாவற்றுக்கும் மேலாக தமிழின அழிப்பு இந்த மண்ணில் நடந்தாயிற்று.

ஆம், வன்னி யுத்தத்தின் போது அப்பாவி தமிழ் மக்களை மகிந்த அரசு கொன்று குவித்த போது, முட்கம்பி வேலிக்குள் சுமார் மூன்று இலட்சம் தமிழ் மக்களை அடைத்து துன்புறுத்திய போது இது முறையன்று. விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரிவது வேறு. அப்பாவித் தமிழ் மக்களைக் கொன்றழிப்பது வேறு.

அரசாங்கம் என்றால் அது அனைத்து இனத்துக்கும் பொதுவானது.

ஆனால் அர சாங்கமும் படைத்தரப்பும் தங்களை சிங்கள மக்களுக்கு உரியவர்களாகக் காட்டிக் கொண்டு தமிழ் மக்களுக்கு நிந்தகம் செய்கின்றன.

உண்மையில் இலங்கை அரசாங்கம் என்பதும் படைத்தரப்பு என்பதும் தமிழ் மக்களுக்குமானது.

அப்படியாயின் தமிழ் மக்களைக் காப்பாற்றாமல் எப்படி அவர்களின் தலையில் குண்டுகளைப் போட்டுக் கொன்று குவிக்க முடியும் என்று கற்றுணர்ந்த சிங்கள அரசியல்வாதிகள் கேள்வி எழுப்பி இருக்க வேண்டும்.

ஆனால் அவர்கள் மௌனம் காத்தனர். பேச வேண்டியவர்கள் – அறம் அறிந்தவர்கள் பேசாதிருப்பது தான் மிகப்பெரும் கொடுமை.

தவிர, கற்றறிந்த சிங்கள அரசியல்வாதிகள் மௌனம் காத்தனர் என்பதற்கு அப்பால், தமிழின அழிப்பை ஆதரித்து அதற்கு சார்பாக குரல் கொடுத்த சிங்கள அரசியல்வாதிகளும் உளர்.

அவர்களில் முக்கியமானவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் என்பதை எந்த இடத்திலும் சத்தியம் செய்து கூற முடியும்.

ஆம், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சியில் இருந்த பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் பின்னர் மகிந்த ராஜபக்­வுடன் சேர்ந்து தமிழின அழிப்புக்கு பேருதவி புரிந்ததுடன் தமிழின அழிப்பை சர்வதேச சமூகத்தின் மத்தியில் நியாயப்படுத்துகின்ற பிரசாரங்களையும் மேற்கொண்டவர்.

அத்தகைய ஒருவர் தந்தை செல்வாவின் நினைவு தினத்தில் நினைவுப் பேருரை ஆற்றுவது எந்த வகையிலும் நியாயமும் பொருத்தமும் ஆகாது. எனினும் பேராசிரியர் ஜி.எல். பீரிஸை அழைத்து நினைவுப் பேருரை ஆற்றுவதற்கு நம் கற்றறிந்தவர்கள் வழி வகுத்தது அறமும் நீதியும் அன்று.

வலம்புரியின் ஆசிரியர் தலையங்கம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link