Type to search

Articles புதுச்சேரிப்பயணம்

புதுச்சேரிப்பயணம் 03

Share

கம்பன் கழகம்

புதுச்சேரிக் கம்பன் கழகம் இந்தியாவிலுள்ள கம்பன் கழகங்களிலெல்லாம் முதன் மையானது. 58 ஆவது கம்பன் விழாவை 2025 ஆம் ஆண்டில் புதுவைக் கம்பன் கழகம் நடத்தி முடித்துள்ளது.

58 ஆண்டுகளாகத் தொடர்ந்து கம்பன் விழாவைச் சிறப்பாக நடத்தி வருகின்ற புதுவைக் கம்பன் கழகத்தின் வளர்ச்சிக்கும் எழுச்சிக்கும் பணியாற்றியவர்கள் பலர்.

அதில் கோவிந்தசாமி முதலியார், தமிழாசிரியர் அருணகிரி, வழக்கறிஞர் முருகேசன் ஆகியோர் முதன் மைக்குரியவர்கள்.

அதிலும் புதுவைக் கம்பன் கழகத்தின் புரவலராக (போசகர்) புதுச்சேரி மாநிலத்தின் முதலமைச்சரே இருப்பார் என்பது கம்பன் கழகத்தின் யாப்பு.

அதேவேளை புதுவைக் கம்பன் கழகத்தின் முக்கிய பதவிகளில் புதுச்சேரிச் சட்டசபை உறுப்பினர்களும் அமைச்சர்களும் இடம் பெறுவதால், புதுவைக் கம்பன் கழகம் ஓர் அரசவைக் கழகம் போலவும் அக்கழகம் நடத்தும் கம்பன் விழா புதுச்சேரி அரசு நடத்துகின்ற விழாப் போலவும் இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆம், புதுச்சேரியின் கம்பன் விழா என்றால் புதுவை நகரம் விழாக்கோலம் பூண்டு விடும்.எங்கும் அலங்காரங்கள். எங்கும் விழா நிகழ்வுகள் அடங்கிய பதாகைகள்.

தவிர, விழா மண்டபத்தின் நுழைவாயிலில் விசேட அலங்காரம் என, புதுவை நகரம் புதுப்பொலிவு கொள்ளும்.

இப்போது கூட புதுவைக் கம்பன் கழகத்தின் செயலாளராகப் பதவி வகிக்கும் வே.பொ.சிவக்கொழுந்து அவர்கள் புதுச்சேரி சட்ட சபையின் முன்னாள் சபா நாயகராக இருந்தவர். கழகத்தின் தலைவராக சு.செல்வ கணபதி உள்ளார்.

கழகத்தின் 58 ஆவது கம்பன் விழா புதுவை நகராட்சி கம்பன் கலையரங் கில் 2025 மே 09, 10, 11 ஆகிய மூன்று தினங்கள் இடம்பெற்றன.

புதுச்சேரிக் கம்பன் விழாவின் பொருட்டே அங்கு செல்லுகின்ற வாய்ப்பு எனக்குக் கிடைக்கப்பெற்றது.

அகில இலங்கைக் கம்பன் கழகத்தின் அமைப்பாளர் இ.ஜெயராஜ் அவர்கள் புதுவைக் கம்பன் விழாவின் முக்கியப் பேச்சாளர். கடந்த காலங்களிலும் அவர் இல்லாத விழா அங்கு இல்லை எனலாம்.

மே 8 ஆம் திகதி அதிகாலைப்பொழுதில் கொழும்பு கட்டுநாயக்க விமான நிலை யத்திற்குச் சென்றோம்.

கம்பவாரிதி இ.ஜெயராஜ் அவர்களுடன் மருத்துவர் ஸ்ரீஇரத்தினகுமார், கம்பநேசன் வாசுதேவா ஆகியோருடன் நானும் சேர்ந்து கொண்டேன்.

விமான நிலையத்திற்குள் நுழைந்த போது விமானப் பயணத்திற்காக நின்றிருந்த நம்மவர்களும் தமிழகத்தவர்களும் கம்பவாரிதியைக் கையெடுத்து வணங்கினர்.

அவருடன் புகைப்படம் எடுப்பதிலும் அவர்கள் காட்டிய ஆர்வம் நம்மை நெகிழ வைத்தது.

