டிஜிட்டல் யுகத்திற்கு மாறும் அரச துறை – புதிய சுற்றறிக்கை வெளியீடு!
Share
எரிசக்தி சவால்களுக்கு மத்தியில் அரச சேவையை முறையாக முன்னெடுத்துச் செல்வதற்காக, டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் அரச நிர்வாக அமைச்சுக்கள் இணைந்து தொலைதூர சேவை முறைமை தொடர்பான புதிய வழிகாட்டல்களை அறிமுகப்படுத்தியுள்ளதாக அவ்வமைச்சுக்கள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள அமைதியற்ற சூழ்நிலை மற்றும் அதன் உலகளாவிய பொருளாதார தாக்கங்கள் காரணமாக எரிபொருள் விநியோகத்தில் கட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளதால், அலுவலக சேவைகளை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் முன்னெடுக்க அரசாங்கம் ஏற்கனவே நடவடிக்கை எடுத்திருந்தது.
அதற்கமைய, அரச நிறுவனங்களின் சேவைகளை தொலைதூரத்திலிருந்தே வழங்குவதற்காக டிஜிட்டல் தொழில்நுட்பங்களைச் சிறப்பாகப் பயன்படுத்துவது குறித்த இந்த வழிகாட்டல்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், அரச ஆவணங்களை மின்னணு முறையில் உருவாக்குதல், அங்கீகரித்தல் மற்றும் பரிமாற்றுதல் சட்டபூர்வமானது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஸ்கேன் செய்யப்பட்ட கையொப்பங்கள், டிஜிட்டல் கையொப்பங்கள் அல்லது உத்தியோகபூர்வ மின்னஞ்சல்கள் மூலம் பரிமாறப்படும் ஆவணங்கள் செல்லுபடியாகும் என ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இங்கு அரச நடவடிக்கைகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட meet.gov.lk எனும் இணையவழி வீடியோ மாநாட்டுக் தளம் பிரதான தொடர்பாடல் கருவியாகப் பயன்படுத்தப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதுடன், அவசியமான சந்தர்ப்பங்களில் ஏனைய வணிக ரீதியான தளங்களை மட்டுப்படுத்தப்பட்ட காலத்திற்குப் பயன்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அரச அதிகாரிகளின் டிஜிட்டல் திறன்களை மேம்படுத்தவும், தகவல் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் நடவடிக்கை எடுக்குமாறு திணைக்களத் தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த வழிகாட்டல்களைச் நடைமுறைப்படுத்துவது தொடர்பாக கடந்த (23) ஆம் திகதியிடப்பட்ட 02/2026 ஆம் இலக்கச் சுற்றறிக்கை மூலம் அனைத்துத் தரப்பினருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.


