ஆச்சி அறிவுரை
Share
கைவிசேடம் எனும் பெயரில் கடைக்காரர் செய்யும் காரியம் பேராண்டி…
பாட்டியின்ர இனிய புதுவருட வாழ்த்துக்கள். இந்த முறை வருஷம் ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியான முறையில் நடந்து முடிஞ்சிருக்குது.
பேராண்டி நீ கவனிச்சியோ, இந்த வருஷம் வெடி கொழுத்தினது வலு குறைவா இருந்தது. பொருளாதார நிலையோ என்னவோ தேவையில்லாமல் வெடி வெடிக்கிறது சூழலுக்குப் பாதிப்பே ஒளிய, அதால ஏதும் நன்மை இல்லை.
தொடர்ந்து இப்பிடியே இருந்தால் பணச் செலவும் இல்லை. சூழலுக்குப் பாதிப்பும் இல்லை. வருஷம் பிறப்பிற்கு நிறையப் பலகாரம் செய்து கொம்மா குடுத்தனுப்பினவள். லட்டு, பயத்தம் பணியாரம், வெட்டுப் பலகாரம், அச்சுப் பலகாரம், தட்டை வடை எல்லாம் நல்ல சுவை.
இப்ப கனபேரின்ர வீட்டில இந்தப் பலகாரங்கள் செய்யிறதில்லை. கேக், கேசரி, பூந்தி லட்டு, பால் கோவா இப்பிடியானதுகளை கடையில வாங்கி பரிமாறுகினம்.
கடையில வாங்கி சாப்பிடுறதில குடும்ப அன்னியோன்யம் பெருகுமே. வீட்டில பலகாரம் செய்தால் அது எல்லாரும் ஒண்டுகூடி ஒற்றுமையா, கூட்டு முயற்சியா, ஆரோக்கியமாச் செய்யிறதா இருக்கும்.
இதுகளைப் புரியாமல் காசு இருக்குதெண்டு, எல்லாத்துக்கும் காசை விசுக்கிறதால எதுவும் நடக்காது.
ஏன், இப்ப கோயில்களில பிரசாதத்துக்குப் பதிலா கேசரி, பால் கோவா, பூந்தி லட்டு, சிச்சற் போன்றவற்றைப் படைக்கினம் பேராண்டி.
முதலில பிரசாதம் எண்டுறது என்ன எண்டுறதைத் தெரிஞ்சுகொள்ள வேணும்.
அதைவிட்டுட்டு கடவுள்தானே. கடவுளுக்கு என்னத்தை வைச்சாலும் ஏற்பார் எண்டு விதண்டாவாதம் பேசக்கூடாது.
கைவிசேடம் வழங்கிறது எவ்வளவு சம்பிரதாயபூர்வமான விசயம். நல்ல நேரம் பார்த்து பெரியவர்களிட்ட கைவிசேடம் வாங்கினால் அவையின்ர ஆசீர்வாதம் எப்பவும் இருக்கும் எண்டுறதோட அந்த வருஷம் சிறப்பா இருக்கும் எண்டுற நம்பிக்கை.
இப்ப கைவிசேடம் வர்த்தகமாப் போச்சுது. பேராண்டி யாழ்ப்பாணத்தில சில கடைக்காரர் கைவிசேடம் கொடுக்கிற முறையைப் பார்த்தால் ஏன்தான் இப்பிடியோ எண்டிருக்கும்.
ஓம், பேராண்டி. கடையின்ர இரும்புக் கதவைப் பூட்டிப்போட்டு அதுக்குளால கைவிசேடம் கொடுப்பினம். அதை வாங்கிறதுக்கு சனம் வரிசையில நிற்கும்.
வரிசையைக் குழப்புற ஆக்களைப் பார்த்து, கண்டிக்கிறதுக்கும்
உனக்கு கைவிசேடம் இல்லை எண்டு கலைக்கிறதுக்கும் இரண்டு மூண்டு பேர் நியமிக்கப்பட்டிருப்பினம்.
இதைக் காசுத் திமிர் எண்டு சொல்லாமல் வேற ஏதும் சொல்லேலுமே?
கடவுள் ஏதோ நாலு காசு உழைக்க வழி செய்திருக்கிறான் தானே. அதை ஏழைகளுக்குக் குடுக்கப் போறியெண்டால், அதுக்கெண்டொரு முறை யிருக்குத்தானே.
அதைவிட்டுட்டு ஆடு, மாடு மாதிரி மனிசரை அதுவும் ஏழைகளை நடத்துறது ஒருநாளும் ஏற்க முடியாது.
இதைச் சொல்ல கனபேருக்குச் சுட்டுக்கொண்டு வரும். வந்தென்ன செய்ய. உண்மை ஒருநாளும் உறங்காது. அவ்வளவுதான் பேராண்டி.
ஆச்சி வருவா…