இதையும் கடந்து விமான நிலைய உத்தியோகத்தர்கள் கூடக் கம்பவாரிதிக்கு தங்க ளின் மானசிகமான மரியாதையை தங்கள் முகபாவனை மூலம் வெளிப்படுத்தி நின் றதையும் அங்கு காண முடிந்தது.

மழை காரணமாக விமானம் உரிய நேரத்திற்குப் புறப்படவில்லை.

அதிகாலையில் தொடங்கிய விமானப் பயணப்பொழுது முற்பகல் 11 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் நிறைவுக்கு வந்தது.

என்னே ஆச்சரியம். சென்னை விமான நிலையத்திலும் கம்பவாரிதி இ.ஜெயராஜ் அவர்களுக்கு மிகுந்த மதிப்பு. கூடவே அவருடன் புகைப்படம் எடுக்கும் தங்களின் விருப்பத்தை மிக வும் பௌவ்யமாகக் கம்பவாரிதியிடம் கூற, அவரும் பெருந்தன்மையோடு அதனை ஏற்றுக்கொண்டார்.

விமான நிலையத்தில் இருந்து எங்களை ஏற்றிச் செல்வதற்கான வாகனம் நீண்ட நேரமாகக் காத்திருந்தது.

புதுவை முன்னாள் சட்ட சபை சபாநாயகர் சிவக் கொழுந்து அவர்கள் அனுப்பி வைத்த வாகனத்தின் சாரதி சரவணன் கம்பவாரிதிக்கு ஏலவே பரீட்சயமானவர்.

இதையும் கடந்து கம்பவாரிதி இ.ஜெயராஜ் அவர்கள் புதுவைக் கம்பன் விழாவிற்கு வருகிறார் என்ற செய்தியறிந்து கம்பவாரிதியின் மீளாத் தொண்டர்கள் சென்னை விமான நிலையத்திற்கு வந்திருந்தனர்.

இதில் சென்னை உயர் வள்ளுவம் அறக்கட்டளையைச் சேர்ந்த தாமோதரன் அவர்கள் முக்கியமானவர். கம்பன் விழா முடியும் வரை கம்பவாரிதிக்கு உற்ற உதவியாக அவர் இருந்தார்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து சுமார் மூன்று மணிநேரப் பயணத்தில் புதுச் சேரியை அடைய முடிந்தது.

வாகன சாரதி சரவணனிடம் இருந்த தொழில் நிதானம், அடக்கம், கம்பவாரிதி மீது அவர் கொண்ட பக்தி என்பவற்றை எல்லாம் கண்ணுற்ற போது மனம் உருகிப்போனது.

புதுச்சேரி நகராட்சியில் அண்ணாசாலையில் உள்ள ராம் விடுதியில் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கம்பவாரிதி அங்கு வருவதற்கு முன்னதாகவே அவரின் தொண்டர்கள் அங்கு வந்து காத்திருநதனர்.

கம்பவாரிதியைக் கண்டதும் அவரின் காலில் சாஸ்டாங்கமாக விழுந்து வணங்கினார்கள்.

ஆம், தனது குருநாதர் விசுவாமித்திரரின் யாகத்திற்குத் துணையாக இராமபிரான் சென்றார் என்பதை கம்பராமாயணத்தில் கற்றிருந்தாலும் கம்பவாரிதியின் தொண்டர்கள் அவர் மீது கொண்ட அளவு கடந்த அன்பையும் அவருக்குப் பணி விடை செய்வதைத் தமது பேறாகக் கருதியதையும் பார்த்த போது, யார் பெறுவார் இப்பெருமை என்றே எண்ணத் தோன்றியது.

கூடவே கம்பவாரிதி அவர்கள் வந்து சேர்ந்த சில மணித்துளிகளில் புதுவைக் கம்பன் கழகத்தின் பொதுச் செயலாளரும் முன்னாள் சட்டசபை சபாநாயகருமான வே.பொ.சிவக்கொழுந்து அவர்கள் நேரில் வந்து கம்பவாரிதியைச் சந்தித்தார்.

அவருடன் பிரமுகர்கள் சிலரும் அங்கு வந்திருந்தார்கள்.

தொடரும்…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link