புதுச்சேரிப்பயணம் 02
Share
நகர்ச்சிறப்பு
காப்பியங்களைப் படைக்கின்றவர்கள் நகர்ச்சிறப்புப் பற்றி தமது பரிந்துரையை முன்வைப்பது வழக்கம்.
இவ்வாறு நகர்ச்சிறப்பைக் கூறுவதன் மூலம் அந்தப் பிரதேசத்தின் மகிமையும் பெருமையும் வெளிப்படுத்தப்படும்.
அந்த வகையில் சுமார் 200 ஆண்டுகள் பிரெஞ்சுக்காரர்களின் ஆட்சி அதிகாரத்திற் குள் இருந்த புதுச்சேரியின் நகர்ச் சிறப்பைக் கூறுவதற்குப் பஞ்சமில்லை எனலாம்.
அந்தளவிற்கு புதுச்சேரி பல்வகைப் பெருமைகளையும் தகைமைகளையும் தன்னகத்தே கொண்டமைந்த மாநிலம்.
ஆம், வள்ளுவப்பெருமான் கூறியது போல தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு என்பதற்குச் சான்றாக விளங்குவது புதுச்சேரி.
குறைவில்லாத விளைபொருட்களும் நடு நிலையாளர்களும் குறைவில்லாத செல்வந் தர்களும் ஒருங்கே அமையப்பெற்ற மாநிலமாகப் புதுச்சேரியை நாம் பார்க்க முடியும்.
தனவந்தர்களும் தமிழ் வளர்க்கும் ஆர்வலர்களும் குன்றாத விளைபொருளும் கொண்டமைந்த புதுச்சேரி, பாவேந்தன் பாரதிதாசனை நமக்குத்தந்த மண்.
அதுமட்டுமல்ல, மகாகவி பாரதியார் பத்து ஆண்டுகள் புதுச்சேரியில் தஞ்சம் புகுந்திருந்தார் எனும் போது, பெரும்புலவன் சுப்பிரமணிய பாரதியாரைக் காப்பாற்றித் தந்த மண் என்ற பெருமையும் புதுவைக்கு உண்டு.
இது பற்றி இக்கட்டுரையின் பிற்பகுதியில் நாம் பிரஸ்தாபிக்கலாம்.
இப்போது, புதுச்சேரியின் நகர்ச் சிறப்புக்குப் பெருமை சேர்ப்பதாக பிரெஞ்சுக்காரர்களின் கட்டட அமைப்பும் வீதிகளின் நிர்மாணிப்பும் அமைந்துள்ளன.
பொதுவில் பிரெஞ்சுக் கட்டடக்கலை அம்சங்களைக் கொண்டமைந்த, மிக நீண்டதும் நெடியதுமான கட்டடங்கள் புதுவையின் பெரும் புகழுக்குப் பெருமை சேர்ப்பதாகும்.
அதிலும் புதுவையில் உள்ள பிரான்சிய தூதுவராலயம் அமைந்த இடத்திற்குச் செல்கின்ற போது நாம் எங்கு நிற்கின்றோம் என்ற கேள்வி மனதில் எழுவதை உணரமுடியும். அந்த அளவிற்கு புதுவையில் அமைந்த பிரான்சியக் கட்டுமானத்தின் நுட்பங்கள் மனதை ஈர்க்கவல்லன.
தவிர, புதுச்சேரியில் அமைந்த வீதிகள் வளைவு நெளிவு இன்றி மிகவும் நேரியதாக அமைந்திருப்பது அங்கு நடந்த பிரெஞ்சுக்காரர்களின் ஆட்சியின் நேர்மையைச் சுட்டிநிற்கிறதோ என்று எண்ணத் தோன்றும்.
அதிலும், புதுச்சேரியின் கடற்கரையோரமாக அமையப்பெற்ற அரச நிர்வாகக் கட்டுமானங்கள், தலைமைச் செயலகம், முதலமைச்சரின் அலுவலகம் என்பன அமைதியாக இயங்குகின்ற பாங்கில், புதுச்சேரியின் அரச நிர்வாகம் அறத்துடன் நடந்தாகுவது உறுதியாகிறது.
அதேவேளை உல்லாச விடுதிகளுக்கும் புதுவையில் குறைவில்லை என்பதால், உள் நாட்டவர்களை மட்டுமன்றி, வெளிநாட்டவர்களையும் ஈர்த்தெடுக்கின்ற மாநிலமாக புதுவை மிளிர்கிறது.
இதையும் கடந்து இப்போதும் பிரான்ஸ் நாட்டின் ஈடுபாடும் அந்த நாட்டவர்களின் வருகையும் தொடர்வதுடன் புதுச்சேரியின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழ்கின்ற வர்களுக்கு எந்தவித நிபந்தனைகளும் இல்லாமல் பிரான்ஸ் நாடு விசா வழங்குகின்ற நடைமுறைகளும் உண்டு.
இவ்வாறாக பிரான்ஸ் நாட்டுத் தொடர்புகளை இப்போதும் பேணிக்கொள்கின்ற புதுச்சேரி தமிழ் வளர்க்கும் பெரும் பணியையும் குறைவின்றி செய்து வருவது தான் அதன் அற்புதம் எனலாம். இங்குதான் புதுச்சேரி கம்பன் கழகத்தின் தமிழ்ப்பணி கண்டு வியக்காமல் இருக்க முடியாது.
தொடரும்…


