சேர்ந்து வந்தவர்கள் ஒன்றுபட்டு நிற்பார்களா?
Share
தமிழ் அரசியல் தலைவர்களிடையே ஒற்றுமை அவசியம் என இந்திய உப ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணன் கூறிய விடயம் ஏலவே வெளிவந்திருந்தது.
இந்திய உப ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணன் இலங்கைக்கு வருகை தந்தபோது, தமிழ் அரசியல் தரப்புக்களை கூட்டாகக் கொழும்பில் சந்திருந்தார்.
இதன்போது தமிழ் அரசியல் தலைவர்களிடையே ஒற்றுமை அவசியம் என்பதை அவர வலியுறுத்தினார்.
தமிழ் அரசியல் தலைவர்கள் கூட்டாகச் சென்று இந்திய உப ஜனாதிபதியைச் சந்திருந்தனர்.
அவர்கள் கூட்டாகத் தன்னைச் சந்திருந்தாலும் அவர்களிடையே ஒற்றுமை இல்லை என்பதை இந்திய உப ஜனாதிபதி இராதாகிருஷ்ணன் ஐயம் தெளிவுற அறிந்துள்ளார் என்பது இதிலிருந்து தெளிவாகிறது.
ஆம், நம் அரசியல் தரப்புகளிடையே ஒற்றுமை இல்லை என்பது அகிலம் அறிந்த உண்மை.
தவிர அவர்கள் ஒற்றுமைப்படக்கூடிய வாய்ப்புகளும் இல்லை என்பதும் நிறுதிட்டமான உண்மை.
அதாவது தமிழ் அரசியல் தரப்புகளிடையே ஒற்றுமை அவசியம் என இந்திய உப ஜனாதிபதி கூறிய ஒரு சில மணித்தியாலங்களில் தமிழரசுக் கட்சி சார்ந்த சி.வி.கே.சிவஞானம் ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியும் அது தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வழங்கிய பேட்டியும் முரண்பாடு கொண்டதாகவும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டுவதாகவும் அமைந்திருந்தன.
ஆக, இந்திய உப ஜனாதிபதி சி.பி.இராதா கிருஷ்ணன் அவர்கள் ஒற்றுமையின் அவசியம் பற்றித் தமிழ்த் தரப்புகளிடம் விசேடமாக வலியுறுத்தியதாகக் கூறியிருந்த நிலையில் மறுகணமே தர்க்கம் புரிகின்ற மனநிலையில் நம் தமிழ் அரசியல் தரப்புகள் இருக்கிறதெனில் எங்கள் தமிழ் அரசயிலில் ஒற்றுமை ஏற்படுமா என்ன?
ஆக எங்களிடையே ஒற்றுமை என்பது ஒருபோதும் சாத்தியமாகாது. இதை அறுதியிட் டுக் கூறுவதற்கு இரண்டு ஆதாரங்கள் உள்ளன.
அதில் ஒன்று எங்கள் தமிழ் அரசியல்வாதிகள் தேர்தல் பதவிகளுக்காகவே அரசியலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கப் பதவிகள் மட்டுமே தேவையானவை.
மற்றும்படி அந்த பதவியைப் பெற்றுக் கொள்வதற்காக – தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தமிழ் மக்ளகின் அரசியல் விவகாரங்கள் தேவைப்படுகின்றனவே தவிர தமிழ் மக்கள் உரிமையோடு சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற எண்ணம் அவர்களிடம் மருந்துக்கும் கிடையாது.
இரண்டாவது ஆதாரம் தமிழ் அரசியல் தரப்புகளிடையே ஒற்றுமை ஏற்படுவதற்கு யார் முயற்சி செய்தாலும் அந்த முயற்சியை சிவில் சமூகம் என்ற பெயரால் சிலர் ஆசாட வார்த்தைகளைக் கொட்டித்தள்ளி என்ன பாடு பட்டும் ஒற்றுமையை குலைத்துவிடுவர்.
ஆகவேதான் எங்கள் அரசியலில் ஒற்றுமை என்பது ஒருபோதும் சாத்தியமாகாது என அடித்துக் கூற முடியும்.
வலம்புரியின் ஆசிரியர் தலையங்கம்.


